ஈரோடு இடைத் தேர்தல் வந்தாலும் வந்துச்சி; அக்கிரகார (அல்லது மயிலாப்பூர் ஆடிட்டர்) தி.மு.க. எனும் அதிமுக முகத்திரை கிழிஞ்சு தொங்குது என்றார் ஒரு நண்பர்.

“நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்; முகத்திரை ஒன்றை மாட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு அவ்வளவு வீரம். பல ஆண்டுகாலம் ஒன்றாகப் பயணித்த சொந்தக் கட்சிக்காரர்களிடம் முண்டாவைத் தூக்கி கட்டிப் புரண்டு திருப்பி திருப்பி அடிப்பார்கள். தூக்கிப் போட்டு மிதிப்பார்கள். ஆனால் பா.ஜ.க. என்று வந்து விட்டால் அவ்வளவு தான்! நீ யார்ரா, முதலில் போய் பா.ஜ.க.வைக் காலைப் பிடிப்பது? எனக்கில்லாத உரிமை உனக்கு வந்து விட்டதா? என்று மீண்டும் யுத்தக் களத்தில் வீரத்துடன் இறங்குவார்கள்.

‘அமைதிப் படை’ படத்தில் சத்யராஜ் ஆடையைக் துவைப்பதில் தனது சீனியாரிட்டி உரிமையை விட்டுக் கொடுக்காமல் மணிவண்ணன் போராடும் வீரம்செறிந்த காட்சி நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பு அல்ல.

ops 217பா.ஜ.க.வின் ‘புனிதத்தலமான’ குஜராத்துக்கே யாத்திரை போயிருக்கிறாராம் ஓ பன்னீர்செல்வம். அழைக்கச் சொன்னது மோடி தான் என்கிறது ‘அவாள்’ ஏடான ‘தினமலர்’. “ஓ, எனது சுயமரியாதைக்கே, இது சவால். முதல் அழைப்புப் பெற வேண்டியவன் இங்கே இருக்கிறேன்; அந்தப் பன்னீருக்கு மட்டும் மரியாதையா?” என்று குமுறுகிறதாம் எடப்பாடி பழனிச்சாமி வட்டாரம்.

பா.ஜ.க. போட்டியிட்டால் நாங்கள் எதிர்த்து நிற்க முடியாது. பா.ஜ.க.வைத்தான் ஆதரிப்போம். அது எங்கள் பிறவிக் கடமை என்கிறார், பன்னீர்செல்வம். கமலாயம் போய் கதவைத் தட்டி எங்களுக்கு கருணை காட்டுங்கள் என்கிறார் எடப்பாடி.

கடைசியில் பா.ஜ.க.வை போட்டியிட வைத்து இரண்டு பிரிவுகளும் பட்டுக் கம்பளம் விரித்து, ‘ஆரத்தி’ எடுக்கத் தயாராகி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. என்ன நடக்கப் போகிறதோ நமக்குத் தெரியாது.

“அம்மா இல்லாதது இவர்களுக்கெல்லாம் குளிர்விட்டுப் போச்சு” என்றார் நண்பர். அம்மா பா.ஜ.க.வின் நீட் தேர்வை நடத்த மறுத்தார்; பா.ஜ.க.வின் உதய் மின் திட்டத்தை ஏற்க மறுத்தர்; ஒருமைப்பட்டுக்குக் குழு கூட்டத்தில் தனக்கு உரிய நேரம் பேச அனுமதிக்காததைக் கண்டித்து மோடி முகத்தில் கரியைப் பூசி வெளிநடப்பு செய்தார்; பா.ஜ.க. கூட்டணியே வேண்டாம் என்று தனித்துப் போட்டியிட்டு அந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடினர். ‘என்னைத் தூங்க விடாமல் செய்து விட்டார் ஜெயலலிதா’ என்று பா.ஜ.க. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெளிப்படை யாகவே புலம்ப வைத்தவர் அம்மா!

இப்போது எல்லாமே தலைக் கீழ் தான். அய்யோ மோடி என்ன நினைப்பாரோ? அமீத்ஷா என்ன நினைக்கிறாரோ? என்றெல்லாம் தொடை நடுங்கிக் கிடக்கிறது, ‘அம்மாவின்’ பெயரில் கட்சி நடத்தும் பா.ஜ.க. ‘பரம ரசிகர்கள்’ கழகம்!

ஈரோட்டில் தேசியக் கட்சி காங்கிரஸ் பேட்டியிடுவதல் மற்றொரு தேசிய கட்சி பா.ஜ.க. போட்டியிடுவது தானே சரி என்றார் நண்பர்.

என்னது, பா.ஜ.க. தேசிய கட்சியா? அது ‘பாசிச தேசியக் கட்சி’யப்பா; நடப்பது; மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல்; இங்கு எந்தத் தேசிய ‘புடலாங்காயும்’ தமிழ்நாடு பிரச்சினையைத்தான் பேச வேண்டும்! என்று பதில் கூறினேன். அ.இ.அ.தி.மு.க.வும் அகில இந்திய அண்ணா தி.மு.க.தானே. அதிலிருந்து அகில இந்தியாவை அகற்றி விடுவீர்களா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டேன்.

இதற்கெல்லாம் ஓ.பி.எஸ். ‘கப்சிப்’ அமீத்ஷாவிடம் அல்லது குருஜி மயிலை ஆடிட்டரின் விளக்கம் பெற்று பதில் கூறுவார். மீண்டும் முதலமைச்சர் கனவில் மிதக்கும் எடப்பாடியைக் கேட்டார், ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது; பா.ஜ.க.வின் ஆதரவுக்காக கால்கடுக்கக் காத்திருக்கிறேன்’ என்பார். இவர்கள் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம்! வாழ்க நாமம்!

- கோடங்குடி மாரிமுத்து