“பார்ப்பனருக்கு சேவகம் செய்வதே இந்து ராஷ்டிரம்” என்றார், ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். “இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார் அப்துல் சமது.

கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை:

தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கின்ற சூழலில் அரசியல் கட்சிகள் எல்லாம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என ஆளாய் பறந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டினை இங்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகின்றது. காவல் துறை அனுமதி மறுத்தும் உயர்நீதிமன்றத்தை அணுகி அதன் அனுமதியோடு இம்மாநாடு நடைபெறுகிறது. அடுத்த தேர்தலைப் பற்றி யோசிப்பவர்கள் சாதாரண அரசியல்வாதிகள்; ஆனால் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் பெரியார் தொண்டர்கள். இதுதான் இம்மாநாட்டின் நோக்கம்.

அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் பார்ப்பனீய ஆதிக்கத்தை அதன் கொடூர முகத்தை நாம் தோலுரித்தே ஆக வேண்டும். அதற்கு எத்துணை இடைஞ்சல்கள் வந்தாலும், அடக்குமுறைகளைச் சந்தித்தாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திராவிடர் விடுதலைக் கழகத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் என்றைக்கும் தோளோடு தோள் நிற்போம் என உறுதியை அளிக் கின்றேன்.

மத்தியில் பா.ஜ.க. மிகப்பெரும்பான்மையோடு அமர்ந்திருக்கிறது. இது ஒரு சாதாரண ஆட்சி மாற்றத்தால் வந்தது அல்ல. காங்கிரஸ் இருந்தது; அதைத் தொடர்ந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது; மீண்டும் காங்கிரஸ்; அதனை தொடர்ந்து ஜனதா தளம் வந்தது; தொடர்ச்சியாக காங்கிரஸ், பி.ஜே.பி., காங்கிரஸ் தற்போது பி.ஜே.பி. என வந்துள்ளது.

இப்போது மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு ஒரு சாதாரண ஆட்சி மாற்றத்தால் வந்த அரசு அல்ல. இந்த ஆட்சி என்பது இந்தியாவின் முகத்தையும், முகவரியையும் சிதைக்க வந்துள்ள ஆட்சி என்பதை நாம் உணர்ந்ததன் விளைவு தான் இதுபோன்ற மாநாடுகள் இன்று அவசியமாக இருக்கின்றது.

மத்திய மோடி அரசு, தான் பதவியேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில் எதை செய்து கொண்டிருக் கிறது, எதை முன்னிலைப்படுத்துகிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். கடந்த வாஜ்பாய் அரசு தனது கடைசி காலகட்டத்தில், “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு சிறுபான்மை அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கென தனிப் பெரும்பான்மையோடு, பி.ஜே.பி. - ஆட்சியைப் பிடிக்கும்போது நாங்கள் கனவு காணும் நாட்டை உருவாக்குவோம்” என வாஜ்பாய் சொன்னார்.

அதுபோல் இப்போது பி.ஜேபி. தனிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற்ற பிறகு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் உட்காரும் போது, முதல் பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் மோடி சொல்கிறார், “இந்த வெற்றி என்பது நாம் மட்டும் பெற்ற வெற்றிஅல்ல; இந்த வெற்றிக்காக நமக்கு முன்னால் 5 தலைமுறை உழைத்து இருக்கிறது” என்ற செய்தியைச் சொன் னார். ஐந்து தலைமுறை என்பது ஆர்.எஸ்.எஸ்.இன் தொடக்கத்தில் இருந்து என்பதுதான் அவரது கணக்கு.

அந்த கனவு ஆட்சியின் விபரீதங்களை நாம் யோசிக்க வேண்டும். வெறும் முஸ்லீம்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்றால், இல்லை. கிறித்துவர் களுக்கு மட்டுமா என்றாலும் அதுவும் இல்லை. இந்த பாசிச ஆட்சியால் இந்து என்று சொல்லப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவே அமையும்.

இன்றைக்கு மாட்டுக்கறியை வைத்து இருந்ததாகக் கூறி ஒரு 70 வயது இசுலாமிய முதியவரை பெருங் கூட்டமாக சென்று காவிக் கும்பல்கள் அடித்தே கொன்று இருக்கிறது. அவருடைய மூத்த மகன் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் அதிகாரி; அவர் சொல்கிறார், “இந்த நாட்டைப் பாதுகாக்கவே நான் இராணுவத்தில் உள்ளேன். ஆனால் என் வீட்டைப் பாதுகாக்க யாரும் இல்லையே” என மனம்குமுறி பேட்டியளித்தார்.

அவருடைய மகள் சொன்னார், “என் வீட்டில் இருந்தது மாட்டுக்கறி அல்ல ஆட்டுக்கறி என ஆய்வில் தெரிந்து விட்டது. அடித்தே கொல்லப்பட்ட என் தந்தை யின் உயிரை யார் திருப்பித் தருவார்கள்?” என மனம் குமுறி கேட்ட கேள்வி, நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கிப் போட்டது. காவிப் பார்ப்பனக் கும்பலின் வெறிச் செயலை மனித நேயத்தை விரும்புகிற எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நாட்டில் ஒரு பொய்யான எதிரியைக் கட்டமைக்க வேண்டும் என்ற பாசிச சிந்தனையோடு முஸ்லீம்களை எதிரிகளாகக் கட்டமைத்து இருக்கிறார்கள்.

முஸ்லீம்கள் என்றால், “பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேச விரோதிகள்” என்பது எங்களுக்கு பார்ப்பன காவிக் கும்பல் அளித்துள்ள பட்டம். இப்படிப்பட்ட அவப் பெயரோடுதான் இந்நாட்டின் முஸ்லீம்கள் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா வேறு, தமிழகம் வேறு, மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களில் முஸ்லீம்களை எதிரிகளாகக் காட்டி, தனிமைப்படுத்தி மற்றவர்களை ஒன்று சேர்த்து வைத்துவிட்டனர். ஆனால், தமிழகத்தில் யார் ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியோ அந்த பார்ப்பனியத்தைத் தனிமைப்படுத்தி நம்மை எல்லாம் ஒன்று சேர்த்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார் என்ற நன்றிப் பெருக்கோடு நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம்.

இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரிகள் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் அல்ல; மாறாக வந்தேறிகளான பார்ப்பனர்கள் தான் பயங்கரமான எதிரிகள். பார்ப்பன வர்ணாசிரம தர்மப்படி பிறப்பின் அடிப்படையில் மக்களை ஜாதி ரீதியாகப் பிரித்து, நமது வாழ்வை நாசப்படுத்தி - தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம், தொடக்கூடாத ஜாதி, உங்களுக்கு கல்வி உரிமை கிடையாது, என மக்களைப் பிளவுபடுத்தி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது பொதுவீதிகளில் நடக்க உரிமை இல்லை, பொதுக் குளங்களில் தண்ணீர் எடுக்க உரிமை இல்லை என முடக்கியது முஸ்லீம்கள் அல்ல; கிறிஸ்துவர்கள் அல்ல; வேறு யாருமல்ல; மிகவும் குறைந்த 3 சதவீதம் இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் தான் என்ற விழிப்புணர்வை இந்த மண்ணிற்கு தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனக்கு முன்னால் பேசிய ஆசிரியர் சகோதரி சிவகாமி ஒரு கருத்தை சொன்னார், நமக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. பார்ப்பன சித்தாந்ததிற்கு எதிராக - பார்ப்பன ஒடுக்குமுறைக்கு எதிராக - மிகப் பெரிய போராட்டங்களை நடத்திய மாநிலம் நமது தமிழகம். பார்ப்பன அடக்குமுறைகளுக்கு எதி ராக இங்கு படமாக இருக்கின்ற சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர் போன்றவர்கள் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.

தலித்துகளுக்காக மட்டும்தான், இசுலாமியர் களுக்கு மட்டும்தான், பெரியார் இயக்கம் போராடும் என்று சொல்லியிருக்கிறார்கள். செட்டியார் சமுதாயத்தைச் சார்ந்த சர். பிட்டி தியாகராயர், முதலியார் சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் நடேசனார் போன்றவர்கள் பார்ப்பனிய கொடுமைகள் தாளாமல் அவைகளுக்கு எதிராகப் போராடினார்கள். நீதிக் கட்சி ஆட்சி சமூகநீதியில் ஒரு மைல்கல்.

சர். பிட்டி ஒரு மிகப் பெரிய வள்ளல். மிகப் பெரிய பணக்காரர். மயிலை கபாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு அவரிடம் நன்கொடை கேட்டபோது அப்போதே ரூ.10 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அக்கோயில் குடமுழுக்குக்கு அவர் செல்லும்போது அவருக்குக் கீழே பணியாற்றிய ஒரு பார்ப்பன பியூனை விட்டு தியாகராயரை இதற்குமேல் நீங்கள் வரக்கூடாது என தடுத்தது பார்ப்பனக் கும்பல். “எனக்கே அனுமதி இல்லையா” எனக்கேட்டபோது “நீங்கள் சூத்திரர், பார்ப்பனரைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்க முடியாது” என அவரைத் தடுத்தது பார்ப்பனக் கூட்டம்.

தியாகராயர் சிந்தித்தார். எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும்? எனவே, இவற்றை ஒழிக்க வேண்டும் என்று எண்ணி அதே கருத்துள்ள மற்றவர்களையும் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டது தான் நீதிக்கட்சி. இட ஒதுக்கீட்டை முதன் முதலில் இம்மண்ணில் நடைமுறைப்படுத்திய ஆட்சி நீதிக்கட்சியின் ஆட்சி. நீதிக்கட்சி சமூகநீதியில் ஒரு மைல்கல் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் அப்படி நடைபெறவில்லை. பார்ப்பனியத்திற்கு எதிராக மிகப் பெரிய போர் அப்போது நடந்தது.

ஆனால், இன்றைக்கு பார்ப்பனீயம் ஒழிந்ததா என்றால் இல்லை. மத்தியில் உள்ள ஆட்சி என்பது மீண்டும் இம் மண்ணில் வர்ணாசிரம தர்மத்தைக் கொண்டு வர வேண்டும் எனத் துடிக்கும் கொடிய பாசிச பார்ப்பன சிந்தனை உள்ள ஆட்சி மோடியின் ஆட்சி. சனாதான தர்மம் தான் உண்மையான தர்மம்; அதை நிலை நாட்டுவது தான் எங்களது கடமை என்கிறது.

மோடி ஆட்சியை மத்தியில் உட்கார வைத்தது பார்ப்பனியம். வரும் கல்வியாண்டிலிருந்து மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயக் கல்வி என்கிறது மோடி அரசு.

அரசியல் சாசன சட்டப்படி 22 மொழிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்த மொழிகளைக் கோடிக் கணக்கான மக்கள் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், ஆனால், சமஸ்கிருதத்தைப் பேசக்கூடிய மாநிலம் எது என்று நாங்கள் கேட்கிறோம். கடைசியாக வந்த புள்ளிவிவரப்படி இந்த நாட்டில் வெறும் 14,500 பேர்கள் மட்டும்தான் சமஸ்கிருதத்தைப் பேசு கின்றனர். இந்த செத்த சமஸ்கிருதமொழி - அதன் பெயரில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதற்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. வரும் கல்வியாண்டில் இருந்து சமஸ்கிருதம் கட்டாயக் கல்வி என மத்திய அரசு சொல்லிவிட்டது.

அப்படி என்ன சிறப்பு சமஸ்கிருதத்திற்கு இருக்கிறது? பார்ப்பனிய பண்பாட்டு மொழி என்பத்தை தவிர இந்த சமஸ்கிருதம் தான் நம்மை ஜாதிகளாகப் பிரித்து அடிமைப்படுத்தி வைத்திருக் கிறது. அத்தகைய கொடிய சமஸ்கிருதத்தைப் பாதுகாத்து வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது.

அப்படி அவர்கள் உருவாக்கும் இந்து ராஷ்டிரத்தில் நமக்கு என்ன வேலை? அதில் நாம் என்ன நிலையில் இருப்போம், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த தலைவர் குருஜி கோல்வால்கர் சொல்லுகிறார்.

நான் ஒருமுறை தென்னாட்டிற்கு சென்றபோது நம்முடைய கலாச்சாரத்தை நேரில் பார்த்தேன். என்ன கலாச்சாரம் என்றால். ஒரு ஆங்கிலேய அதிகாரி நடந்து சென்று கொண்டு இருந்தார். அவருக்கு பின்னாலேயே பார்ப்பன சமூதாயத்தைச் சார்ந்த ஒரு பியூன் நடந்து வந்து கொண்டிருந்தார். எதிரிலே நாயுடு சமுதாயத்தைச் சார்ந்த அதிகாரி, அந்த வெள்ளை அதிகாரியின் கீழ் பணி செய்யக் கூடியவர் வருகிறார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து வணக்கம் கூறி கைகுலுக்குகிறார்; பின்னால் வரும் பார்ப்பன பியூனைப் பார்த்தவுடன் அவரின் காலில் விழுந்து கும்பிடுகிறார். வெள்ளைக்கார அதிகாரிக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. உடனே நாயுடு அதிகாரியிடம் இது குறித்து கேட்டபோது அதற்கு அவர் கூறுகிறார், “நீங்கள் எனக்கு மேலதிகாரிதான் ஆனால் மிலேச்சர் பார்ப்பனர் பியூன் தான்; அவர் எங்கள் சாமி அதனால் அவர் காலில் விழுந்தேன்” என்றார்.

இதுதான் நமது கலாச்சாரம்; இதுதான் இந்து தர்மம் என்று குருஜி கோல்வால்கர் எழுதி வைத் திருக்கிறார். இத்தகைய கலாச்சாரத்தை மீண்டும் இங்கு கொண்டு வரவே மோடி அரசு விரும்புகிறது.

(தொடரும்)