பாரத ஒற்றுமைப் பயணத்தில் இருக்கும் இராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்-அய்ப் பார்த்து, “ஆர்.எஸ்.எஸ். என்றைக்குமே பெண்களை மதிக்காத இயக்கம்” என்று கூறியிருக்கிறார். இது 100% உண்மை. ஆர்.எஸ்.எஸ்.இல் ஒரு ‘சுவயம் சேவக்’காக இதுவரை பெண்கள் சேர்க்கப்படுவதே இல்லை. தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராகக் கூட வர முடியும், ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இல் சுவயம் சேவக்காக வர முடியாது. வானதி சீனிவாசனுக்கும் அதே நிலைதான். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இன் முன்னணி அமைப்புகளை உருவாக்கி அதில் பெண்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சுவயம் சேவக்காக மட்டும் இன்று வரை அவர்கள் பெண்களை சேர்ப்பது கிடையாது. இராகுல் காந்தி எழுப்பியிருக்கிற முக்கிய கேள்வி, ‘ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை முன் வைக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏன் ஜெய் சீதா என்ற முழக்கத்தை முன் வைக்கவில்லை?’ இது ஒரு நியாயமான கேள்வி.

சீதையைப் பொறுத்தவரை இராமனுடைய கட்டளைகளை பல இடங்களில் மீறி தன்னுடைய உரிமையை நிலை நாட்டியிருக்கிறார் என்று நம்மால் கூற முடியும். முதலில் இராமன் காட்டிற்கு செல்லும் போது சீதை தன் உடன் வர வேண்டாம் என்று இராமன் கட்டளையிடுகிறான். ஆனால் சீதை அதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. நானும் உன் உடன் வருவேன் என்று இராமனுடன் காட்டிற்குள் சீதை இருக்கும் குடியிருப்பு அருகே இராமனுடைய தம்பி இலட்சுமணன் ஒரு நீண்ட கோட்டைப் போட்டு இந்தக் கோட்டைத் தாண்டி சீதை வரக்கூடாது, வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கிறான். ஆனால் இலட்சுமணன் போட்ட கோட்டை சீதைத் தாண்டி விடுகிறாள். அதன் காரணமாகத்தான் இராவணனால் சீதை கடத்தப்படுகிறாள் என்று இராமாயணம் கூறுகிறது.

ஒரு திரைப்படத்தில் கூட ஒரு பாடல் இப்படி வருகிறது, ‘கோடு போட்டு நிற்கச் சொன்னான், சீதை நிற்க வில்லையே! சீதை அங்கு நின்றிருந்தால் இராமன் கதை இல்லையே!’ என்று அந்தப் பாடல் வரிகள் வரும். இலட்சுமணன் போட்ட கோட்டைத் தாண்டியதால் தான் இராமாயணம் என்ற ஒன்றே நிகழ்ந்தது என்று நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். காட்டிலிருந்து நாட்டுக்கு திரும்பியவுடன் சீதையின் கற்பின் மீது இராமனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எனவே தீயில் இறங்குமாறு சீதைக்கு இராமன் கட்டளையிடுகிறான். இராமன் கட்டளையை ஏற்றுக் கொண்டு சீதை நெருப்பில் இறங்கி தன்னுடைய கற்பை நிரூபிக்கிறாள். ஆனால், அதே போல் இராமனும் தன்னுடைய கற்பை நிரூபிப்பதற்கு தீயில் இறங்குவதுதான் நியாயம். ஆனால் இராமன் தீயில் இறங்கவில்லை. இறுதியாக, இராமன் சரயு நதிக்கரையில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான் என்று இராமாயணம் கூறுகிறது. சீதையினுடைய வாழ்க்கை, இராமனுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை என்பது இப்படி பல துயரங்களைக் கடந்து வந்த வாழ்க்கையாகவே இருந்திருக்கிறது.

திருமண வீடுகளில் வாழ்த்துபவர்கள் கூட இராமன் - சீதையைப் போல வாழ வேண்டும் என்று வாழ்த்துவதற்கு எவரும் தயாராக இல்லை. அவர்களைப் போல வாழ்ந்தால் வாழ்க்கை நிச்சயம் நிம்மதியாக இருக்க முடியாது என்று அனைவருக்கும் தெரிந்த செய்தியாக இருக்கிறது. ஆனாலும், இவைகளெல்லாம் இந்த நாட்டின் புனித காப்பியங்களாக போற்றப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் புராணங்கள் என்று கூறப்படுபவையும், இலக்கியங்கள் என்பவைகளும் பெண்களுடைய அடிமைத்தனத்தைத் தான் வலியுறுத்து கின்றன என்பது தான் பெரியாருடைய கருத்தாக இருந்திருக்கிறது.

பெரியார் கூறிய காரணம், ‘இந்த இலக்கியங்களையும், புராணங்களையும் உருவாக்கியவர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்’ என்பது தான். இராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். அய்ப்  பார்த்து, ‘பெண்களை நீங்கள் சீதையை ஏன் மதிப்பதில்லை?’ என்ற கேள்வி மிகவும் அர்த்தம் வாய்ந்தது.

பம்பாய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வந்தது. வழக்கைத் தொடர்ந்த பெண், கணவன் பணிமாற்றலாகிப் போகும் இடம்தோறும் தானும் போக முடியாது என்பது வழக்கு. தீர்ப்பளித்த நீதிபதி ராமனுடன் 14 ஆண்டுகள் காட்டில் கணவனுக்காக வாழ்ந்ததே இந்திய மனைவிகளுக்கு முன் உதாரணம் என்று தீர்ப்பளித்தார். இப்படிப் பழமைச் சிந்தனையில் ஊறிப்போன நீதிபதிகளும் இருக்கிறார்கள். திருமணம் செய்யாது பிறக்கும் குழந்தைகளுக்கும் சட்டப்படி உரிமை உண்டு என்று தீர்ப்பளிக்கும் உச்சநீதிமன்றத்தின் சந்திரசூட் போன்ற நீதிபதிகளும் இருக்கிறார்கள். ‘இந்து தர்மம்’ பெண்களை ‘சூத்திரர்கள்’ பட்டியலில் தான் வைத்துள்ளது. அவர்களுக்குப் பூணூல் போடும் உரிமையோ, புரோகிதம் செய்யும் உரிமையோ தடைபடுத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா, அய்யப்பன் கோயிலுக்குள் நுழைய முடியாது. சமூகத்தின் சரிபாதி இனத்தை தர்மம், சாஸ்திரம், சடங்குகளால் அடிமையாக்கி வைத்திருக்கும் பார்ப்பனியம், அழியாத வரை பெண்ணுரிமை சாதி ஒழிப்பு சாத்தியப் படாது. இராகுல்காந்தி போன்ற தலைவர்களிடமிருந்து இப்படி ஒரு பெண்ணுரிமை சிந்தனை வெடித்துக் கிளம்பியிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதுதான்!

- விடுதலை இராசேந்திரன்