அய்.நா. மனித உரிமை ஆணையர், சையத் அல் உசேன், கடந்த வாரம், தமிழ் ஈழப் பகுதிகளுக்கு நேரில் சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், தமிழர் அமைப்பினரையும் நேரில் சந்தித்திருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரும் அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேசுவரன், ஆணையரை சந்தித்து சிங்கள அரசால் நீண்டகாலமாக சிறைபடுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட இனப்படுகொலையின்போது ‘காணாமல்’ போனவர்களின் உறவினர்கள் அவர்களின் உருவப் படங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் ‘நலன்புரி நிலையம்’ என்ற உதவி மய்யத்தில் தமிழர்களை ஆணையர் சந்தித்துள்ளார். அப்போது போரில் பாதிப்புற்று, சொந்தப் பகுதிகளுக்கு திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்கள், “எங்களுக்கு விமான நிலையமும் வேண்டாம்; துறைமுகமும் வேண்டாம்; எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்திடமிருந்து மீட்டுத் தாருங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும், நேர்மையான மறுவாழ்வுக்கும் இலங்கை அரசுக்கும் அய்.நா. மனித உரிமை ஆணையர் அழுத்தம் தர வேண்டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு சபை (ஹஅநேளவல ஐவேநசயேவiடியேட) வலியுறுத்தியிருக்கிறது. முன்னாள் இந்திய நீதிபதி ஏ.பி.ஷா உள்ளிட்ட சர்வதேச சட்ட நிபுணர்கள் அய்.நா. மனித உரிமை தலைவருக்கு  திறந்த கடிதம் ஒன்றை விரிவாக எழுதியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் போர்க் குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கும்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்கச் செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.

இதே காலத்தில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இலங்கைப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சர் சுஷ்மா, நாடாளு மன்றத்தில் சிங்கள ஆட்சிக்கு ஆதரவு தரும் தமிழர் அரசியல் கட்சித் தலைவர்களை மட்டுமே சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளி வந்துள்ளன. போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர் சந்திக்கவில்லை. வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் சந்திப்பையும் சுஷ்மா இரத்து செய்துவிட்டார். தமிழ் தேசிய கூட்டணியின் அண்மைக்கால அரசியல் செயல்பாடுகளில் உடன்பாடு இன்றி வடக்கு மாகாண முதல்வர் ஒதுங்கி யிருப்பதோடு, யாழ்ப்பாணத்தில் ‘மக்கள் பேரவை’ என்ற அரசியல் சார்பற்ற அமைப்பு ஒன்றை தொடங்கியிருக்கிறார். தமிழ் மருத்துவர்கள், வழக்கறிஞர் கள், சிந்தனையாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். வடக்கு மாகாண சட்டசபையில் இரண்டு வரலாற்று முக்கியத்துவமான தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறார். தமிழர்கள் மீதான போர்க் குற்றங்கள், பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று, தமிழர்கள் மீது இலங்கை நடத்தியது இனப்படுகொலையே என்பதாகும்.

தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாகாண ஆட்சியின் இந்தத் தீர்மானமே தமிழர்களின் ஒருமித்த கருத்து என்பதற்கான சான்றாவணமாகும்.

இந்த நிலையில் இலங்கைக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளது, அந்த அரசு! ‘சுதந்திராக் கட்சி’யின் மத்திய குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, “புதிதாக இயற்றப்படும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி அமைப்புக்கு இடமில்லை” என்று கூறியிருக்கிறார். இப்போது நடக்கும் ஒற்றை ஆட்சி என்ற தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் அரசியலமைப்பே நீடிக்கும் என்று சிங்களம் இதன் மூலம் அறிவித்திருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு அந்த மக்களுக்கான இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குவதுதான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதற்கான வரலாற்று புவியியல் அரசியல் நியாயங்கள் தமிழர்களுக்கு இருக்கிறது. என்றாலும், இதை நோக்கிய அரசியல் முன்னெடுப்புக்கு பல நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதையும் கவனத்தில் நிறுத்த வேண்டியிருக்கிறது. ‘தேசிய சுயநிர்ணய உரிமையை’ ஏற்கும் அய்.நா. மன்றம் அதை மேலும் செழுமையாக்கி, ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’, ‘வெளியக சுயநிர்ணய உரிமை’ என்ற அரசியல் கோட்பாடுகளையும் வரையறை செய்திருக்கிறது.

தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனும், தனது “மாவீரர் நாள்” உரைகளில், சர்வதேச சட்டங்களின் மொழிகளிலேயே தமிழ் ஈழ விடுதலைக்கான முன்மொழிவுகளை வலியுறுத்தி வந்திருப்பதை அவரது உரையை ஆழ்ந்து படிப்பவர்கள் உணர முடியும். நார்வே தலையீட்டால் போர் நிறுத்தம் உருவாகி, இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தபோது 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் சார்பில், அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தத் தீர்வு திட்டத்தை உலக நாடுகள் பாராட்டி வரவேற்றதோடு, பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அன்றைய இலங்கை அயலுறவு அமைச்சர் ஜி.எஸ். பெரீஸ் தலைமையிலான குழுவும் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இலங்கையின் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாகும் சூழலில், கூட்டாட்சி அமைப்பை முற்றாக மறுக்கும் சிங்கள அரசுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடியை உருவாக்கி, அதன் பேரின வெறி முகத்தை அம்பலப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் முன் வைத்த தீர்வுத் திட்டத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து சர்வதேசத் தமிழினம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும். சிங்களம் அதை மறுத்திடும் நிலையில் அது, பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும். போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, உள்ளக சுயநிர்ணய உரிமைக்கான தீர்வுத் திட்டம், பொது வாக்கெடுப்பு என்ற அரசியல் படிக்கட்டுகளில் முன்னேறிச் செல்லும் நகர்வுகளுக்கான திட்டமிடல்களை உருவாக்கி, அது உலகத் தமிழர்களின் குரலாக ஒழுங்கமைக்கப்பட வேண்டிய வரலாற்றுத் தேவை உருவாகியிருப்பதாகவே கருதுகிறோம்.

இந்த திசை வழியில் இலங்கைப் பேரினவாத ஆட்சிக்கு அழுத்தங்களை உருவாக்கவும், சர்வதேச அரங்குகளில் ஆதரவைத் திரட்டுவதற்கான அரசியல் காரணிகளை முன் வைத்துப் போராட்டங்களை முன்னெடுக்கவுமான தருணம் இது. உணர்ச்சிகளால் உந்தப்படும் முழக்கங்கள் மட்டுமே தீர்வுகளை நோக்கிய முன் நகர்வுகளுக்குப் பயன்படாது என்பதை கவலையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.