அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று கதை பேசும், கரையோரத்துக் காவலனான பிள்ளையார் கோயில். இருள் கொண்ட நேரத்திலும் இரகசியம் பேசாத அலைகளின் கரைகாணும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள். அன்றொருநாள் சுனாமியாய் வந்ததிற்காய் நிரந்தரமாய்க் கோபித்துக் கொள்ளாத மனிதர்கள் என்றும்போல் இன்றும் மறந்து மன்னித்து, அவளிடமே சென்று சிலாகித்து கால் கழுவிவரும் முறியாத உறவுகள். ஆயுள் முற்றி ஆவிவிடும் தருணத்தில் வந்துவிட்ட அன்றைய நாளை உணர்ந்து கொண்ட வாகனங்களின் அவசரம். யாழ் செல்லும் சொகுசு வண்டிகளின் அணிவகுப்பு இருகரைகளையும் அடைத்துக் கொண்டதால் சாலைப் போக்குவரத்தில் வாகனங்கள் மூச்சுவிட முடியாத அவதி. நிறுத்தி இருக்கும் சொகுசு வண்டிகளை அடையாளம் கண்டு அவசரமாய் வந்து ஏறிக்கொள்ளும் பயணிகளின் பரபரப்பு.

'சீசைட் பிள்ளையார் கோயிலும்’ அதைச் சுற்றி போட்டிக்கு நிற்கும் சொகுசு வண்டிகளும் யாழ்ப்பாணத்தை மோப்பம்பிடிக்க வெறிகொண்டவர்களுக்கு திறவுகோலாகிவிட்ட ஒன்று. ஆயிரமாயிரமாய்க் கொடுத்து ஆகாயத்தால் பறந்தவர்களுக்கு ஆயிரத்தோடு தரையால் போகும் அரிய வரப்பிரசாதம். நானும் மோப்ப நாயாக... எப்போதோ பார்த்ததை, சடுதியாக இழந்ததை மீண்டும் பார்த்து விடவேண்டும் என்கின்ற வெறியோடு... ஏற்கனவே அனுமதிசீட்டைப் பெற்றிருந்த ஒரு சொகுசு வண்டிக்குள் அவசரமாக என்னையும் திணித்துக் கொண்டேன்.

உள்ளே ஊதுபத்தியும் பக்திப்பாடலும் நான் மறந்து போய்விட்ட தடங்களை மீண்டும் ஞாபகப்படுத்த, நல்லூர்க் கந்தனும் எங்கள் ஊர் முருகனும் மீண்டும் என்கண்ணில் நிழலாட, மாண்டு போன அந்த இன்பங்களை எண்ணி மீண்டும் ஒரு பெருமூச்சு என்னையும் அறியாது புறப்படலாயிற்று. முன்னுக்கு இருந்த பிரயாணி தானே முதலில் பஸ்சில் கால் வைத்தவர் என்பதை சந்திரனில் கால் வைத்த பெருமையில்கூறி தான் சரியான வண்டியில் ஏறிவிட்டதாக உறுதிப்படுத்தும் வகையில் கைத் தொலைபேசியில் தனது முகவருக்கு திடமாக கூறிக்கொண்டு இருந்தார். கறுப்புக் கண்ணாடி கடல்காற்றை உள்ளே விடமாட்டேன் என்று அடம்பிடிக்க புழுக்கம் வியர்வை முத்துக்களை பிரசவிக்க, பொறுக்க முடியாதவனாய் பஸ்சைவிட்டு இறங்கி வெளியே நின்றேன். தெருவையும் கடலையும் பிரித்து நின்ற தண்டவாளங்கள் நாட்டில் இருக்கும் இரு இனங்களைப் போன்று இணையவும் முடியாமல் பிரியவும் முடியாமால் சாமாந்தரப் பயணிப்பில் சலிப்புக் கொண்டாலும் கொள்ளாதவர்களாக...

சிறிது நேரத்தில் ஒரு குடும்பமும் வந்து அதே பேருந்தில் ஏறினார்கள். முப்பது வயது மதிக்கத் தக்க அந்த இளைஞ்னை நான் ஒரு முறை பார்த்தேன். சுருட்டப்பட்ட முடி, காதணி கொண்ட காதுகள், மெல்லிய வென்னியனில் " Swiss man" என எழுதப்பட்ட அடையாளம், அணிந்து இருந்த டெனிமின் இறுகிய பிடிப்பு, அவன் காலில் விலை மதிப்பான காலணி, கையிலே சுவிஸ் கடிகாரம், கழுத்திலே தங்கச் சங்கிலி, முதுகிலே பெரிய பையொன்றுமாக, சோளக்காட்டில் புகுந்த யானையாக அவன் உள்ளே போய்க் கொண்டு இருந்தான். அவனைத் தொடர்ந்து அவனது குடும்பமும் அவசரமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. அந்தக் குடும்பத்தைத் தொடர்ந்து நானும் நேரம் நெருங்குவதால் பிரிய முடியாத கடல் காற்றிற்கு பிரியாவிடை கொடுத்து வண்டியில் ஏறினேன். வண்டிக்குள் சென்ற இளைஞன் தனது பொதியை வன்முறையைப் பாவித்து அடைந்து வைத்துவிட்டு நின்று நெளிந்தான். பின்பு 'ஏசியப் போடுங்கண்ண" எனக் கத்தினான். முன்னுக்கு இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நடத்துனர் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அனுமதிப் பத்திரங்களைச் சரிபார்ப்பதில் மீண்டும் ஒன்றிப் போனார். வருபவர்களும், வண்டிக்குள் ஏறுபவர்களும், ஆசனத்தைச் சரிபார்ப்பவர்களும், பிழையான வண்டியில் ஏறி இருந்ததிற்காய் திருப்பி நடத்துனரால் அனுப்பப் படுபவர்களுமாய் அலங்கோலப்படும் சிறிய சந்தைக்குள் அகப்பட்டதான உணர்வில் நான் எதுவும் செய்யமுடியாதவனாய் ஆசனத்தில் அமர்ந்து இருந்தேன்.

'இது ஒரு பிச்சைக்காற நாடு எதுவும் ஒழுங்காக நடக்காது. வெள்ளைக்காறன்ர நாடு எண்டாலும் நாடுதான். எல்லாம் நேரத்துக்குச் சொல்லி வைச்சதுமாதிரி நடக்கும்." அந்த இளைஞன் பக்கத்தில் இருந்தவரோடு பெரிதாக கதைத்தான். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் அவனைக் காட்டி கண் சைகை செய்து வாயைப் பிதுக்கிக் காட்டினார். நானும் அவருக்கு கண்பாசை காட்டிவிட்டுப் பேசாது இருந்தேன்.

பக்கத்து ஆசனத்தில் இருந்தவர் என்னை விடுவதாய் இல்லை. 'பார்த்தீங்களே சுவிஸ்காறர் நெஞ்சிலேயே எழுதிக் கொண்டு வந்து இருக்கிறார். காதில தொங்கட்டான், கழுத்தில தங்கச் சங்கிலி, குடும்பியும் வைச்சிருந்தா ஆணைப் பெண்ணாக்கி, பெண்ணை ஆணாக்கி இருக்கலாம். அற்பனுக்கு பவுசு வந்தமாதிரியெல்லே இந்த ஆட்டம் எல்லாம் இருக்குது"

நான் சிரித்தேன்.

'என்ன நீங்கள் வாய் துறக்கிறியள் இல்லை." பொறுக்க முடியாதவராய் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

'இல்ல மௌனம் கனகராசி எண்டுவினம். எங்களுக்கு இருக்கிற சோலிக்கே விடைதெரியாது. எதுக்கு மற்றைவையின்ர சோலி எண்டுதான்...?"

'அது நல்ல புத்திதான். நானும் அப்பிடி இருக்கோணும் எண்டுதான் நினைக்கிறவன். ஆனா அப்பிடி இருக்க விடுகிறான்கள் இல்லைத் தம்பி. என்ர வீட்டில ஒருத்தன் குந்திக் கொண்டு இருக்கிறான். வேலை வெட்டிக்குப் போவென்ரா எண்டு கேட்டா வெளிநாடு போறதுதான் என்ர வேலை எண்டு சொல்லிக் கொண்டு, ஊரளந்து கொண்டு இருக்கிறான். இப்பிடி யாரும் நெஞ்சில எழுதிக்கொண்டு வந்தா அவனுக்கெல்லாம் பித்தம் தலைக்கேறி விசர் பிடிச்சிடும். பிறகு தெருத்தெருவா அலைஞ்சு திரிவான். போனவங்கள் போனவங்களாகவே இருக்காமல் ஏன் திரும்பி வந்து இருக்கிறதுகளையும் குழப்போணும், சொல்லுங்கோ தம்பி?"

எனக்கு அவர்கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை. நானே குற்றவாளியாக இருந்துகொண்டு தீர்ப்பு சொல்ல முடியுமா என்பது புரியவில்லை. என்றாலும் அவரைச் சமாளிக்கும் விதமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவனாக,

'நீங்கள் சொல்லுறதும் உண்மைதான் அண்ணை. அங்க கோப்பை கழுவிகினமோ கக்கூசு கழுவிகினமோ இங்கை வரேக்கையாவதும் உந்த நெஞ்சில எழுதுறதையும் நெளிப்பு காட்டுறதையும் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் தான். உங்கட ஆதங்கத்திலையும் சத்தியமா நியாயம் இருக்கத்தான் செய்யுது. ஆனா மனிசர் எண்டா இப்பிடித்தான் நாலுவிதமாயும் இருப்பினம் அண்ண. ஒண்டு ஒழுங்காப் போகும் இன்னொண்டு குறுக்கால இழுத்துக் கொண்டு போகும். அதுதானே இயற்கை."
 
'அதுவும் செரிதான் தம்பி. இவையெல்லாம் கஷ்ரப்பட்டுத்தானே காசு உழைக்கினம். அதைக் கவனமாகத்தானே செலவழிக்கோணும். அதைவிட்டிட்டு மெசினில அடிச்சாறமாதிரி கடனுக்குக் காட்டில எடுத்து விளையாட்டுக் காட்டினால் வாயப்பிளக்கிற அப்பாவிகளுக்கு பைத்தியம் பிடிக்கத்தானே செய்யும். அந்த நேரம் நடந்து திரிஞ்ச தூரம் எல்லாம் இப்ப பஸ்சில போகக்கூட அவைக்கு அவமானமாய்ப் போயிட்டுது. ஓட்டோவும் ரக்சி வேணும் எண்டெல்லே நிக்கினம். இவங்கட ஆட்டத்தைப் பார்த்துப்போட்டு தோட்டம் துறவுக்குப் போக வேண்டியதுகள் எல்லாம் பகல்கனவு கண்டுகொண்டு திரியுதுகள். கேட்டா வெளிநாடு போறதுதான் எங்கட வேலையெண்டுதுகள். அவர் மீண்டும் புலம்பினார்.

'அண்ண ஏசியக் கூட்டுங்கோ" அந்த இளைஞன் கத்தினான். பக்கத்தில் இருந்தவர் கண்ணை விரித்து தனது அதிருப்தியைக் காட்டினார். எதுவும் புரியாத சிங்களச்சாரதி இன்னும் அதிகமாக வேகத்தைக்கூட்டி பயணிகளை இருக்கையில் இருந்து எழாதவாறு பார்த்துக் கொண்டான்.

'றோட்டே இல்லை, ஐயோ என்ன ஓட்டம் ஓடுறான். இதுக்குத்தான் இந்த நாட்டுக்கு எல்லாம் வரக்கூடாது எண்டுறது." என்றான் அந்த இளைஞன்.

'ம் இவரையெல்லாம் யாரோ நிறைகுடம் வைச்சுக் கூப்பிட்டமாதிரி. தங்கட பவுசக் காட்ட இங்க வந்திட்டு... வடலிக்க இருந்து போனவங்கள் எல்லாம் ஏதோ வானத்தில இருந்து குதிச்சமாதிரிக் கதையப்பார். ஐயோ இவனைமாதிரி எத்தனைபேர் வரப்போகினமோ?" பக்கத்தில் இருந்தவர் அங்கலாயித்துக் கொண்டார்.

சிலாபத்தில் பேருந்து உணவு இடைவேளைக்காக நின்றது. அவசரமாக தனது குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு இறங்கிய அந்த இளைஞன் போன வேகத்தில் 'உதுக்கையும் மனிசன் சாப்பிடுவானே?" எனக் கத்தியவண்ணம் திரும்பி வந்து பேருந்தில் ஏறிக் கொண்டான்.

நானும் பக்கத்தில் இருந்தவரும் இறங்கிச் சென்று றோள்ஸ் வேண்டி பிளேன்ரீயுடன் சாப்பிட்டுவிட்டு, ஆறுதலாக மீண்டும் பேருந்திற்கு வந்தோம். அந்த இளைஞனின் குடும்பமும் அவனுக்காக வெளிநாட்டு பிஸ்கற்றையும் கடித்து போத்தல் நீரையும் பருகிக் கொண்டு இருந்தார்கள். பக்கத்து இருக்கைக்காறர் கண்ணைக் காட்டினார். எனக்கு அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

முருகண்டியில் பேருந்து நின்றபோது நித்திரையின் மடியின் நின்மதி கண்டு கொண்டு இருந்தேன். அந்த நின்மதியை துறந்து இயற்கையின் அவதியை தணிக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் வெளியே செல்ல வேண்டி இருந்தது. அவசரஅவசரமாக அநாவசியமானதை இறைத்துவிட்டு ஒரு தேனீரை வேண்டி வந்து அருந்துவதற்கு அமர்ந்தபோது அந்தக் குடும்பம் பிஸ்கேற்றை விட்டு றோள்ஸ்சுக்கு மாறி இருந்ததைப் பார்க்க முடிந்தது. பசிச்சா கறிவேண்டாம் நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று அம்மா சொல்லும் பழமொழியின் அர்த்தம் எனக்கு அப்போது புரிந்தது.

சிறிது நேர நித்திரை மயக்கத்தில் பேருந்து ஓமந்தையை வந்தடைந்திருந்தது. ஒரு காலத்தில் தவம் கிடந்து கடந்த தரைப்பாதையின் வாசலாக, மனிதம் கேள்விக்குறியாக்கப்பட்ட கணங்களாக, ஆண்டியும் அரசனும் கைகட்டி வாய்பொத்தி கௌரவத்தைக் கைவிட்டு கடந்தபாதையான ஓமந்தையின் முகம் இப்போது சற்று மாறி இருந்தது ஒருவித சௌகரியத்தைத் தந்தது.

என் நினைவுகள் ஐடி என்னும் சொற்கேட்டு நெருப்பு பட்ட மசுக்குட்டியாக அடங்கிப் போயிற்று. ஒரு இராணுவவீரன் எல்லோரிடமும் அடையாள அட்டையைப் பார்த்துக் கொண்டு வர, நானும் எனது அடையாளமாக கடவுச்சீட்டைக் காட்டினேன். பக்கத்தில் இருந்தவர் தனது அடையாள அட்டையை காட்டிவிட்டு கறுப்பு கண்ணாடியோடே நிரந்தரமாக வெளியே பார்க்கத் தொடங்கி இருந்தார். என்னிடம் இருந்த போஸ்ரல் அடையாள அட்டை இப்போது இலங்கையில் பாவிக்க முடியாது போய்விட்டது எனது வருத்தமாக, நான் பேசாது இருந்தேன். எனது கடவுச் சீட்டைப் பார்த்து விட்டு அந்தக் குடும்பமும் அவரும் வெளிநாடுதான் என்றுகூறியது எனது காதில் அரைகுறையாக விழுந்து கொண்டு இருந்தது. நான் கண்ணாடிப்பக்கமும் திரும்ப முடியாது எதிர்பக்கமும் திரும்ப முடியாது, முட்கம்பிக்குள் சுற்றிவைக்கப்பட்ட மனிதனாக நேரே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு வராத நித்திரை வந்ததாக கண்மூடி பாசங்கு செய்வதில் காலம் கழிக்கலானேன்.

- தியாகலிங்கம்.இ, நோர்வே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It