தன் தாயை இன்னொருவரின் மனைவியாகவும் பார்க்க வேண்டும் - பெட்ரோல் ப்ரெக்ட்

மதிப்பிற்குரிய மறைந்த திரு. சுந்தர ராமசாமி அவர்களுக்கு,

பொதுவாக, நாம் இறந்த பின் நம் உறவினர்கள் நண்பர்கள், மற்றும் நம் சமூகம் – அவரவர் வட்டத்திற்கு ஏற்ப, நம் மரணத்தை எப்படி எதிர்கொள்ளும் என்று அசைபோட்டு பார்ப்பது சுவாரஸ்யபான விசயம்தான். ஆனால் உங்கள் மரணத்திற்கு பின் இங்கு நடப்பதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு எந்த சுவாரஸ்யமுமின்றி வெறுமை தான் தெரிகிறது.

நான் உங்களை தனிபட்ட முறையில் அறியாதவர்கள். உங்கள் படைப்புகளை மட்டுமே ஓரளவு அறிந்தவன். உங்களை ஸ்தூலமாக ஒரே முறை அதுவும் 60-70 அடிகள் தள்ளி நின்று ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். (இதற்கு பிறகு எப்போது உங்களுடைய கட்டுரைகளை படித்தாலும் அந்த பக்கங்களில் உங்களுடைய குரல் சரியான ஏற்ற இறக்கங்களோடு என்னுள் எதிரொளிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை.) உங்களுடைய மறைவிற்கு பின் தமிழ் பத்திரிக்கைகளில் உங்களுடைய நண்பர்கள், உங்களுடன் பழகிய படைப்பாளிகள் எழுதிய கட்டுரைகளை படித்தேன். அதில் ஒரு சில மட்டுமே மரியாதையோடு தலை குனிய வைக்கிறது. மற்றவையெல்லாம் படிக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துப் போனது இந்த ஜென்மத்திலும் போன ஜென்மத்திலும் நீங்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உங்களுடன் பழகிய படைப்பாளிகள் உங்களுடைய படைப்புகளை மேலும் ஆழமாக புரிந்து கொள்ளும் உரிமையைப் பெற்றவர்கள். உங்களுடைய படைப்புகள் மீது என் போன்ற வாசகர்களுக்கு கூடுதல் பரிமாணத்தை சாத்தியப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்போடுதான் நான் இந்தக் கட்டுரைகளை எல்லாம் படித்தேன். எந்த ஒரு படைப்பாளிக்கும் அவனுடைய தனிப்பட்ட மனிதப்பண்பு எல்லாமே படைப்பு பண்பாக மாறவேண்டிய அவசியம் இல்லை/சாத்தியமுமில்லை என்றே நினைக்கிறேன். அதுபோலவே ஒரு படைப்பு பண்பு அவருடைய மனிதப் பண்பாக முழுமையாய் எதிரொளிப்பதும் சாத்தியமில்லை. இவ்விரண்டுக்கும் இடையே உள்ள முரண் சதா இயங்கிக் கொண்டே தான் இருக்கும். உங்களோடு பழகியவர்கள் இந்த முரண்கள் ஊடாக பயணித்து அது தரும் அனுபவத்தை எம் போன்ற வாசகனோடு பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவர்கள் தனிப்பட்ட மனிதப்பண்பை படைப்பு பண்பாக மாற்றுவார்கள். படைப்பு பண்பை மனிதப் பண்பாக மாற்றுகிறார்கள். இவ்விரண்டுக்கும் உள்ள முரண்பாட்டை தீர்மானமாக பார்க்க மறுத்திருக்கிறார்கள்.

போதாதற்கு இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் தோற்றம் கொடுக்கவும் முயற்சித்திருக்கிறார்கள். இதற்கு மேலும் சிலர் உங்களை அப்பா ஸ்தானத்தில் வைத்து எழுதுகிறார்கள். அப்பா ஸ்தானம் என்ன அவ்வளவு உயர்ந்த ஸ்தானமா? எனக்குத் தெரியவில்லை. எப்படியோ தமிழ் திரையுலகிற்கு மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் அப்பாவானதுபோல், தமிழ் இலக்கிய உலகிற்கு நீங்கள் அப்பாவாகி விட்டீர்கள். இவர்களுடைய தனிப்பட்ட இழப்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நானும் இவர்களுடைய நண்பனாக இருந்திருந்தால் நாலு வார்த்தை ஆறுதலாகப் பேசியிருப்பேன். ஆனால் ஒரு பொதுத் தளத்தில் இந்த சென்டிமெண்டையெல்லாம் எப்படி கூச்சமின்றி முன்வைக்கிறார்கள்? தன் தாயை இன்னொருவரின் மனைவியாகப் பார்க்க மறுக்கும் மனோபாவம்தானா இது?

இதற்கு எல்லாம் மேலே, ‘நீதிபதி இருக்கையில் அமர்ந்து கொண்டு – அவர் இதைப் படித்திருக்கிறார். அதைப் படிக்கவில்லை. அவருக்கு இது தெரியும், அது தெரியாது’ என்று உங்களுடைய மரணத்திற்காக காத்திருந்தது போல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு படைப்பாளி அவருடைய படைப்பிற்கான விமர்சனத்திற்கு ஏங்கும் தவிப்பு உங்கள் மரணத்தை முன்வைத்து கொச்சைப்படுத்தப்படுகிறது. இவர்கள்தான் தமிழில் முக்கிய சிந்தனையாளர்கள், படைப்பாளிகள். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தலைமையை வழிபடுவதற்கு மேலாக இவர்கள் உங்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் எந்த நற்காரியமும் செய்யவில்லை.

மதிப்பிற்குரிய திரு. சுந்தர ராமசாமி அவர்களே,

உண்மையாக சொல்லுங்கள் இந்த அபத்தங்கள் எல்லாம் நீங்கள் விரும்பியதுதானா?

அன்புடன்
நா. கருப்பன்

Pin It