மருதையன்
பிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2022

தில்லை நடராசன் கோயில், தீட்சதர்களின் தனிச் சொத்தாகவே இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயில் பரப்பு 40 ஏக்கர்; 2700 ஏக்கர் நிலம்; பல கோடி மதிப்புள்ள நகைகள்; உண்டியல் வசூல் அனைத்துமே தீட்சதர்கள் கட்டுப்பாட்டில்தான். தில்லை தீட்சதர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்துகிறார்கள். பல்வேறு வழக்குகள், படுகொலைகள், தற்கொலைகளோடு தொடர்புடையது தில்லை நடராசன் கோயில்.

• கோயில் பார்ப்பனர் கொள்ளைகளை எதிர்த்து பக்தர்களே அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு. 1888இல் நீதிபதி முத்துசாமி அ ய்யர் மற்றும் பாஷ்யம் அய்யங்கார் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும், அரசுக் கட்டுப்பாட்டில் வரக் கூடாது என்று எதிர்ப்பவர்கள், தண்டனைச் சட்டத்தை எதிர்க்கும் திருடர்களைப் போன்றவர்கள் என்றும் கூறினர். (‘இந்து’ ஆங்கில நாளேடு 13.1.2014 தலையங்கத்தில் இத்தகவலைப் பதிவு செய்துள்ளது)

• பனகல் அரசர் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்து 1927இல் அமுலுக்கு வந்த இந்து அறநிலையத் துறைச் சட்டத்தில் 1951இல் தமிழக முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜா ஒரு திருத்தம் கொண்டு வந்து தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார் (28.5.1951). தீட்சதப் பார்ப்பனர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.

• வழக்கில் தீட்சதர்கள் வைத்த வாதம் தான் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாத காலத்திலிருந்தே பிராமணர்களிலேயே தனிப் பிரிவான ‘ஸ்மார்த்த’ பிராமணர்களாகிய எங்கள் வசம் தான் கோயில் நிர்வாகம் இருந்து வருகிறது. நாங்கள் ‘பிராமணர்களின்’ ஒரு தனித்துவமான பிரிவினர் (religious demomination, one Section) அரசியல் சட்டத்தின் 26(ஈ) பிரிவு இந்தத் தனித்துவமான பிரிவினருக்கு சிறப்பு சலுகை அடிப்படை உரிமையாக வழங்கி யுள்ளது என்று வாதிட்டார்கள். (இந்த தனித்துவமான பிரிவு அரசியல் சட்டத்தில் எப்படி நுழைக்கப்பட்டது என்பதை இதே இதழில் வேறு ஒரு பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.)

• ‘ஸ்மார்த்தர்’ என்ற பிரிவினர் கோயில் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்கள் ‘வேள்வி - நெருப்பு’ என்ற ‘யாக’ வழிபாட்டை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கான சாஸ்திரம், காஞ்சி சங்கராச்சாரிகள் ஸ்மார்த்தப் ‘பிராமணர்கள்’ தான். ஆனாலும் கோயிலுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களை மீறி உரிமை கொண்டாடுகிறார்கள்.

• உயர்நீதிமன்றம் தீட்சதர்கள் கோரிக்கையை ஏற்று அரசு தலையிட முடியாது என்று 1951இல் தீர்ப்பளித்தது. தீட்சதர்கள் ‘மடாதிபதிகளைப் போல’ கருதத்தக்கவர்கள் (கவனிக்க: மடாதிபதிகள் அல்ல; அவர்களைப் போல) என்று தீர்ப்பளித்தது.

• உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அன்றைய தமிழ்நாடு அரசு (சென்னை மாகாண அரசு) 1954இல் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தது. அரசியல் சட்ட அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது
இராஜாஜி தலைமையிலான அரசு திடீர் பல்டி அடித்து எதிர் வழக்காட விரும்பவில்லை என்று அறிவித்தது. இதனால் மேல் முறையீடு உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடியானது.

• 1959இல் தமிழக அரசின் அறநிலையத்துறை சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. காமராசர் முதல்வராக இருந்தார். தில்லை நடராசன் கோயில் தீட்சதர் கட்டுப்பாட்டில் நீட்டிக்க சட்டம் வழி செய்தது.

• 1987இல் நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை பங்கு போடுவதில் தீட்சதர்களுக்குள் மோதல் ஏற்பட்டு நீதிமன்றம் போகிறார்கள். 1987இல் நிர்வாகத்தில் தீட்சதர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழ்நாடு அரசு (அ.இ.அ.தி.மு.க. ஆட்சி) ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது (கவனிக்க - அறநிலையத் துறை கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை. நிர்வாக அதிகாரி மட்டுமே நியமிக்கப்படுகிறார்). இதையும் எதிர்த்து தீட்சதர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கி விடுகிறார்கள்.

• தொடர்ந்து தில்லை கோயிலில் தேவாரம் தமிழ்ப் பாடல் பாட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிற்றம்பல மேடையில் பாடுகின்றார். தீட்சதர்கள் மறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வயது முதிர்ந்த ஆறுமுகசாமி இரத்தம் சொட்ட அடித்து வெளியே தள்ளுகிறார்கள். ‘மனித உரிமை பாதுகாப்பு மய்யம்’ என்ற அமைப்பு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துப் போராடுகிறது.

“தமிழில் பாட அனுமதிக்க வேண்டும்; தீட்சதர்கள் தனித்துவமான பிரிவினர் என்று உரிமை கோருவதில் உண்மையில்லை; கோயிலை அரசு ஏற்க வேண்டும்” என்று நீதிமன்றத்தில் இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

• வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, தீட்சதர்கள் தனி உரிமை கோருவதைவிட தமிழில் பாட வேண்டும் என்ற வழிபாட்டு உரிமையையே முதன்மையாகக் கருத வேண்டும் என்று கூறி நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தார்.

• தீட்சதர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். சுப்பிரமணியசாமி, தீட்சதர் களுக்காக மனு போட்டார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவை தீட்சதர்கள் நேரில் சந்தித்தனர். எனவே தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களும் மறைமுகமாக தீட்சதர் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வழக்கை பலவீனமாக்கி தீட்சதர்கள் வெற்றி பெற உதவினர். “தீட்சதர்கள் நிர்வாக சீர்கேடு பற்றி புகார்கள் இருந்தாலும் நீதிமன்றம், அதற்குள் போக விரும்பவில்லை. நிர்வாக அதிகாரியை நியமித்தது சரியல்ல; அதற்கான குறிப்பான காரணமும் கூறப்படவில்லை; சீர்கேடுகளை சரி செய்ய நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார் என்றால், அதை சரி செய்துவிட்டு அதிகாரி பதவி விலகியிருக்க வேண்டும். தீட்சதர்களுக்குத்தான் கோயில் உரிமையுடையது” என்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

• 1954இல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது குமாரசாமி ராஜா, கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறைவேற்றிய உத்தரவை திரும்பப் பெற்றார். அதேபோல் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் நியமித்த ‘நிர்வாக அதிகாரி’ நியமனத்தை நீக்குவதற்கு துணை நின்றார். இரண்டு பார்ப்பன முதல்வர்களும தீட்சதர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

• சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், நாயக்கர் மன்னர்களால் நிர்வகிக்கப் பட்டது. பிச்சாவரம் ஜமீன்தார் கட்டுப்பாட்டி லும் இருந்திருக்கிறது. கோயில் மூடப்பட்டப் பிறகு ஒவ்வொரு நாளும் கோயில் சாவியை பிச்சாவரம் ஜமீன்தாரிடம் சென்று தீட்சதர்கள் கொடுக்கும் வழக்கம் நீண்டகாலம் பின்பற்றப் பட்டு வந்தது.

(தகவல்: மருதையன் எழுதிய ‘ஆகமம் ஆலயம்; மக்களும் நீதியும்’ நூலிலிருந்து)