(ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு' என்ற தலைப்பில் ஆற்றிய உரை.)

இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

kolathoor maniபுரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப் பதிவு செய்தார். தென்னாடு கல்வியில் முன்னேறியுள்ளது. வடநாடு பின் தங்கியுள்ளது என்று அவர் அதில் சொன்னார். அதை எப்படி சரி செய்வது என்பதற்கு பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வடநாட்டைப் போல தென்னாட்டையும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கல்வியற்றவர்களாக மாற்றிவிட்டால் இதைச் சரி செய்து விடலாம் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

நுழைவுத் தேர்வு என்ற பெயரால், நீட் என்ற பெயரால் தகுதியுள்ள மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து அதன் வழியாக மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்று கருதியிருப்பார்களே யானால் முதலில் அவர்கள் செய்திருக்க வேண்டியது மத்திய அரசே நடத்திக் கொண்டிருக்கிற கல்வி நிலையங்களில்தான் நீட் தேர்வு நடத்தியிருக்க வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.எம்.ஐ. உள்ளிட்ட அவர்கள் நடத்துகிற எந்தக் கல்வி நிலையங்களிலும் நீட் தேர்வு கிடையாது. ஆனால் மாநிலங்கள் நடத்துகிற மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டும்தான் நீட் தேர்வு என்ற போதே, இவர்கள் எப்படிப்பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதையும், அதற்கு அவர்கள் காட்டுகிற அக்கறையையும், அதில் புதைந்திருக்கிற வஞ்சனையையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கல்வியைப் பொறுத்தவரை அவர்களுடைய கொள்கை இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான். அதைச் செயல்படுத்துவதைத்தான் சிந்தனையாகவே கொண்டுள்ளார்கள். நாங்கள் ஒரு புது வகையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கொண்டுவரப் போகிறோம் என்று அவர்கள் தேர்தல் அறிக்கையிலேயே சொன்னார்கள். சமூக நீதி என்று மட்டுமில்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும், இது அரசியல் அதிகாரம் கொண்டதாகவும் இருக்குமென்று அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.

இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து அப்போது பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நிர்மலா சீதாராமனிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு அவர் அளித்த பதில் அடுத்த நாள் இந்துவில் 'இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு' என்ற தலைப்பில் வெளியானது. எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று சொன்னால் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதை நாமே அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் 100 பின்தங்கிய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த மாவட்டங்களை எல்லா வகையிலும் உயர்த்துவதுதான் எங்களுடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்று அவர்கள் சொன்னார்கள். இப்போது மெல்ல மெல்ல அவற்றை யெல்லாம் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் உலக இந்துக்கள் மாநாடு ஒன்றை விசுவ இந்து பரிசத் நடத்தியது. அந்த மாநாட்டில் அவர்களுக்கு எதிரிகளாக சிலரை அடையாளப்படுத்தினார்கள். கிறித்துவர்கள், முஸ்லிம்கள், மதச்சார்பின்மை பேசுகிற நம்மைப் போன்றவர்களை எப்போதுமே எதிரிகளாகச் சொல்லுவார்கள். இப்போது மார்க்சியம் மெக்காலேயிசம் என்ற புதிய எதிரியைச் சேர்த்திருக்கிறார்கள்.

நீட் தேர்வு எப்படி நடத்தப்படுகிறது என்பதைப் பலரும் அறிந்திருப்பீர்கள், அதை விளக்கத் தேவையில்லை. நம்முடைய கல்வி முறையில் மூளையின் படம் வரைந்து, பாகங்கள் குறித்து, செயல்பாடுகளை விளக்கு என்று கேள்விகள் கேட்பார்கள். இவ்வாறு விளக்கி எழுதுகிற முறையில்தான் தேர்வு இருக்கும். ஆனால் இவர்கள் இப்போது நீட் தேர்வில் டிதெநஉவiஎந முறையைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதில் நான்கு பதிலை அவர்களே அளித்திருப்பார்கள். ஏதேனும் ஒன்றை டிக் செய்தால் போதும். இதற்கெல்லாம் அறிவு வேண்டாம், அதிர்ஷ்டத்தில் கூட வர இயலும் என்பதை சிலர் விளக்கியிருக் கிறார்கள்.

இதுகூட பரவாயில்லை, நம் மாணவர்கள் பார்க்காத புதிய முறை ஒன்றையும் கொண்டு வந்தார்கள். சரியாக எழுதினால் மதிப்பெண், இல்லாவிட்டால் மதிப்பெண் இல்லை என்பதுதான் இதுவரையில் இங்கு இருக்கிற முறை. ஆனால் தவறாக எழுதினால் மதிப்பெண்ணைக் குறைப்போம் என்ற முறையையும் இதில் கொண்டு வந்தார்கள். கேள்வித்தாள்கள் கூட நம் மாணவர்கள் படித்த பாடத் திட்டங்களிலிருந்து கிடையாது. நம் மாணவர்கள் இங்குப் படித்தது சமச்சீர் கல்வித் திட்டத்தில். அதிலிருந்து கேள்விகள் கிடையாது. உயர் ஜாதி, நகரத்துப் பணக்கார மாணவர்கள் மட்டுமே படிக்கிற சி.பி.எஸ்.சி. கல்வி முறையிலிருந்து தான் கேள்வி கேட்கிறார்கள். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த நீட் தேர்வை எழுதலாம். இப்படிப்பட்ட நிலையில்தான் நம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள்.

கடந்த ஆண்டில் இந்தத் தேர்வை எழுதியவர் களில், 6,09,820 இந்தியர்களும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் 1,826 பேரும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் 42 பேரும் தேர்வாகியிருக்கிறார்கள். இதில் வெளிநாட்டுக் காரர்கள் 245 பேர் தேர்ச்சியடைந்து இருக்கிறார்கள். நம்முடைய வரிப்பணத்தில் நம் மாணவர்கள் படிக்க நம்முடைய மாநில அரசு கட்டிக்கொடுத்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் இப்போது நம்முடைய மாணவர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும் என்று நிலைமை பறிபோயிருக்கிறது.

ஒருபக்கம் பார்த்தால் தமிழ்நாட்டின் வளங்களுக்காக உழைக்கிற, தமிழ்நாட்டுக் கிராமப்புற மக்களின் குழந்தைகளுடைய மருத்துவர் ஆவதற்கான கல்வி உரிமைகள் பறி போயிருக்கிறது. இது தனிப்பட்ட நபர்களைச் சார்ந்தது. ஆனால் இந்தத் தேர்வை எழுதுபவர்கள் நகரத்துப் பணக்கார வீட்டுக் குழந்தைகள். தனிப்பயிற்சிக்கு பணம் செலுத்த வாய்ப்புள்ளவர்கள்தான் எழுத முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

“இன்று நம் நாட்டில் உள்ள பரீட்சை முறை என்பது மாணவர்களுடைய அறிவைச் சோதிப்பதாக இல்லை, அவர்களுடைய நினைவு சக்தியைச் சோதிப்பதாகத்தான் உள்ளது. இந்த முறையை மாற்ற வேண்டும்” என்று ஆகஸ்ட், 1925ஆம் ஆண்டில் பெரியார் சொன்னார். காலம் காலமாக மந்திரம் சொல்லுபவனுக்குத்தான் இது வாய்ப்பாக இருக்கும். கல்வியே கண்டிராத நம் மாணவர்களுக்கு இது எப்படிப் பயன்படும்? என்பதுதான் அவருடைய கேள்வியாக இருந்தது. ஆனால் அந்தக் கல்வி முறையையும் மெல்ல மெல்ல உள்வாங்கி அதில் வெற்றி பெறத் தொடங்கினோம். 2016ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்களை 17 பேர் வாங்கியுள்ளனர். இதில் 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு பேரில் ஒருவர் இட ஒதுக்கீடு கேட்காத இசுலாமிய தந்தைக்கும், கிறித்துவ தாய்க்கும் பிறந்த திராவிடன் என்ற மாணவர். பெயரைப் பார்க்கும்போதே அவர் யார் என்பது புரிந்திருக்கும். மற்றொருவரும் பார்ப்பனர் இல்லை. நம் மாணவர்கள் 200க்கு 200 பெறுவார்கள் என்ற வாய்ப்பு வந்தவுடன் அவர்களுக்குக் கண்ணை உறுத்துகிறது. இதை எப்படியாவது ஒழித்துக் கட்ட ஒழித்துக் கட்ட வேண்டுமென்று முடிவெடுத்திருக் கிறார்கள்.

கோட்டாவை ஒழிப்பதுதான் எங்கள் கொள்கை என்றார்கள். வரலாற்று ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட நம்மவர்களுக்குத்தான் கோட்டா. அதில் வெற்றி பெறுவது ஒருபக்கம். முதலில் அதனால் பலன் பெறுவது யார்?அய்.அய்.டியில் படிக்கின்றவர்கள் யார் என்று பார்க்க வேண்டி யுள்ளது. படித்து முடித்தவுடன் அவர்கள் இந்தியாவில் பணியாற்றுகிறார்களா? கல்வி கற்ற பகுதியில் பணியாற்றுகிறார்களா என்றால் கிடையாது. 80 விழுக்காட்டுக்கு மேல் அயல்நாட் டுக்குப் பறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வர்க்க நிலைகளைச் சேர்ந்தவர்கள்தான் அங்குப் படிக்கிறார்கள்.

அதேபோல இப்போது நீட்டில் தேர்ச்சி பெறுபவர்களும் பெரும்பாலும் அப்படிப்பட்ட வர்க்க நிலைகளைச் சேர்ந்தவர்களாகத்தான் உள்ளார்கள். இவர்களும் வெளிநாட்டுக்குச் செல்லவும், நகரத்தில் மருத்துவமனை நிறுவுவதற்கும் தான் வருவார்களே தவிர கிராமத்திற்கு வர மாட்டார்கள். இன்னொரு பக்கம் சமூகப் பார்வையில் பார்த்தோமானால், நாம் தமிழகம் முழுவதும் தட்டுத்தடங்காமல் பெற்று வந்த மருத்துவ சேவை பறிபோகிறது. கிராமத்து மக்களுக்கு, ஏழை மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை எதிர்காலத்தில் மறுக்கப்படப் போகிறது.

நீ மருத்துவரானால் என்ன செய்யப் போகிறாய் என்று அனிதாவிடம் கேட்டார்கள். "எங்க அம்மாவுக்கு போதிய மருத்துவம் கொடுக்க முடியாததால் இறந்து போனார். நான் இந்த ஊரில் மருத்துவமனை கட்டி மருத்துவம் செய்வேன்" என்றார் அனிதா. அரியலூரிலிருந்து எங்கோ தொலைவில் இருக்கிற குழுமூரில் மருத்துவமனை கட்டி அந்தப் பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற சிந்தனை நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் இருக்கிறது. இந்த சிந்தனை நகரத்தைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பிள்ளை களுக்கு இருக்குமா?

முதுநிலை மருத்துவம் படிப்பதற்கு நம் அரசு கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். இந்த ஆண்டு மத்திய அரசு அந்த 50 விழுக்காடு இடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடே வழங்கவில்லை. இப்போது அதைப் பற்றி பேசுவதற்குக் கூட இங்கு ஆட்கள் இல்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசில் மிக நீண்ட காலமாக இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. 1951 முதல் அரசியல் சட்டத் திருத்தமே கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கிவிட்டது.

ஆனால் மத்திய அரசின் கல்வி நிலையங்களுக்கு என்று தனியாக ஒரு சட்டம் 2006ஆம் ஆண்டில் தேவைப்பட்டது. அதுவரைக்கும் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு இல்லாத நிலை நீடித்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது மண்டல் குழு அமைத்து, விபி சிங் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் கிடைத்தது. இதற்குக் கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை முழுவதுமாக நிறைவேற்றும் முன்னாலேயே மறுத்துவிட்டார்கள். இப்போது இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். என் வீட்டுப் பிள்ளையை தாழ்த்தப்பட்டவன் திருமணம் செய்து கொண்டான் என்று மீசையை முறுக்கும் யாராவது, எந்த ஜாதி சங்கமாவது என்னுடைய ஜாதிக்கு எப்படி இட ஒதுக்கீட்டை மறுத்தாய் என்று பேச முன் வந்தார்களா என்றால் இல்லை. ஜாதி கூடாது, இல்லை என்று பேசுகிற நாம்தான் முன்வந்திருக்கிறோம்.

(தொடரும்)

செய்தித் தொகுப்பு : ர. பிரகாசு

Pin It