டி.ஒய். சந்திர சூட், ஏ.எஸ். போபண்ணா ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற இருவர் அமர்வு கடந்த 7ஆம் தேதி ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவம், மருத்துவ உயர் பட்டப் படிப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டப்படி செல்லும் என்பது தான் அந்தத் தீர்ப்பாகும்.

அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப முடியாது என்று மறுத்து வந்தது மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்திலே இதற்கு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. கடந்த ஆண்டு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 4000 இடங்கள் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்துள்ளது. இது திமுக ஆட்சி - அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத் தந்த சமூக நீதியாகும்.

உயர்ஜாதிகளுக்கான 10% இட ஒதுக்கீடு அவசர அவசரமாக ஜனவரி 2019, 14ஆம் தேதி கொண்டு வந்து மூன்றே நாட்களில் 17ஆம் தேதி அதற்கான அரசு அறிவிப்பையும் வெளியிட்டு, அந்தப் பிரிவின் கீழ் வருபவர்களுக்கு ஆண்டு வருமானம் 8 இலட்ச ரூபாய் என்றும் ஒன்றிய அரசு அறிவித்தது. உச்ச நீதிமன்றம் இதில் பல கேள்விகளை கேட்டது. மூன்றே நாட்களில் வருமான வரம்பை எப்படி முடிவு செய்தீர்கள்? இதற்கு ஒன்றிய அரசு ஒரு பதிலை தந்தது. முதலில் தாக்கல் செய்த மனுவில் ஓபிசிக்கு நிர்ணயித்த அதே 8 இலட்ச ரூபாயை அப்படியே எடுத்துக்கொண்டோம் என கூறியது. உச்சநீதிமன்றம் இதை ஏற்கவில்லை. பின்னர் அஜய் பூஷன் என்பவர் தலைமையில் (ஒன்றிய நிதியமைச்சக அதிகாரி) ஒரு நிபுணர் கமிட்டியை நியமித்து நாங்கள் விரிவாக ஆய்வு செய்தோம், விரிவாக ஆய்வு செய்ததற்குப் பிறகே இந்த வருமான வரம்பிற்கு வந்தோம் என்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

நீதிபதிகள், முதலில் ஓபிசி பிரிவினருக்கு நியமித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டோம் என்று கூறியவர்கள், இப்போது ஏன் மாற்றிப் பேசுகிறீர்கள் ஏன் இந்த முரண்பாடு என்ற கேள்விகளெல்லாம் கேட்டு அவர்கள் திருப்தி அடையாத நிலையில் இந்த வழக்கை தள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நடப்பு ஆண்டில் நீட் கவுன்சிலிங் உடனடியாக நடத்தப்பட வேண்டும். 10 சதவீத பிரிவின் கீழ் வருபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற காரணத்தைக் காட்டி எப்படியாவது விரைந்து முடிக்க வேண்டும் என்று துடிப்பு காட்டியது ஒன்றிய அரசு. 27 சதவீத ஓபிசி ஒதுக்கீட்டைவிட 10 சதவீத முன்னேறிய ஜாதி ஒதுக்கீடு தான் முக்கியம். அதன் காரணமாக உச்சநீதிமன்றம் தற்போது, இந்த ஆண்டிற்கு மட்டும் 8 இலட்சம் வருமான வரம்பை வைத்து நிரப்பிக் கொள்ளுங்கள் ஆனால் இது இறுதித் தீர்ப்பு அல்ல மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு வரும் என்ற நிபந்தனையோடு இப்போது இந்த 8 இலட்ச வருமான வரம்பிற்கு அனுமதி அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி எடுத்த முயற்சிகளால் 27% இட ஒதுக்கீடு கிடைத்தது வெற்றி என்று கூறினாலும், அரசியல் சட்டத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முன்னேறிய ஜாதியினருக்காக தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி கொள்கைக்கு ஒரு பின்னடைவு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்