தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

விடுதலை இராசேந்திரன் பங்கேற்று நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

1990களில் உலகமயமாக்கல் எனும் தாராளமயக் கொள்கையை அன்றைய நரசிம்மராவ் ஆட்சி இந்தியாவுக்குள் கதவு திறந்து விட்டது. அதன் பிறகு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அரசு ஒதுங்கிக் கொண்டு, தனியார் துறைகள் மேலாதிக்கம் பெறத் தொடங்கின. இந்தப் பின்னணியில் 1996-2001ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த கலைஞரின் செயல்திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தின் மிகச் சிறந்த நிர்வாகம் நடைபெற்ற காலமாக இது, இன்றளவும் பேசப்படுகிறது. தனியார் துறை வேகமாக வளர்ந்து கல்வியை தனியார் மயமாக்கிய அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களை அதிகமாகத் தொடங்கினார் கலைஞர்.

1989இல் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் திருநெல்வேலியிலும், 2000-த்தில் பெரியார் பெயரில் சேலத்திலும், 2008இல் திருவள்ளுவர் பெயரில் வேலூரிலும் பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். கல்வியியல் தொடர்பான ஆய்வுகள், அதனடிப்படை யில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன. இதை மேம்படுத்தி சென்னையில் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஒன்றையும் தொடங்கினார். மற்றொரு முக்கிய செய்தியைக் குறிப்பிட வேண்டும். அம்பேத்கர் பிறந்த மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்மாநில ஆட்சி அம்பேத்கர் பெயர் சூட்ட முன் வந்தபோது ஜாதிவெறி சக்திகள் அதைக் கடுமையாக எதிர்த்து வீதிக்கு வந்து போராடிய அதே காலத்தில், 1997இல் சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிக் காட்டினார். பல்கலைக்கழகங்களில் நேரடியாக பட்ட மேற்படிப்புப் படிக்கும் வாய்ப்புகள் உயர்ஜாதி மேல்தட்டு வர்க்கத்துக்கே கிடைத்து வந்தன. அதுவும் சென்னை மாநகரத்துக்கு மட்டுமே இந்த பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு வாய்ப்புகள் இருந்தன. இந்த வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்ற சமூக நீதிப் பார்வையோடு திருச்சி, கோவை நகரங்களிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு மய்யங்களை 1972இல் விரிவாக்கினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உயர்கல்வியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட இந்த முயற்சிகள் வழி வகுத்தன. 1982இல் இந்த மய்யங்கள் பாரதிதாசன், பாரதியார் பல்கலைக் கழகங்களாக மேம்படுத்தப்பட்டன. கோவையில் செயல்பட்ட விவசாயக் கல்லூரியை 1971இல் விவசாயப் பல்கலைக்கழகமாக்கி அதன் உறுப்புக் கல்லூரிகளை தமிழகம் எங்கும் தொடங்கி, விவசாய ஆராய்ச்சிகளுக்கு உரமூட்டினார். ஆசியாவிலேயே முதல் விவசாயப் பல்கலைக்கழகம் அமைந்தது தமிழ்நாட்டில்தான். அதுவும் கலைஞர் ஆட்சியில் தான்.

வேளாண்மையோடு நெருக்கமான தொடர்புடைய சென்னை, நாமக்கல்லில் செயல்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளை இணைத்து முதன்முதலாக கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தை தமிழ்நாட்டில் உருவாக்கினார். மற்றொரு முக்கிய செய்தியை அவரது நிர்வாகத் திறனுக்கு சான்றாகக் குறிப்பிட வேண்டும். வளர்ந்து வந்து கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை ஒரு புரட்சியை உண்டாக்கப் போகிறது என்பதை உணர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 1997இல் முதன்முதலாகத் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கை உருவாக்கப்பட்டது. அதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியா முழுமைக்குமான தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கல்வியாளரான அனந்தகிருட்டிணன், “கல்வியாளர்களுக்கு மிகப் பெரிய மதிப்பளிப்பவர் கருணாநிதி (அனந்த கிருட்டிணன்) சந்திக்க வந்தால், இரண்டு நிமிடங்களுக்கு மேல் அவர் காத்திருக்கும் சூழல் இல்லாதபடி அவருக்கான நேரத்தை ஒதுக்குங்கள் என்று கலைஞர் சொல்லியிருந்ததை அதிகாரிகள் எனக்குச் சொல்லி இருக்கிறார்கள்” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நிதி ஒதுக்கீடு அதிகாரங்களை தனது கையில் வைத்திருக்கிறது நடுவண் ஆட்சி. இதற்கு மாற்று நிறுவனங்களை உருவாக்கியதில் முன்மாதிரியாக இருந்தது தமிழ்நாடு. அதுதான் மாநிலத் திட்டக் குழு. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்துக்கான திட்டக்குழு அமைந்தது தமிழகத்தில்தான். நீதிபதி இராஜமன்னார் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து மாநிலங்களுக்கு சுயாட்சி அடிப்படையில் அதிகாரங்களை வரையறுத்து, அதைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார் கலைஞர். இதே பிரச்சினைக்காக இந்திரா காந்தி சர்க்காரியா ஆணையம் ஒன்றை நியமித்தார். அந்த ஆணையத்தின் மீது கருத்து தெரிவித்த மேற்குவங்கம், கருநாடகம் போன்ற மாநில அரசுகள், தி.மு.க. ஆட்சியில் கலைஞர் நியமித்த இராஜமன்னார் குழு பரிந்துரைகளையே எடுத்துக் காட்டின.

பள்ளிப் படிப்பைக் கூட முடித்திடாதவர் கலைஞர். திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்போடு, பள்ளிக்கு விடைக் கொடுத்தவர் பெரியார். அந்த பெரியார்தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்விக்கான இடஒதுக்கீட்டு உரிமையை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே அரசியல் சட்டத்தை முதன் முறையாகத் திருத்த வைத்து பெற்றுத் தந்திருக்கிறார் என்ற வரலாற்றை எவராலும் மறுத்து விட முடியாது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்ட தமிழக மக்கள் தொகையில் ஒரு சதவீதம்கூட இல்லாத ஒரு சமூகப் பிரிவிலிருந்து வந்த ஒருவர், தமிழகத்தின் அரசியல் உச்சத்தைத் தொட்டு இந்தியாவின் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு உயர முடிந்தது என்றால், அதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை. இசைக் குடும்பத்தில் பிறந்த அவரை இளம் வயதில் இசைப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார், அவரது தந்தை முத்துவேலர். அப்போது இசைப் பயிற்சிகள் கோயிலுக்குள் நடக்கும். இளம் வயதிலேயே தனக்கு ஜாதி காரணமாக இழைக்கப்பட்ட அவமானங்கள், அவரது சுயமரியாதையைப் பாதிக்கச் செய்தது. அந்த அவமதிப்புகள், பெரியார் இயக்கத்தை அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இதுபற்றி கலைஞரே இவ்வாறு எழுதுகிறார்:

“உண்மையிலேயே எனது இசைப் பயிற்சி வகுப்புகளே எனது முதல் அரசியல் வகுப்புகளாகவும் இருந்தன. ஜாதி அடிப்படையில் மனிதர்கள் எப்படி இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை நேரடியாக எனக்கு நேர்ந்த அவமானங்களால் உணர்ந்தேன். தங்களுக்கான பழக்கங்கள், சடங்குகள் என்ற பெயரில் அடுத்தவர்களின் சுயமரியாதையை உரிமையை களங்கப்படுத்தினார்கள். இப்படி அவமதிக்கிறோமே என்ற உணர்வுகள்கூட அவர்களுக்கு ஏற்படுவதில்லை” என்று கலைஞர் குறிப்பிடுகிறார்.

“கோயிலுக்குள் இசைப் பயிற்சிக்கு வரும்போது சட்டைப் போடாமல் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, அடுத்தவர் மீது கைபடாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பார்ப்பன உயர்ஜாதி சிறுவர்களுக்கு இந்தத் தடைகள் ஏதும் இல்லை. காலில் செருப்பு அணியும் உரிமைகூட மறுக்கப்பட்டது. வகுப்பில் முன்வரிசையில் அமரும் உரிமை பார்ப்பனருக்கும் உயர்ஜாதியினருக்கும் மட்டுமே உண்டு. பாடல்களில்கூட ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்காகவே பாடல்கள் ஒதுக்கப்பட்டன. இறைவன் திருவடியை அடைவதற்கும், மோட்சம் போவதற்குமாக பக்திப் பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டாலும் அதைப் பயிற்றுவிக்கும் வகுப்புகள், ஜாதியடிப்படையிலேயே நிறுவப்பட்டிருந்தது. திருக்குவளை கிராமத்தில் மூன்று ஆண்டுகள் எனக்கு இசைப் பயிற்சி வழியாகக் கிடைத்த கசப்பான பாடங்கள், ஜாதிக் கொடுமை என்னும் புண்ணுக்குப் புனுகு பூசுவதால் பயனில்லை; அறுவை சிகிச்சைத் தேவை என்பதை எனக்கு உணர்த்தின” என்று கூறுகிறார் கலைஞர்.

கலைஞர் அளித்த பல்வேறு பேட்டிகளின் தொகுப்பை, ‘தமிழ் இந்து’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலர் வெளியிட்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன்.

கேள்வி : பிடிவாதக் குணம் எப்படி கருணாநிதிவந்தது?

அம்மா, அப்பா, அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக் கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள்,. ஆமாம் சாதியப் பாகுபாடுகள் என் மீது போட்டிருந்த விலங்குகளை உடைக்க வேண்டும் என்றால், அயராத போராட்டம்தான் அதற்கு ஒரே வழி என்பதைத்தான் என்னுடைய வாழ்க்கை எனக்குச் சொல்லிக் கொடுத்தது.

இன்றைக்கும் ஜாதிப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகிறதா?

ஆமாம். உயர்ந்த தலைவர், தேசியத் தலைவர் பலரிடமும்கூட சாதியப் பாகுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். தி.மு.க. மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணருகிறேன். எவ்வளவு உயரம் போனாலும், இங்கு சாதியம் பின்னின்று நடத்தும் அரசியலை உணர்ந்திருப்பதால்தான், சமூக நீதிக்காக எவ்வளவு தூரம் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வளவோ காரியங்களைச் செய்திருந்தாலும் இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வெற்றி கண்டதைப் பெரிய சாதனையாக நாங்கள் நினைப்பதும் அதனால்தான்.

அரசியலில் சாதியின் ஆதிக்கத்தை ஒழிக்கவே முடியாதா?

சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல; மதத்தின் ஆதிக்கத்தையும் ஒழித்தாக வேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைமையைச் சீர்திருத்த வழி உண்டு. இன்றைக்கு ஊற்றப்படுகிற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகிற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

கடைசியாக, ‘கருணாநிதி, சிறுகுறிப்பு வரைக’ என்ற கேள்விக்கு அவர் அளித்த ஒரே வரி பதில் இதுதான்.

‘மானமிகு சுயமரியாதைக்காரன்.’

(நிறைவு)