நிதியமைச்சரின் வரவேற்கத்தக்க சட்டம்

குரூப் 4, வி.ஏ.ஓ போன்ற நான்காம் நிலை ஊழியர்கள் கிராம அதிகாரிகள் தேர்வுக்கு, பங்குபெறும் மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு மிகப்பெரும் தடையாக இருந்து வருகிறது. ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் கிராமங்களிலிருந்து வரக்கூடிய இளைஞர்கள் பின்னடைவை சந்திக்கின்ற சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வி.ஏ.ஓ குரூப் 4 தேர்வுகளுக்கு ஆங்கிலத் தேர்வு இரத்து செய்யப்பட்டது உண்மையிலேயே சமூக நீதிக்கு வழங்கப்பட்ட ஒரு கொடையாகும்.

தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்த அறிவிப்புப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன.

அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்ட பூர்வமான வாரியங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வாரியங்களின் பணியிடங்கள் ஆகிய அனைத்திலும் பணி இடங்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தின் வழியாகவே நிரப்பப்படும் என்ற சட்டத்தை, தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். இதன் மூலம் பல துறைகளில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெறும் ஊழல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கிற முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு இருக்கிறது. இது நியமனங்களில் ஊழல்களை தடுக்க உதவுவதோடு, வெளிப்படையான தேர்வு முறைக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இந்த ஆணை அமையும். தகுதி இருந்தால் நிச்சயம் தமிழ்நாடு அரசின் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை நிதியமைச்சரின் இந்த சட்டம் உருவாக்கியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3.10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். பல இடைத்தரகர்கள் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்கின்ற செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இந்த அறிவிப்பு இருக்கிறது.

ஊழல் ஒழிப்பு என்பது அவ்வளவு ஒரு சாதாரண பிரச்சனை அல்ல. முற்றிலுமாக ஊழலை ஒழிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்பதை நாம் நிச்சயமாகக் கூறிவிட முடியாது. அது இந்த சமூகத்தில் புரையோடிப்போயுள்ள ஒரு பண்பாகும். ஜாதி அமைப்பிலிருந்தே ஊழல் என்ற அமைப்பு தோன்றி விடுகிறது. கடவுளுக்குக் கூட இலஞ்சம் கொடுத்து தான் பிரார்த்தனை செய்ய முடியும் என்ற சமூக நிலையை பக்தியின் பெயரால் உருவாக்குகிறோம். எனவே ஊழலை முற்றிலுமாக ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்று சொன்னாலும், அதற்கான முயற்சிகளை ஒரு ஆட்சி தொடங்கும் போது நாம் நிச்சயமாக வரவேற்கத் தான் வேண்டும். அந்த வகையில் டி.என்.பி.எஸ். சி இன் சமூக நீதி அறிவிப்பும், தமிழ்நாடு நிதி அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பும் வரவேற்கப்பட வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்