மரணம் ஜனனம் போல் இயற்கையான ஒன்று, இயற்கையாகவே வரவேண்டும். எமது உடலிலும் ஆயிரக்கணக்கான கலங்கள் பிறந்து பிறந்து இறக்கின்றன. மரணம் அர்த்தமுள்ளது தான். இது இயற்கையாகவும், கொலையாகவும், தற்கொலைகளாகவும் மரணம் சம்பவிக்கலாம். உங்கள் உயிரை எடுப்பதற்கு உங்களுக்கு மட்டுமல்ல உயிர்கொடுத்தவர்களுக்குக் கூட உரிமை கிடையாது.

Murugadossமுத்துக்குமாரில் இருந்து முருகதாஸ் வரை நடந்த தீக்குழிப்புத் தியாகங்கள், மரணங்களாக கணக்கு வழக்கு இன்றித் தொடருமானால் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடுவதுடன், இவர்களின் தியாக நோக்கைத் திசை திருப்பிவிடும். ஆயுத்கலாச்சாரம், வன்முறைக்கலாச்சாரம் போல் தற்கொலைக்கலாச்சாரம் என்று உலகம் கண்டும் காணாமாலும் இருந்து விடும்.

என்னினத்து இளம் தமிழ் உயிர்களே! என் உயிரெடுத்து, உதிரம் ஊற்றியே இதை எழுதுகிறேன். நீங்கள் எழுந்தவாரியாக, தான்தோன்றித்தனமாக, உணர்வுகளுக்கு அடிடையாகி தற்கொலை முயற்சியில் ஆங்காங்கே ஈடுபடுவீர்களாயின் சிங்களவனது இனவழிப்புக்கு நீங்களும் உடன் போவதாக அமைந்துவிடும். என்னினத் தமிழ் உயிர்களே! உங்கள் உயிர் பெற்றோர், சகோதரங்கள், உறவுகளுக்கு மட்டுமல்ல தமிழுக்கும், தமிழ்இனத்துக்கும் வேண்டும். நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியது பல உண்டு. ஒவ்வொரு மனிதனும் சாதனையாளன்தான். நம்புங்கள் இது உண்மை.

உங்கள் உயிர் தீயாகங்களும் தீயில் எரியும் போது ஏற்படும் உத்தரிப்புகளும் அர்த்தமற்றுப் பொய்விடக்கூடாது. முதன் முதல் மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அது வெள்ளையனுக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிதானதும் வித்தியாசமானதுமாக இருந்தது. ஒருபாவமும் அறியாதவன் உண்ணாமல் உத்தரிக்கிறானே எனும் பொழுது மனிதம் எழுந்தது வெற்றி கொண்டது. இதே உண்ணாவிரத்தை பார்த்தீபன் (திலீபன் புனைபெயர்) அதுவும் காந்திதேசத்துக்கு எதிராகச் செய்தபோது காந்தி பெயரையே கொண்ட காந்தியர்கள் என்ன செய்தார்கள்? பார்த்தீபன் கொல்லப்பட்டான் என்பதுவே உண்மை.

இன்றும் எத்தனையோ உண்ணாவிரதங்கள் நடந்தன. அதில் உண்மை, அடிப்படை நேர்மை இருந்ததா? வயிறு முட்ட உண்டுவிட்டு வருவதுடன் தம்மை இடையில் உண்ணாவிரதத்தை விட்டு எழுப்புவதற்கு ஆட்களைத் தயார்படுத்தி விட்டே வருகிறார்கள். அடிப்படை நேர்மை, நீதி, வெல்வோம், முடிப்போம் என்ற நம்பிக்கையில்லாத எந்த ஒரு தியாகமும் வெற்றியளிக்காது. தயவுசெய்து என் இனத்து மக்காள் முத்துக்குமாரு முதல் முருகதாஸ் வரையிலான தியாகங்களை அர்த்தமாக்குங்கள்.

தயவு செய்து சிந்தியுங்கள். முத்துக்குமாரினதும் முருகதாஸினதும் தீக்குளிப்புகளே முக்கியமாகப் பேசப்படுகின்றன? காரணம் என்ன என்று சிந்திப்பீர்களா? இவர்கள் தம் எண்ணங்களை வெளிப்படுத்தும் முகமாக மக்களை எழுற்சியுறச் செய்வதற்காய் மரணசாசனம் ஒன்றை எழுதிவைத்து விட்டு இறந்தார்கள். இதைப்போல் நீங்களும் மரணசாசனம் எழுதிவைத்துவிட்டுத் தீக்குழியுங்கள் என்று சொல்லவில்லை. எல்லாவற்றுக்கும் இடம் பொருள் ஏவல் என்று ஒன்று உண்டு. இந்த இடம் பொருள் ஏவல்தான் இவர்களிது மரணங்களைத் தியாகமாக்கியது.

900 மேற்பட்ட தமிழ் இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் இந்துசமுத்திரத்தில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இந்திய மத்திய அரசுமுதல் தமிழ்நாடு மாநில அரசு வரை என்ன செய்தார்கள்? காசு கொடுத்துக் கண்ணீரை அடைக்க முயற்சித்தார்கள், வெற்றியும் கண்டார்கள். ஊர்வலம் போனீர்கள், கொடிபிடித்தீர்கள். யாருங்களுக்குக் குடைபிடித்தார்கள்?

இந்தியத் தமிழர்களின் கண்ணீரான இலங்கையின் அரசை என்ன செய்ய முடிந்தது? இந்தியத்தமிழனைக் கொன்றதற்காக இந்தியவரசு தமிழ்நாட்டு மாநில அரசின் அனுரசணையுடன் இலங்கையரசுக்குப் பரிசு கொடுத்தது. எப்படி? இன்னும் தமிழனைக் கொல்ல இராடாராக, ஆயுதங்களாக, கவரசவாகனங்களாக, இராணவமாக இன்னுமின்னம்.....!! இதுவரை இலங்கையரசால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களும் சரி, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும் சரி என்ன பிழை செய்தார்கள்? என்ன பாவம் செய்தார்கள்? தமிழராய் பிறந்ததைத்தவிர. ஈழத்தமிழர்கள் வாழும் உரிமையையும் அதற்கான இருப்பையும் கேட்டார்கள். இந்த இந்திய தமிழ் மீனவர்கள் என்ன கேட்டார்கள்?

பிறப்பு நாம் கேட்டு வந்தது இல்லையே. பிறப்பும் இறப்பும் எம்கையில் இல்லாததால் எம்கையில் இருக்கும் வாழ்வை அர்த்தமாக்கப் பாருங்கள். தமிழுக்காக, தமிழனுக்காக, இனத்துக்காக வாழ்ந்து சாதியுங்கள்.

தமிழ் தலைவர்களும், அரசியல்வாதிகளும் செய்யவேண்டியதை ஒரு தமிழனாக கட்டுரையூடாக நான் என்சிறுபணியைச் செய்ய முயல்கிறேன். என்னினத்து உயிர்களே ஒரு தமிழ் உயிர் உலகைவிட்டு அநியாயமாகப் போவதை அனுமதிக்க இயலாது. உங்கள் தீக்குழிப்புக்களையும், தியாகங்களையும் அரசியலாக்கிப் பணமாக்க கழுகுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

புதியதாகச் சிந்தியுங்கள். இல்லை மகாத்மா காந்தியின் வழியில்தான் செயற்பட விரும்புவீர்களானால், மகாத்மா காந்தி எம்மிடம் இன்னுமொரு ஆயுதத்தைத் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார். அதுதான் ” ஒத்துழையாமை”

வெளிநாட்டில் வாழும் தமிழர்களே! இலங்கை, இந்திய, பாக்கிஸ்தானிய, சீன , இஸ்ரவேலின் பொருட்களை, உணவுகளை வாங்காது விடுவதுடன், இதை வாங்க முயலும் உங்கள் நாட்டு மக்களைத் தடுங்கள். பிரசுரங்கள் மூலம் ஏன், எதற்காக, உங்கள் பணம்தான் எம்மை மறைமுகமாகக் கொல்கிறது என்பதை நீங்கள் வாழும் நாட்டுவர்க்கு விளக்குங்கள். இது இரட்டிப்பான வெற்றியை எமக்குத்தரும்

1) தமிழர்களின் இனச்சுத்திகரிப்பையும், சிங்களஅரசின் துவேச கொடுங்கோண்மையையும் சாதாரண மக்களிடையே கொண்டு செல்லும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்
2) பொருளாதார ரீதியாக, சிறுதுளி பெருவெள்ளமாக இலங்கை இராணுவத்துக்கு உதவும் நாடுகளின் பொருளாதாரம் அழியும்.

சிந்தியுங்கள், செயற்படுங்கள் உங்கள் கருந்துக்களை எதிர்பார்க்கிறேன் இன்னுமொரு இதழின் புதிய சிந்தனையுடன் சந்திக்கிறேன்

அன்புடன்
உங்கள் நோர்வே நக்கீரா

- நோர்வே நக்கீரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It