கூடங்குளம் அணுமின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டாவது தொகுதிகளில் (யூனிட்) அணு உலைகளின் உறுதித் தன்மையைக் கண்டறியக் கூடிய கண்காணிப்புக் கருவி (Strain Monitoring Equipment) முறையாக செயல்படாமல் முடங்கிப் போயிருக்கிறது என்று உலகப் புகழ் பெற்ற ‘சண்டே கார்டியன்’ பத்திரிகை (ஜூன் 22, 2019) அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அணு உலையில் நிகழ இருக்கும் செயல்பாட்டுக் குறைவு மற்றும் பாதிப்புகளை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி இது.

அணுஉலையின் இயங்கும் போக்கு அதில் நிகழும் மாற்றங்களை இந்தக் கருவிகள் வழியாக கண்டறிந்தால்தான் ஆபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்துக்கு இந்த ஆபத்தை சுட்டிக்காட்டி, சண்டே கார்டியன் 12 நாள்களுக்கு முன் மின்னஞ்சல் அனுப்பியது. உடனடியாக இந்தக் கருவிகளை முறையாக இயங்க வைக்குமாறு அதில் வலியுறுத்தப் பட்டிருந்தது. இதற்கு எந்த பதிலும் நிருவாகத்திடமிருந்து வரவில்லை. பிறகு ஆலையின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி சுனில் ஸ்ரீவத்சலாவின் கவனத்துக்கும் சண்டே கார்டியன் இதைக் கொண்டு சென்றது. தொடர்ந்து அணுசக்தித் துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. எவரும் இது குறித்து எந்த பதிலும் தரவில்லை என்று ‘சண்டே கார்டியன்’ மிகுந்த அச்சத்தோடு எழுதியிருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் முதல் மற்றும் இரண்டாவது தொகுதி(யூனிட்டு)களின் நீண்டகால செயல்பாடு காரணமாக திறன் குறைந்தவையாகிவிட்டதால். அதன் உறுதிப்பாட்டைக் கணக்கிடும் கருவிகள் செயலிழந்து விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுவதாக சண்டே கார்டியன் கூறுகிறது.

அணுஉலை எந்திரக் கட்டமைப்புத் தன்மை குறித்து நேரடியாக தகவல்களைத் தரும் இந்த முக்கிய கருவி செயலிழந்து நிற்பது மிக மிக ஆபத்தானது என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் முதல் யூனிட் 2013இல் தொடங்கப்பட்டு தென்னக மின் தொகுப்போடு இணைக்கப் பட்டிருக்கிறது. இரண்டாவது யூனிட் 2016 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது.