திராவிட இயக்கம் மற்றும் சோஷலிசக் கொள்கைகளால் தமிழ்நாட்டிலிருந்து ‘பிராமணர்கள்’ துரத்தப் பட்டார்கள் என்று ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னல்’ ஏட்டில் துமா என்ற பார்ப்பனர் எழுதிய கட்டுரையை மறுத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.

சமூக நீதி இயக்கம், அனைவரையும் உள்ளடக்கியது. அதன் பயன்களை இன்றைக்குத் தமிழ்நாடு அடைந்துள்ளது. மக்களுடைய அனுபவங்களால் மட்டுமல்லாது, அசைக்க முடியாத தரவுகளின் அடிப்படையிலும் இது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டைப் பற்றி வேறொரு சித்திரமும் தீட்டப்படுகிறது. சமூக நீதி இயக்கமான திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்கள் என்ற பொய் பிரச்சாரமே அது!

ptr palanivel thiagarajanஅமெரிக்காவின் மூன்று பெரும் பத்திரிகைகளில் ஒன்றான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றிச் சொல்லாதது ஏன்?’ என்ற தலைப்பில் துமே என்பவர் எழுதியதே இப்படி ஒரு கட்டுரையை என்னை எழுதத் தூண்டியது. மிக மேலோட்டமானதாகவும், சிக்கலான பிரச்சினைகள் குறித்த தவறான புரிதலோடும் அது எழுதப்பட் டுள்ளது.

கமலா ஹாரிஸும் துமேவும்: கமலா ஹாரீஸின் தாயார் சியாமளா கோபாலன் பிறந்த ‘பிராமணர்’கள் சமூகம் தொடர்பில் அமெரிக்கர்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் துமே. இந்தக் கருத்தின் உள்கூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் ‘Cautionary Tale of Excess’ என்பார்கள், அதாவது அதைப் படிப்பவர்களுக்கு ஓர் அதிகப்படியான அபாய எச்சரிக்கையை உண்டாக்கும். அதற்கு மாறாக, விரிவான தமிழ் அரசியல் வரலாற்றைப் படிக்க வேண்டும். அது படிப்பினைகளை வழங்கும் என்பதே எனது கருத்து.

தமிழ்ப் பிராமண சமூகம் தங்கள் சொந்த மாநிலத்தில் நியாயமற்ற விதத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் துமே.

இந்த விளிம்பு நிலையாக்கலுக்கு கமலா ஹாரிஸுடைய தாய் சியாமளா கோபாலன் (புலம் பெயர்வு 1958) போன்ற தமிழ்ப் பிராமணர்களின் புலம்பெயர்வு சான்றாகிறது; மேலும், முன்னாள் பெப்சி தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி (புலம்பெயர்வு 1978), கூகுள் அதிகாரி சுந்தர் பிச்சை (புலம்பெயர்வு 1993) மற்றும் துமேவால் பெயர் குறிப்பிடப்படாத பலர், நோபல் பரிசு பெற்ற இருவர் உட்பட பலரின் எடுத்துக்காட்டுகள் துமேவின் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய தமிழ்ப் பிராமணர்களின் புலம் பெயர்வு... அவர்களின் பூர்விகமான தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் குறிப்பிடத்தக்க இழப்பு என்கிறார் துமே.

இந்த புலம்பெயர்வுக்குக் காரணங்கள்: சோஷலிஸம் மற்றும் அடையாள அரசியல்; அதாவது திராவிட அரசியல் என்கிறார் துமே.

கடைசியில் துமே இத்தகு கொள்கை முடிவுகளுக்குச் செல்கிறார்: சோஷலிஸ கோட்பாடும் அடையாள அரசியலும் மக்களுக்கும் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் கேடு – இதற்கு தமிழ்நாடு வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதே சான்று என்கிறார்.

இதற்கெல்லாம் எந்தப் புள்ளிவிவரத்தையும் துமே காட்டவில்லை.

பிராமணர்கள் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்ததற்காகக் கூறப்படும் ‘துரத்தப்பட்டார்கள்’ என்ற காரணம் அற்பமானதாக இருக்கிறது. அமெரிக்காவுக்கு உலகெங்கிலுமிருந்து புலம்பெயர்வு நிகழ்கிறது. மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் நிலவும் பொதுவான கண்ணோட்டம் என்னவென்றால், இது பெரும்பான்மையாக ஒடுக்கு முறையின் காரணமாக அல்ல, வாய்ப்புகளின் அடிப்படையிலான புலம்பெயர்வே என்பதுதான்.

அமெரிக்காவின் குடிவரவு சேர்க்கைக்கான முன்னுரிமைகளெல்லாம் பெருமளவில் அதிக திறன் – பங்களிப்பு - மதிப்பு கொண்டவர்களுக்கு சாதகமான வகையில் இருப்பதால் இந்தப் புலம்பெயர்வு சாத்தியமாகிறது. ஆனால், இந்தப் பொதுச் சட்டகத்துக்கு அப்பால், துபேவால் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பேருமே பொதுவான ஒன்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் பட்டதாரி மாணவர்களாக அமெரிக்காவில் நுழைந்தனர் - நானும் அவர்களைப் போல மாணவனாகத்தான் அமெரிக்கா சென்றேன்.

இன்று அமெரிக்காவில் உலகிலேயே சிறந்த பட்டதாரிக் கல்வி முறை உள்ளது (எண்ணிக்கை, தரத்தின் அடிப்படையில்). எனவே, இது உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் ஆர்வமுள்ள மாணவர்களை அதிக அளவில் தன்வசம் ஈர்க்கிறது. அப்படிப் பட்டம் படிக்கச் சென்றவர்கள்தான் இவர்கள்; தமிழ்நாட்டிலிருந்து துரத்தப்பட்டவர்கள் அல்ல.

குறைந்தது 19ஆம் நூற்றாண்டிலிருந்து சிறந்த சர்வதேசக் கல்வியை நோக்கிச் செல்வதற்குத் தமிழ்நாட்டின் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. நீதிக் கட்சியின் தலைவர்கள் பலர், பெரும்பாலும் பிராமணரல்லாத மேல்தட்டு வர்க்கத்தினர், அப்போதைய சிறந்த உயர் கல்வியிடமாக கருதப்பட்ட பல்கலைக்கழங்களில் (ஆக்ஸ்ஃபோர்டிலும் கேம்பிரிட்ஜிலும்) கல்வி கற்றனர். நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான என் தாத்தா 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லண்டனில் உள்ள தி லேஸ் பள்ளி, இயேசு கல்லூரி (ஆக்ஸ்போர்டு) மற்றும் லண்டன் இன்னர் டெம்பிள் ஆகியவற்றில் கல்வி கற்கும் வசதியைப் பெற்றிருந்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் பெரும் முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியக் கல்விச் சூழல் என்பது அமெரிக்கக் கல்வி அமைப்புடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை. தேவையுள்ள அனைவருக்கும் இடமளிக்கும் அளவுக்கு இந்தியக் கல்வி அமைப்பு இல்லை. இதன் விளைவாக மிகச் சிறந்த திறமைசாலிகள் மட்டுமே அமெரிக்காவுக்குப் பட்டப் படிப்பு படிப்பதற்குச் செல்ல முடிந்தது. எனவே, சியாமளா கோபாலன், இந்திரா நூயி, சுந்தர் பிச்சை மற்றும் பல தமிழ் “பிராமணர்”களால் இத்தகைய விசாலமான லட்சியத்தை நோக்கிச் செல்ல முடிந்தது; பெரும்பான்மையினரால் அப்படிச் செல்ல முடியவில்லை, என்பதே உண்மை. மேலும் தரமான கல்வி பெறும் நோக்கத்துக்காக அந்த வாய்ப்புகள் அவர்களுக்கு மட்டுமே இருந்ததால் புலம் பெயர்ந்தனர்.

அமெரிக்காவில் அதிக அளவு தமிழ்ப் “பிராமணர்கள்” இருக்கிறார்கள் என்ற அவர் கூற்றை (இது ஆதாரமற்றது) நாம் எடுத்துக் கொண்டால், இவ்வளவு சிறிய சமூகத்திலிருந்து இவ்வளவு அதிகமானோரால் எப்படி அமெரிக்காவுக்குச் செல்ல முடிந்திருக்கிறது. துரத்தப்பட்டார்கள் என்ற கூற்றுக்கு இதுவே மறுப்பாகவும் கூற முடியும்.

துமேவின் ஈவிரக்கமற்ற, முற்றிலும் தவறான கருத்து என்னவென்றால் அடையாள அரசியல் காரணமாகத் தமிழகத்தில் மோசமான சமூக-பொருளாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன என்பதுதான். இதைவிட உண்மைக்குப் புறம்பானது எதுவும் இருக்க முடியாது.

துமே அடையாள அரசியல் என்று சொல்வது நூற்றாண்டு பழமையானதும், சமூக நீதியைக் குறிக்கோளாகக் கொண்டதுமான நமது திராவிட இயக்க அரசியல் ஆகும்.

1920 முதல் இந்த நூறு ஆண்டுகளில், சுமார் 30 ஆண்டுகளைத் தவிர திராவிட இயக்கக் கோட்பாடுகளை ஆதரிக்கும் கட்சிகள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிற மாகாணங்களிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைவிட திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாக இருந்தன (எ.கா. கோயில் நுழைவுக்கான உரிமைகளை உறுதி செய்வது, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கை, மாநிலம் முழுவதும் இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல்). (ஆதாரம்: ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், தேசிய சுகாதார அறிக்கைகள் 2019, 2020)

திராவிட இயக்கக் கொள்கைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றியதன் காரணமாக ஒரு தனித்துவமான நிலைக்குத் தமிழ்நாடு (இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில்) வந்துள்ளது- இது திராவிட (தமிழ்நாடு) மாதிரி என்று அழைக்கப்படுகிறது.

ஒப்பீட்டளவிலான இந்த முன்னேற்றத்தின் ஆகச் சிறந்த ஆதாரமாக, சென்னையில் 2018-ல் திமுக சார்பாக இந்தியாவின் 15-வது நிதி ஆணையத்தின் விசாரணையின்போது நான் அளித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று அழைத்தாலும் அது மையப்படுத்தப்பட்டதாகவும் கூட்டாட்சி அல்லாத முறையாகவுமே இயங்குகிறது, அதாவது சீனாவை விடவும் மையப்படுத்தப் பட்டதாக உள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு நேரடி வரிகளில் பெரும்பாலானவற்றை வசூலிக்கிறது, பின்னர், அவற்றை மாநிலங்களுக்கு முறையாக வழங்குவது இல்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையங்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி ஒதுக்குகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கானது அதன் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பங்களிப்பு பெரும்பாலும் அதிகரித்துவந்தும், மத்திய வரி வருவாய்ப் பங்கிலிருந்து இருந்து நமக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு 7%-க்கும் குறைந்து 4% -ஆக உள்ளது. எளிமையான சொல்வதென்றால், நாம் தொடர்ந்து ஒப்பீட்டளவில் பணக்கார மாநிலமாக வளர்ந்து வருகிறோம், மேலும் பெரிய மொத்த வரிக் கொடையாளர்களாகி வருகிறோம்.

மேலும் ஒரு படி மேலே சென்று, சில குறியீட்டெண்களில், தமிழகம் OECD (Organisation for Economic Co-operation and Development) உலக நாடுகள் அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் கூறுவேன்.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான தத்துவம் அல்லது ஆட்சி முறை என்று ஒன்று இல்லாத நிலையில், தற்போதுள்ள அனைத்து மாதிரிகளும் ஏதோ ஒரு வகையான குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. திராவிட மாதிரியை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவன் நான் என்றாலும், அந்த மாதிரியில் பல பரிமாணங்களில் இன்னும் முன்னேற்றங்கள் தேவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் துமே சுட்டிக்காட்டும் குறைபாடுகளுடன் தரவுகள் பொருந்திப் போகவில்லை. அவரது அனுமானங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ஆயிரம் ஆண்டுகளாக சாதிக் கட்டமைப்புகளில் பொதிந்துள்ள பாகுபாட்டைக் கொண்ட ஒரு மண்ணில் ஒரு நூற்றாண்டுக்குள் அதிவேகமான திராவிட மாதிரியின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தன்னிகரற்ற விளைவுகளை அடைந்துள்ளது என்பதைத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.

இது ஒன்றும் சாதாரண சாதனை இல்லை. எனவே, இது குறித்து துமே மட்டும் அல்லாது இப்படிப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், முழுமையாகக் கற்றுணர்ந்து, முறையான கொள்கைப் பாடங்களைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது.

(அமைச்சர் தனது கட்டுரைக்கு சான்றாக இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் குறித்த ஏராளமான புள்ளி விவரச் சான்றுகளை இணைத்துள்ளார்)