உங்களுக்குத் தெரியுமா ஒரு ஆச்சர்யமான செய்தி, ஆனால் உண்மை. புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளின்மேல் எந்த விதமான உடல் வாசனையும் இருக்காதாம்.

பெண்மான் ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்றிருந்தாலும், பெரும்பாலும் குட்டிகள் தாயை விட்டு தனியாகவே இருக்க நேர்கிறது. தாய் அருகிலிருந்தால் தாய்மானின் வாசனை மற்ற விலங்குகளுக்கு மானின் இருப்பிடத்தையும், குட்டிகளையும் காட்டிக் கொடுத்து விடும்.

மான்குட்டிகள் பிறந்து சில நிமிடங்களில் எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்து விடுகின்றன. தாயுடன் சென்று இரை தேட, பிறந்து ஓரிரு வாரங்கள் ஆகிவிடுகிறது. எனவே தாய்மான் இரை தேட வேண்டிய கட்டாயமான தருணங்களில் துணிந்து குட்டிகளை தனித்து விட்டுச் செல்கின்றன. அத்தருணங்களில் குட்டிகள் ஒன்றுக்கு மேல் இரண்டு அல்லது மூன்று இருந்தால், இரை தேடச் செல்லும்போது அவைகளை வெவ்வேறு இடங்களில், பிற மிருகங்களிடம் சிக்கிவிடாமல், பாதுகாப்பு கருதி தனித்தனியாக விட்டுச் செல்கிறது. குட்டிகளின் தனிமை அவைகளை பத்திரமாக இருக்கவே உதவுகிறது.

மான்குட்டிகள் பிறந்த முதல் பல நாட்களுக்கு அவைகளின் மேல் எந்தவித குறிப்பிட்ட வாசனையும் இருக்காது எனத் தெரிய வருகிறது. எனவே ஓநாய், காட்டுப் பூனை போன்ற எதிரி விலங்குகளின் கண்களுக்கு மான்குட்டிகள் இருப்பது தெரிவதில்லை.

சிகப்பு கலந்த தவிட்டு நிறத்துடன் கூடிய வெண்புள்ளிகளுடைய மான்குட்டிகளின் உடல் தோல் அவைகளுக்கு பாதுகாப்பைத் தருகிறது. இத்தோற்றம் காட்டின் மரக் கிளைகளுக்கு ஊடாக தரையில் விழும் சூரிய ஒளியின் புள்ளி புள்ளியான தோற்றத்தை ஒத்திருப்பதால் விலங்குகள் அக்குட்டிகளின் மேல் தடுக்கினால் ஒழியத் தெரிவதில்லையாம்

எனவே, வனசரணாலயங்களுக்கு நாம் செல்ல நேரிடும்பொழுது, புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளைக் காண முடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள். புள்ளிமான் குட்டிகளுக்கு இயற்கை கொடுத்த வரத்திற்கு நன்றி சொல்வோம்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It