‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர்.

‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் - சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு - நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

பொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக் குறிப்பும் இடம் பெறவில்லை. பிறகு 2018 பிப். 25ஆம் தேதி எழுதிய கடிதத்தில், இந்த எட்டு வழிச் சாலைக்கு அனுமதி கேட்க அடுத்த நாளே பிப்.26ஆம் தேதி மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வந்து விடுகிறது. 277 கிலோ மீட்டர் சாலைக்கு 2900 ஹெக்டர் விவசாய நிலங்களைக் கைப்பற்றப் போகிறார்கள். ஏற்கனவே சென்னை - சேலத்துக்கு நான்கு சாலைகள் இருக்கின்றன. இந்த சாலைகளில் போக்குவரத்து நெருக்கடிகளே இல்லாத நிலையில், இந்தப் புதிய சாலையைப் போட வேண்டிய அவசியமென்ன? இந்த சாலை வசதியைப் பயன்படுத்துவோர் நான்கு சக்கரவண்டிகளைவிட இரண்டு சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவோர்தான் அதிகம். 36 சதவீதம் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமையவிருக்கும் 8 வழிச் சாலையில் கண்டெய்னர்கள் லாரிகளை மட்டுமே அனுமதிக்கப் போகிறார்கள். இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கப் போவது இல்லை; அப்படியானால் இந்த சாலை யாருடைய நலனுக்காகப் போடப்படுகிறது?

janakarajகஞ்சமலையிலிருந்து தாதுக்களை கண்டெய்னரில் துறைமுகத்துக்குக் கொண்டுவர ஜிண்டால் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகப் போடப் படுகிறதா? திட்டத்தை முடிப்பதற்கு 40 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் 2019க்குள் இருக்குமாம். 2019இல் தான் நாடாளுமன்ற தேர்தலும் வரப் போகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த மண்டலத்தில் ஓசூர், கோவை, திருச்சி, காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளோடு கல்பாக்கத்தையும் இணைத் திருக்கிறார்கள். கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் தான் செயல்படுகிறது. இதை பாதுகாப்பு மண்டலத் தில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? அணு மின் நிலையங்கள் வெடிகுண்டுகள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற சந்தேகம் இதன் மூலம் உறுதியாகிறது. இந்தப் பாதுகாப்பு மண்டலத் தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “இனி எவரும் விவசாயத்தில் ஈடுபடாதீர்கள்; விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு வாருங்கள்” என்று வெளிப்படை யாகவே பேசினார். ஆக, தமிழகத்தில் விவசாயத்தை ஒழித்து, இதை இராணுவத்தின் பாதுகாப்பு மண்டலமாக்கும் ஆபத்துகள் தொடங்கி விட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

பேராசிரியர் கே.பி.சுப்ரமணியம் பேசுகையில், “எந்த சாலைகள் அமைத்தாலும் அந்த சாலைகளுக்கான கட்டமைப்பு விதிமுறைகளைக் கண்காணிக்க , ‘இந்தியன் சாலை காங்கிரஸ்’ என்ற அமைப்பின் ஆலோசனை ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். இது சட்ட அங்கீகாரம் பெற்றுள்ள அமைப்பு. ஒரு சாலை அமைக்கும்போது அதற்கு செலவிடும் தொகை நியாயமானதா? செலவிடும் தொகைக்கேற்ப அடுத்து வரும் காலங்களில் பயன்தரக் கூடியதாக இருக்குமா? ஒரு சாலை அமைக்க வேண்டும் என்றால், அதற்கு மாற்றாக வேறு சாலைகள் குறைந்த செலவில் அமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா?அப்படி வாய்ப்புகள் இருக்கும்போது கூடுதல் செலவில் எதிர்காலத்தில் முதலீட்டுக்கு ஏற்ற பயன் தராத சாலைகளை அமைக்க வேண்டுமா? ஒரு சாலை அமைக்கும்போது அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எத்தகையது? இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக்கூடிய மாற்று வழிகளுக்கு சாத்தியமிருக்கிறதா? வேளாண் நிலங்கள் எவ்வளவு கைப்பற்றப்படுகின்றன? வேளாண் நிலங்களை எடுக்காமலே திட்டத்தை அமுல்படுத்த வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது குறித்து ‘இந்தியன் சாலை காங்கிரஸ்’ அமைப்பு ஆய்வு நடத்தும். இந்த ஆய்வுகள் நடத்தி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே சாலை அமைக்கும் பணியைத் தொடங்க முடியும். சாலை அமைக்கும்போது நிலம் கையகப்படுத்துவோர் கருத்தைக் கட்டாயம் கேட்க வேண்டும் என்று இந்த அமைப்பு ஒழுங்கு விதி முறைகளை வகுத்திருக்கிறது. இப்போது அமைக் கப்பட இருக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ‘இந்தியன் சாலை காங்கிரஸ்’ மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இது சட்டப்படி குற்றம்” என்றார் அவர்.

தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனர் பேராசிரியர் ஜனகராஜன் பேசுகையில், “இத்திட்டம் வளர்ச்சிக் கான திட்டம் என்றால் அது யாருக்கான வளர்ச்சி? மக்களுக்கான வளர்ச்சியா? கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான வளர்ச்சியா?” என்று கேள்வி எழுப்பினார்.

‘பசுமை வழிச்சாலை’ என்று கூறுவதே தவறு. இதற்கு ‘புரியாத புதிர்ச் சாலை’ (Mystery Project) என்றுதான் பெயர் சூட்ட வேண்டும். இத்திட்டத் துக்கான தேவை, சாத்தியம் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. திட்ட அறிக்கையில் சாலை போடப்படும் தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களின் வரலாறுகளையே திட்டத்தின் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஜனநாயகம் என்றால், மக்களின் உணர்வுகளை, விழுமியங்களை மதிக்க வேண்டும். நாம் ஒன்றும் அரசர்கள் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. ஜனநாயகத்தில் மக்கள்தான் முதன்மையானவர்கள். ஆனால் மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகள் தான் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்காகவே திட்டங்கள் தீட்டப்படுகின்றன. சென்னையிலிருந்து சேலத்துக்கு இரண்டு மணி நேரத்தில் போய்ச் சேரவேண்டும் என்பதற்கான அவசரம் என்ன வந்தது? மக்கள் அவ்வளவு அவசரமாகப் போய் எதை சாதிக்கப் போகிறார்கள்? எனவே தான் சொல்கிறேன், இது மக்கள் நலனைக் கருதி கொண்டுவரப்பட்ட திட்டம் அல்ல; கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு இப்படி ‘அவசரம்’ தேவைப்படுகிறது.

வளர்ச்சிக்கான திட்டங்கள், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எல்லாம் இப்போது தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படுகிறது. தொழில்நுட்பமே வளர்ச்சித் திட்டத்தை செயல் படுத்தும் தூண்டுதல் சக்தியாக இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் வழியாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சிகள் மக்களுக்குப் பயன்படுவதாகவும் மக்களுக்கு கேடு செய்யாதவையாகவும் இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த எட்டுவழிச் சாலையால் மக்கள் பயனடைவார்கள் என்றால், மக்கள் ஏன் இவ்வளவு கொதித்தெழுந்து போராட வேண்டும்? சுற்றுச் சூழலும் விவசாயமும் ஒரு மக்கள் நல அரசு முன்னுரிமை தர வேண்டிய திட்டங்கள். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படுகின்றன.

ஏராளமான துறைமுகங்களை உருவாக்குவதால் பயனடையப் போவது யார்? ஏற்றுமதி தான் அதன் இலக்கு; கார்ப்பரேட்டுகளுக்குத்தான் அதனால் பயன்.

ஒரு விவசாயிடமிருந்து நிலத்தை எடுப்பது என்றால், அது நிலம் தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல; அந்த நிலத்தோடு வாழ்ந்து, அந்த நிலத்தோடு உறவு கொண்டு, அந்த நிலத்தின் பின்புலத்தில் தனது கலாச்சாரத்தைக் கட்டமைத்துக் கொண்டு ஒரு விவசாயி வாழ்கிறார். வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது அவரது நிலம். திடீரென்று நிலத்தை எடுத்துக் கொள்கிறேன்; அதற்கான இழப்பீட்டைப் பெற்றுக் கொள் என்றால், அந்த விவசாயிக்கு அது உருவாக்கும் உளவியல் அதிர்ச்சி எத்தகையதாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். இந்த ‘அதிர்ச்சிக்கு’ இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க முடியுமா?

நிலத்தை அரசு எடுத்தப் பிறகு, விவசாயிக்கு எழும் கேள்வி என்ன தெரியுமா? அடுத்து என்ன செய்யப் போகிறோம்; எதை செய்யப் போகிறோம் என்பதுதான். விவசாயம் என்பதைத் தவிர வேறு ஏதும் அவருக்குத் தெரியாது; கல்வி அறிவில்லாத ஏழ்மையில் உழலுகிற - விவசாயம் என்பதைத் தவிர வேறு எதுவே தெரியாத, அந்த விவசாயத் தோடு தொடர்புடைய கால்நடைகளை வளர்த்துப் பராமரிக்கிற; தங்கள் பிள்ளைகளை அந்த வருவாயில் படிக்க வைக்கிற; அந்த விவசாயத்தை நம்பி கடன் வாங்கிய ஒரு விவசாயிட மிருந்து நிலத்தை எடுப்பது அவரது வாழ்க்கையையே எடுப்பது; வாழ்க்கை ஓட்டத்தையே நிலைகுலையச் செய்வது அல்லவா?

பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘இழப்பீட்டு’த் தொகை வழங்குவது, விவசாயிகளுக்கான மறு வாழ்வு தருவதாக ஆகிவிடாது. ‘மறுவாழ்வு’ என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு (Rehabilitation is not compensation; It is a process). அந்த விவசாயி பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அவருக்கு உளவியல் அடிப்படையில் ஆறுதலும் நம்பிக்கையும் தரப்பட வேண்டும். அப்படி ஏதும் செய்தார்களா? விவசாயி சார்ந்துள்ள சமூகம் அவரது பின்னணி பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். இதைப் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப் படாமல் காவல்துறையைக் குவித்து வைத்துக் கொண்டு நிலத்தை மீட்பது ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய மாண்பு தானா? நிலத்தை எடுத்துக் கொண்டு ஒரே தவணையில் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள் என்று கூறுவது ஒரு கிரிமினல் குற்றம். நிலத்தோடு தன்னை உணர்வு ரீதியாகப் பிணைத்துக் கொண்டுள்ள விவசாயி, நிலத்தை பறி கொடுக்கும்போது அவர் உடல்நலம் பாதிப்படையக் கூடிய ஆபத்துகள் இருக்கின்றன.

இப்போது நீங்கள் தரும் இழப்பீட்டுத் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறீர்கள்? இதை நிர்ணயிப்பது யார்? விவசாயி களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி பாலம் கட்டி முடித்த பிறகு, நிலத்தின் மதிப்பு மேலும் பன்மடங்கு அதிகரிக்கவே செய்யும். அப்போது நிலம் கொடுத்த விவசாயிக்கு அந்தப் பயன் கிடைக்கப் போகிறதா? சாலையைப் பயன்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அந்தப் பயன்களைப் பெற்று கொழுக்கப் போகிறார்கள்.

பல அய்ரோப்பிய நாடுகளில் இதுபோல் சாலைகளை அமைக்கும் போது விவசாயிகளின் கருத்தைக் கேட்கிறார்கள். சாலை அமைக்க வேண்டுமா வேண்டாமா என்று கேட் கிறார்கள். சாலைகள் அமைத்தால் அங்கே வசூலிக்கப்படும் சுங்கவரி களில் விவசாயிகளுக்கு உரிய பங்கைப் பிரித்து வழங்குகிறார்கள். இப்போது போடப்படும் சாலையின் ஒரு பக்கம் நிலம் இருந்தால் சாலையின் மறு பக்கம் விவசாயிகள் வீடு இருக்கும். அவர் வீடும் நிலமும் துண்டாடப் படுகிறது. ஒரு பகுதி நிலத்திலிருந்து மற்றொரு பகுதிக்குப் போக வேறு ஊர் போய்த் தான் வரவேண்டும். இதற்குப் பெயர் ‘நிலப் பாகுபாடு’ . இதை யெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டீர்களா?

காவிரி பாசனப் பகுதியிலிருந்து இதுவரை 20 சதவீத நிலம் விவசாயம் சாராத திட்டங்களுக்கு எடுக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் நகர்ப்புற மாதல் அதிகரித்திருக்கிறது. 48 சதவீதம் மக்கள்தான் கிராமத்தில் வாழ் கிறார்கள். 52 சதவீதம் பேர் நகரத்துக்குக் குடிபெயர்ந்து விட்டனர். இப்படி நகரமயமாவது வளர்ச்சியின் காரணமாக அல்ல; கிராமங்களில் உருவாகும் வறட்சி, நெருக்கடி, வேலை வாய்ப்பின்மைதான். அவர்களை நகரங்களை நோக்கித் தள்ளுகின்றன. வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்களுக்காக அல்ல; கார்ப்பரேட் நலன்களுக்காகவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றார் பேராசிரியர் ஜனகராஜன்.

வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் பேசுகையில், “தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நிர்வாகம் அடக்குமுறையும் மிரட்டலையும் கையில் எடுத்திருப்பதை சுட்டிக் காட்டினார். மக்கள் நலனுக்காகக் குரல் கொடுப் போருக்கு ‘சமூக விரோதிகள்’, ‘நக்சலைட்டுகள்’ என்று பட்டம் சூட்டப்படுகிறார்கள். நிலம் கையகப் படுத்துதல் குறித்து 2013இல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டம் உள்ளூர் மக்கள், கிராம பஞ்சாயத்துக்கள் ஆலோசனை பெற வேண்டும். சமூக ரீதியான பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று பல்வேறு நல்ல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அம்சங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, அரசு விரும் பினால் நிலத்தை எடுக்கலாம் என்று 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெடுஞ்சாலைத் துறை சட்டத்தைப் பயன்படுத்தி இப்போது நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. 1956ஆம் ஆண்டு நெடுஞ்சாலைக்கான சட்டத்தை 2013ஆம் ஆண்டு சட்டம் கட்டுப்படுத்தாது என்று விதிவிலக்கு கொடுத்து விட்டார்கள் என்றார் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்.

தொடர்ந்து பார்வையாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பேச்சாளர்கள் விளக்கங்களை அளித்தனர். கடும் அச்சுறுத்தல், கெடுபிடிகளுக்கிடையே ‘பூவுலகின் நண்பர்கள்’ ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கு செறிவான விளக்கங் களைத் தருவதாக அமைந்திருந்தது. கூட்டம் தொடங்கும் முன்பே இருக்கைகள் நிரம்பி வழிந்தன.