மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்தில் இப்போது ஒன்றிய அரசு மனு போட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசு தங்கள் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. இதுவரை இந்த பிரச்சனையில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்த பாரதிய ஜனதா கட்சி இப்போது உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து தன்னுடைய கருத்து என்ன என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது.

'இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலின, பழங்குடியின பிரிவினர் எண்ணிக்கை மட்டும் தான் எடுக்கப்படும்; ஏனைய எந்த ஜாதிப் பிரிவினருடைய எண்ணிக்கையும் இதில் இடம்பெறாது; அது நிர்வாக வசதியும் இல்லை; அது நாட்டுக்கு ஆபத்தானது; எந்த ஜாதிப் பிரிவினர் பற்றிய தகவல்களும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெறக் கூடாது என்பது ஒன்றிய ஆட்சியினுடைய கொள்கை ரீதியான முடிவு' என்று திட்டவட்டமாக இந்த மனுவில் ஒன்றிய ஆட்சி அறிவித்து விட்டது.

மகாராஷ்டிர மாநில அரசு மற்றொரு கோரிக்கையை தனது மனுவில் விடுத்திருந்தது. 2011ம் ஆண்டு சமூக பொருளாதார அடிப்படையிலும், ஜாதிய அடிப்படையிலும் ஒரு கணக்கெடுப்பு நாட்டில் நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பு விவரங்களையாவது இப்போது வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிரா விடுத்த கோரிக்கையையும் ஒன்றிய அரசு இப்போது அதை வெளியிட முடியாது என்று நிராகரித்து விட்டது. அதற்கு சொல்லுகிற காரணம் அப்போது நடத்தப்பட்டது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கணக்கெடுப்பு அல்ல, நாட்டின் சமூக பொருளாதார வாழ்க்கையில் ஒவ்வொரு ஜாதியினரும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, அந்த கணக்கெடுப்பை இப்போது வெளியிட்டால் அது இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் நேர்மைக்கே மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கிவிடும். எனவே அந்த தரவுகளை பயன்படுத்தவே கூடாது என்று நாங்கள் அப்படியே கிடப்பில் போட்டு விட்டோம் என்று ஒன்றிய ஆட்சி இப்போது பதில் கூறிவிட்டது.

ஆக இவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து அதன் வழியாக எந்த மக்கள் எந்தெந்த வேலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு தயாராக இல்லை. ஆனால் ஜாதி அமைப்பு மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாதி சங்க தலைவர்களைப் பிடித்து ஜாதி வாக்குகளை இந்துத்துவ வாக்கு வங்கிகளாக மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையும் இவர்களிடம் கிடையாது. உயர் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் ஏழைகளாக இருந்தால் 10% இட ஒதுக்கீடு என்று அறிவிப்பார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் எண்ணிக்கையை கண்டறிந்து அவர்கள் எந்த நிலையில் சமூகத்தில், அரசியலில், பொருளாதாரத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கான மேம்பாட்டு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் உண்மைகள் வெளிவந்துவிடும். ஆதிக்க சாதிகள், பார்ப்பனர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் உயர் பதவிகளை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகிவிடும் என்பதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பிற்படுத்தப்பட்டவர்களுடைய ஜாதி வாரியான கணக்கெடுப்பை இவர்கள் எடுப்பதற்கு தயங்குகிறார்கள். இந்த ரெட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நாடாளுமுன்றத்தில் அளித்த உறுதிமொழியை இப்போது அவர்களே கைவிட்டு விட்டார்கள்.

- விடுதலை இராசேந்திரன்