மோடியின் தூய்மை இந்தியா திட்டம் வெற்று முழக்கமாக நிற்கிறது. உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. உண்மையில் தூய்மை இந்தியா ஒன்றை உருவாக்க வேண்டுமானால் அடிப்படையாக செய்யப்பட வேண்டியது என்ன? ஜாதிக்கும் ஜாதி அடிப்படையிலேயே பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பு உறுதி செய்திருக்கும் ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு தொழிலை தர்மமாக்கிக் கொண்டிருக்கிற பார்ப்பன இந்தியாவில் ஒரு போதும் ‘தூய்மை இந்தியா’ உருவாகவே முடியாது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் - கையில் மலம் எடுக்கும் துப்புறவுத் தொழி லாளர்களின் விடுதலைக்கான ‘சஃபாய்கரம் சாரி அந்தோலன்’ அமைப்பின் நிறுவனர் பெஸ்வாடா வில்சன். உலகின் தலைசிறந்த ‘மகாசாய் விருதை’ 2016ஆம் ஆண்டில் பெற்றவர். செப். 29, ஆங்கில ‘இந்து’ நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.

தூய்மை இந்தியாவுக்கான ‘சுவாச் பாரத்’ திட்டத்தை மோடி அறிவித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டில், தெருக்களை சுத்தப்படுத்தி, கழிப்பிடங்களை சுத்தப்படுத்தும் ஜாதிப் பிரிவினர் பற்றி எவருமே கவலைப்படவில்லை. இவர்களின் பங்களிப்பு இல்லாமலேயே ‘தூய்மை பாரதத்தை’ உருவாக்கிவிடலாம் என்று மோடி கனவில் மிதக்கிறார். வாழ்க்கை முழுதும் கைகளில் துடைப்பங்களை ஏந்திக் கொண்டு வீதிகளை சுத்தம் செய்கிறவர்களுக்கு மறு வாழ்க்கையை உறுதியாக்காத வரை - தூய்மை இந்தியா உருவாகாது. ஆண்டுக்கு ஒரு நாள் காமிராக்கள் முன் வந்து, துடைப்பத்தை கரங்களில் பிடித்து ‘போஸ்’ கொடுத்துவிட்டு தலைவர்கள் போய் விடுவாவர்கள். 364 நாட்களும் உண்மையில் துடைப்பங்களை ஏந்த வேண்டியவர்கள் இந்தத் தொழிலாளர்கள் தான். ‘கடவுளுக்கு அடுத்த நிலையில் வைக்கப்பட வேண்டியது தூய்மை’ என்று பேசுவதால், எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவது இல்லை. சுத்தப்படுத்தும் வேலையை ஒருகுறிப்பிட்ட ஜாதியின் மீது சுமத்திவிட்டீர்கள்; அப்படி ஒரு ஜாதிக்குரிய வேலையாக மட்டும் இருக்கின்ற காரணத்தால்தான், 4000 ஆண்டுகளாக ஒரே ஜாதி, இந்த வேலையை செய்து கொண் டிருக்கின்றது. அனைத்து ஜாதியினருக்குமான வேலையாக இது இருந்திருக்குமானால் எப்போதோ இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். உண்மையிலே ‘தூய்மை பாரதத்தை’ உருவாக்கும் நோக்கம் மோடிக்கு இருந்திருக்குமானால் இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் ஜாதி அமைப்புதான். எனவே ஜாதி அமைப்பு ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று மோடி வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும்.

கையில் மலம் எடுப்பதும், சாக்கடை குழிக் குள் இறங்கி சுத்தப்படுத்துவதும் புனிதமான தொழில் என்று அதற்கு பெருமை சேர்க் கிறார்கள். இந்தியாவின் ஜாதிய சமூக அமைப் பில் இது புனிதமானதுதானா? மனிதர்களுடைய மலத்தை எடுக்கும் ஒரு தொழிலாளி, தன்னுடைய தொழிலை, வணங்கக்கூடிய புனிதத் தொழில் என்று கருதுவாரா?

‘கழிப்பறை கட்டுங்கள்’ என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கழிப்பறை இல்லாத கிராமங்களை  வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள். கழிப்பறையை கட்டி விட்டால் மட்டும் போதுமா? கழிவுகளை சேமிக்கும் ‘செப்டிக் டேங்க்’கை யார் கட்டுவது? இந்தக் கழிவுத் தொட்டிகளைக் கட்டுவதற்கு - அதை நவீனப்படுத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டாமா? கழிப்பறை கட்டிய பிறகு இந்தக் ‘கழிவுத் தொட்டி’களை சுத்தப்படுத்துவதற்கு அதே ஜாதிக்காரர்கள் தானே வர வேண்டி யிருக்கிறது? உள்ளே இறங்கியவர்கள் நச்சுக் காற்றில் சிக்கி மரணிக்கிறார்களே!

சொல்லப்போனால், கழிப்பறை இல்லாததை விட, கழிப்பறை கட்டிய பிறகு, மேலும் பிரச்சினைகள் கூடுதலாகி விடுகின்றன. சாக்கடைக் குழிகளில் மனிதர்களை இறக்கி விடாமல் நவீன எந்திரங்களைப் பயன்படுத்து வதற்கும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் ‘தூய்மை பாரதம்’ பேசுவோர் ஏன் முன்வரவில்லை?

‘தூய்மை பாரதம்’ திட்டத்தை தங்கள் இலக்காக அறிவிக்கிற மோடி, அந்த இலக்கை எட்டுவதற்கான அடிப்படைப் பிரச்சிi னகளையே ஆய்வுக்கு உட்படுத்தாமல், வெற்று முழக்கமாக்கி விட்டால் மட்டும் ‘தூய்மை பாரதம்’ வந்து விடுமா?” என்று எழுதியுள்ளார், கையால் மலம் எடுக்கும் தொழிலாளர்கள் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வில்சன்.

பார்ப்பனர்கள் நடத்தும் வைதிகச் சடங்கு களால் குப்பைகளும் சுற்றுப்புறச் சூழல்களும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறையில் ‘மகாபுஷ்கரம்’ நடத்திய காஞ்சிபுரம் ‘கிரிமினல்’ பார்ப்பனர் ஜெயேந்திரன் ஊரையே குப்பையாக்கிவிட்டார். காவிரியில் ‘பாவமுழுக்குப்’ போட வந்த ‘பக்த கோடிகள்’ உடுத்திய ஆடைகளை அதே தண்ணீரில் அப்படியே போட்டுவிட்டு கிளம்பி விட்டனர். இது அய்தீகமாம்! இந்த அழுக்கு குப்பைகளை எடுக்க, அதே துப்புரவு தொழிலாளர்கள் தான் மீண்டும் ஆற்றுக்குள் இறக்கி விடப்படுவார்கள்.

‘தூய்மை பாரதம்’ என்று காது கிழிய கூச்சல் போடும் மோடி வகையறாக்கள், இந்த ‘மகாபுஷ்கரங்கள்’ வேண்டாம் என்று கூற முன் வருவார்களா? ஒரு போதும் வர மாட்டார்கள்.

அதேபோல் கங்கையாற்றில் பார்ப்பனர் திணித்த சடங்குகளை மக்கள் இப்போதும் நம்பிக் கொண்டு பிணங்களை பாதி எறிந்த நிலையில் வீசினால் ‘சொர்க்கம்’ போகும் என்று நம்புகிறார்கள். கங்கையை சுற்றி பார்ப்பனர்கள் நடத்தும் வேத சடங்குகள் அதில் எரிக்கப்படும் பொருள்கள் கங்கையில் வீசுவது ‘புண்ணியம்’ என்று நம்புகிறார்கள்.

இது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ள ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு மக்களிடம் இந்த சடங்குகள் பற்றிய மூட நம்பிக்கைகளை விளக்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்றும், இந்தச் சடங்குகள் மீதான நம்பிக்கைகள் இருக்கும் வரை கங்கையை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினாலும் தூய்மைப் படுத்த முடியாது என்றும் எழுதியிருக்கிறது.

இவற்றையெல்லாம் செய்யாமல் ‘தூய்மை இந்தியா’வை பேசுவது மோசடி தானே!