மீண்டும் இராம ராஜ்ய யாத்திரையை பா.ஜ.க. பின்னால் இருந்து கொண்டு பரிவாரங்களை முன்னிறுத்தித் தொடங்கியிருப்பதன் பின்னணியை அலசுகிறது, கட்டுரை.

2014 ஆம் ஆண்டில், "ஊழல்" காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் மூலம்தான் ஆட்சி அமைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பொருளாதார உதவி செய்யக் கூடிய உலகளாவிய ஆதரவாளர்களின் உதவியோடு, “அச்சே தின்”, “தூய்மை இந்தியா” போன்ற அலங்காரப் சொற்களால் மக்களைக் கவர்ந்தார் மோடி. கடந்த 3 ஆண்டுகளில், பொது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அதன் விளைவுகளிலிருந்து மீள்வது மிகக் கடினம்!

ram rajya ratha yatraஃபாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி காவிக் கும்பலை ஊக்குவிப்பதும், சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மதவாத நஞ்சைப் பரப்புவதும், ஜனநாயகத்தைத் திட்டமிட்டு சீரழிப்பதும், பாராளுமன்ற நல்லொழுக்கத்திற்குக் கேடு விளைவிப்பதும், நிறுவனங்களைக் காவி மயமாக்குவதும், பண மதிப்பிழப்பு போன்ற பகுத்தறிவற்ற முடிவுகளை எடுப்பதும், ஜி.எஸ்.டி.யை அவசரமாக செயல்படுத்தியதும், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைத் தலை கீழாக மாற்றியதுமே இந்த ஆட்சியின் அடையாளங் களாகும். மக்கள் விழிக்கத் தொடங்கியுள்ளனர். அதன் விளைவாகத் தான், சமீபத்திய தேர்தல்களில் பா.ஜ.க. சரிவைச் சந்தித்து வருகிறது. எனவே, பா.ஜ.க-வின் மதவாத யுக்தி “ராமர் கோவில்” என்ற பெயரில் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

மதவாதம்:- ராமர் கோயில் கட்டுதல் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு உள்ள சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல் ஆகியவைதான் பா.ஜ.க-வை பயங்கரவாதக் கட்சி என்ற பெயரிலிருந்து ஓர் அரசியல் சக்தியாக முன் நகர்த்தியது. அதில் குறிப்பிடத்தக்கது ராமர் கோயில் பிரச்சனை. 1 பிப்ரவரி 1986 அன்று, ஃபைசாபாத் நீதிபதியின் தீர்ப்பு வெளியாகிய ஒரு மணி நேரத்திற்குள், ராஜீவ் காந்தி அரசு பாபர் மசூதியின் பூட்டுகளைத் திறக்க உத்தர விட்டது. பா.ஜ.க.-வின் ராமர் கோயில் பிரச்சாரத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதே ராஜீவின் திட்டம். ஆனால் அதற்கு மாறாக சங் பரிவார் தன்னை வளர்த்துக் கொள்ள அதனை பயன்படுத்திக் கொண்டது. அம்முயற்சி பா.ஜ.க.விற்குப் (அன்றைய ஜனசங்கம்) பெரிதும் உதவியது. 1984-இல் இரண்டு இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. 1989-இல் 86 இடங்களைக் கைப்பற்றியது. இந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தில், 25 செப்டம்பர் 1990 அன்று, அன்றைய பா.ஜ.க. தலைவரான லால் கிருஷ்ண அத்வானி குஜராத்திலுள்ள சோம்நாத்தில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி வரை ஒரு ரத யாத்திரையை மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் பிரதிப்சின் ஜடேஜாவின் கூற்றுப்படி, அந்த யாத்திரையைக் கட்டமைத்தவர் மோடி தான். 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பீகாரிலிள்ள சமஸ்திபூரில், லாலு பிரசாத் யாதவின் அரசால், அத்வானி கைது செய்யப்பட்டார். இதன் விளைவாக கர சேவகர்கள் வெறித்தனமாக அயோத்தியில் ஒன்று கூடினர். உத்தரப்பிரதேசத்தில், அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் முலாயம் சிங் அரசு அவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியது. முடிவாக, டிசம்பர் 6 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அது நாடு முழுவதும் மதக் கலவரங்களைத் தூண்டியது. குறிப்பாக, மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், தில்லி மற்றும் போபால் ஆகிய நகரங்களில் அக்கலவரத்தின் விளைவாக 2,000 பேர் (பெரும்பாலும் இஸ்லாமியர்கள்) கொல்லப் பட்டனர். பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பா.ஜ.க-வின் இத்தகைய மதவாதக் கட்டமைப்பிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொடுத்தார் மோடி. ராமர் கோயில் பிரச்சினையின் தொடர்ச்சியாக நடந்த 2002 குஜராத் படுகொலைகளில் மேலும் 2000 இஸ்லாமியர்களைக் கொன்றது, மதவெறி.

இந்த மதவாதப் படுகொலைகள் மூலம் பா.ஜ.க. பயனடைந்தது. மக்களிடையே மதவாத வெறித் தனத்தைக் கிளறிவிட யாத்திரைகள் பயன்பட்டன. பா.ஜ.க.வின் இரண்டாவது ரத யாத்திரையான ”ஏக்தா யாத்திரை” கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை கட்சித் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நடந்தது. 1992 இல் குடியரசு தினத்தன்று, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் என்ற இடத்தில் பலத்த பாதுகாப்புடன் மூவண்ணக் கொடியை ஏற்றி, மோடி உட்பட சில பா.ஜ.க. தலைவர்களோடு அந்த யாத்திரை முடிவடைந்தது. 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவிலிருந்து காஷ்மீர் வரை ”ராஷ்டிரிய ஏக்தா யாத்திரை” திட்டமிடப்பட்டது. இருப்பினும், ஸ்ரீநகரில் கொடி ஏற்ற பா.ஜ.க.வின் யுவ மோர்ச்சா மேற்கொண்ட முயற்சி அமைதியைக் குலைத்துவிடும் என்பதால், அன்றைய உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு அதனைத் தடுத்துவிட்டது.

மேற்கண்ட பிரச்சினைகளில் மவுனம் சாதித்து வந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் ”வளர்ச்சி” என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தியது. இப்போது, மீண்டும் வாக்காளர்களிடையே அதிருப்தி நிலவுவதால், பழைய யுக்தியான மதவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

மீண்டும் ராமர் கோயில்:- பா.ஜ.க.வின் உலகளாவிய ஆதரவாளர்களுக்கு இதில் உடன்பாடு இல்லாததால், அயோத்தியிலிருந்து இராமேசுவரம் வரை 41 நாட்கள் நடக்கும் ”ராம ராஜ்ய ரத யாத்திரை”யிலிருந்து (2018) விலகி நிற்கின்றனர். முன்னதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருந்த இந்த யாத்திரை, கட்சியின் வேறொரு பாராளுமன்ற உறுப்பினரால் அயோத்தியில் 13 பிப்ரவரி 2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகளான ”விஷ்வ இந்து பரிஷத்” மற்றும் ”முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்” என்ற அமைப்புகளின் ஆதரவோடு “ஸ்ரீராம தாசா மிஷன் யுனிவர்சல் சொசைட்டி” என்ற மராட்டிய அமைப்பால் இந்த யாத்திரை நடத்தப்படு கிறது. ராம ராஜ்ஜியம் மற்றும் ராமர் கோயிலைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது நடத்தப் படுகிறது.

 பா.ஜ.க. இந்த யாத்திரையிலிருந்து விலகி நிற்கிறது. ஆனால், ஆறு மாநிலங்களின் தலைமைக் காவல்துறை இயக்குநர்களுக்கும் யாத்திரை செல்வதற்கு உதவுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் சிறிய பொது கூட்டங்களுக்குக் கூட அனுமதி வழங்க மறுத்து வரும் அரசாங்கம், சட்ட ஒழுங்கிற்குப் பேரபாயம் விளைவிக்கக் கூடிய இந்த யாத்திரைக்கு அனுமதி அளித்திருப்பது வியப்பாக உள்ளது.

ராம ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வருவது, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இராமாயணத்தை இணைப்பது, வாராந்திர விடுமுறையை ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வியாழக் கிழமைக்கு மாற்றுவது, உலக இந்து தினத்தைப் பிரகடனம் செய்வது போன்றவையே இந்த யாத்திரையின் கோரிக்கைகளாகும். 14 மார்ச் 2018 அன்று உச்ச நீதி மன்றத்தின் இறுதிக் கட்ட விசாரணைக்கு வரவிருக்கும் பாபர் மசூதி பிரச்சனைக்கு இந்துத்துவா சக்திகள் நீதிமன்றத் தலையீடில்லாமல் தீர்வு தேடிக் கொள்வதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என்ற கோணத்திலும் இதைப் பார்க்கலாம்! இதே அழுத்தத்தை இஸ்லாமிய அமைப்புகள் மீதும் இந்த யாத்திரை உருவாக்கலாம். பொது மக்களைத் தன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வைக்க, “ராம ராஜ்ஜியம்” என்ற தத்துவம், காந்தி அவர்களால் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது. சுதந்திரம் அடைந்தவுடன் ராம ராஜ்ஜியத்தை அமைப்பேன் என்ற சத்தியத்துடன் அதைப் பயன்படுத்தினார் காந்தி. காந்தி, அவரது வழக்கமான பாணியில், அதன் விளக்கத்தையும் இந்து மதத்திற்குச் சம்மந்தமே இல்லாதது போல் மாற்றினார். 26 பிப்ரவரி 1947 அன்று, காந்தி ஓர் கேள்விக்கு பதிலளித்த போது,

“ராம ராஜ்ஜியம் என்பது ‘இந்துக்களின் ஆட்சி’ என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என்னுடைய ராம் என்பது கடவுளின் இன்னொரு பெயர். நான் விரும்புவது, பூமியில் கடவுளின் ஆட்சியை நிறுவும் “குட ராஜ்” (Khuda Raj) தான்.” என்று கூறியிருக்கிறார். (Khuda என்பது இஸ்லாத்தில் கடவுளைக் குறிக்கும்)

(இராம ராஜ்யம் குறித்து காந்தியார் பேசி வந்தபோது இராமராஜ்யம் என்பது பார்ப்பன மேலாண்மை நிறுவும் ராஜ்யம் என்பதை விளக்கி பெரியார் நடத்திய ஆங்கில இதழான ‘ரிவோல்ட்’ தொடர் கட்டுரை எழுதி அதை காந்தியார் பார்வைக்கு அனுப்பியது. அதற்குப் பிறகு காந்தி, தான் பேசும் ‘இராமராஜ்யம்’ வேறு என்ற விளக்கத்தை முன் வைக்கத் தொடங்கினார். - ஆர்)

மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த போது, ராம ராஜ்ஜியம் என்றால் நல்லாட்சி என்று பொருள் என்றார். ஆனால், பெருமுதலாளிகள் மற்றும் அவர்களது நிறுவனங்களின் பேராசையை நிறைவேற்றுவதற்காக, பொதுமக்கள் நலத்திற்குக் கேடு விளைவித்து வந்தார். ராம ராஜ்ஜியம் என்ற சொல்லை இந்துக்களை ஈர்ப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர். காங்கிரசு கட்சியின் 1989 தேர்தல் பிரச்சாரத்தை அயோத்தியிலிருந்து ராஜீவ் காந்தி தொடங்கிய போது, ராம ராஜ்ஜியத்தை ஆதரித்துப் பேசினார். இன்று ராகுலும் அதையே பின்பற்றுகிறார். ராமாயணத்தில் உள்ளது போல் ராம ராஜ்ஜியம் என்றால் நல்லாட்சி என்று மக்களை நினைக்க வைக்கிறார்கள். வால்மிகி ராமாயணத்தின் ஆறாம் தொகுதியான லங்ககந்தாவில்,

“அனைவரும் (பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்) பேராசையின்றி அவரவர் களுக்கு தர்மப்படி விதிக்கப்பட்ட கடமைகளையும் வேலைகளையும் திருப்தியோடு செய்கின்றனர். காண்டம்:116 வசனம்:89” என்று குறிப்பிடப்பட் டிருக்கிறது.

காந்தி நம்பிய, நமது ஆட்சியாளர்கள் கொண்டு வரத் துடிக்கும் வர்ணாசிரம முறை இது தான். இப்படிப்பட்ட ராம ராஜ்ஜியத்தைக் கண்டிப்பாக மறுக்கப் போகும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர், சூத்திரகள் மற்றும் இந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன?

எதிர்வினை இல்லாதது ஏன்? : பா.ஜ.க.வின் இந்துத்துவாவிற்கு எதிர்வினை ஆற்ற உண்மையில் எந்தவித அரசியல் எதிரிகளும் இல்லை. அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக மக்கள் விரோதக் கூட்டணியாக இயங்குகின்றன. தற்போதைய சூழலில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர, வேறெந்த கட்சியும் இந்த ரத யாத்திரையை எதிர்க்கவில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த முயல்கிறது என்று குற்றம் சாட்டப் பட்டது. ஆனால், அங்கே சமீபத்தில் “பிராமணர் மற்றும் புரோஹித் சம்மேளன்” என்ற பெயரில் மாபெரும் பார்ப்பனர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இது திரிணாமுல் காங்கிரசின் மூத்தத் தலைவரும், பிர்பம் மாவட்டத் தலைவருமான அனுபிரதா மோண்டல் என்பவரால் ஒருங்கிணைக் கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட பார்ப்பனர்கள் அனைவருக்கும் பகவத் கீதை, இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் அவரது மனைவி சாரதா தேவியின் படம் பரிசாக வழங்கப் பட்டது. அனைத்துக் கட்சிகளின் கட்டமைப்பும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்று காட்டிக் கொண்டு, சற்று மிதமான தொனியில் இந்துத்துவா கொள்கையைப் பேசுகிறது காங்கிரசு கட்சி. ராகுல் காந்தியை பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று அக் கட்சியினரே சித்தரிப்பதைக் கண்டிக்க வேண்டும். ஆனால் அக்கருத்து மதச்சார்பற்ற இந்தியாவில் நன்றாக விலை போகிறது.

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தானும் ஒரு இந்து என்று நிரூபிக்க, ராகுல் காந்தி 27 கோயில்களுக்குச் சென்றார். அதன் பலனாகத் தான், இக்கோயில்கள் அமைந்துள்ள 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம் என்று கருதுகிறது காங்கிரசு கட்சி. குஜராத்தில், பா.ஜ.க.விற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு நிலவிய போதும் கூட, தன்னால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்று காங்கிரசு வெட்கப்படவும் இல்லை; இந்துத்துவா கொள்கையில் பா.ஜ.க.வோடு தன்னால் போட்டி போட முடியாது என்பதை உணரவும் இல்லை. இந்துத்துவாவை மிதமான தொனியில் பேசும் ராகுலை எதிர்த்த அனைவரும் அவரிடமிருந்து விரைவில் ஓர் உறுதியான நிலைப் பாட்டை எதிர்பார்ப்பார்கள். இது, இந்தியாவில் ”இந்து ராஜ்ஜியம்” அமைவதை விரைவுபடுத்தவே செய்யும் பேராபத்தாகும். மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் தான் தேர்தல் வெற்றி அமைகிறது என்பது உண்மையாக இருப்பினும், அது நியாயமல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாத்து, மக்களை மதச்சார்பின்மை என்ற பெயரில் ஏமாற்றி சதி செய்கிறது ஆளும் வர்க்கம். தர்மநிறபேக்ஷதா (Dharmanirapekshata) என்றால் மதச்சார்பின்மை மட்டுமல்ல; அது பெரும்பான்மை மதத்தின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் சூழ்ச்சியாகும். இந்தியா உண்மையிலே ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்திருந்தால், நாம் இந்து ராஜ்ஜியத்தின் கோர முகங்களைப் பார்க்க நேர்ந்திருக்காது.

(எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ மார்ச் 10 இதழில் ‘ஆனந்த்டெல்டும்தே எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்.

தமிழில்: யாழ் மொழி)