ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி பேசுகையில் குறிப்பிட்டதாவது:

subbulakshmi 350“பெரியார் பிறந்த மண்ணில் பெண்கள் சுயமரியாதை மாநாடு வெற்றியுடன் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் நிகழ்த்துகிற உரைகளை விட இந்த மாநாட்டின் வெற்றிக்கு காஞ்சி மக்கள் மன்றம் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் தான் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்று கூறுவேன். அவ்வளவு சிறப்பாக கருத்துகளை இசையாக - கலை நிகழ்வுகளாக வழங்கினர். அவர்களைப் பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.

பெண்கள் மாநாடுகளை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வருவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் இன்று உலக நாடுகளால் கவனிக்கப்பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களுக்கு போகும்போது சமூகநீதி என்றால் என்னவென்றே அம்மக்களுக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் பெரியார் ஆற்றிய தொண்டு, சமூக நீதி பற்றி நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தொடர்ந்து பேசுவேன். ஆண், பெண் சமத்துவத்தை வலி யுறுத்திய பெரியார்,

உடைகளிலும் கூட சமத்துவம் இருக்க வேண்டும் என்றார். தமிழ் நாட்டில் கலைஞர் முதல்வராக இருக்கும் போது பெரியார் கொள்கை வழியில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத் தினார். இப்போதெல்லாம் திராவிட இயக்கம் என்ன செய்து விட்டது என்று மனசாட்சி இல்லாமலேயே சிலர் பேசுகிறார்கள். வேறு மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள். உண்மையான பொதுத் தொண்டுக்கு சுயமரியாதை உணர்வு மிகவும் அடிப்படையானது.

ஒரு தாய் ஒரு பெண்ணை வளர்க்கும் போதே சுயமரியாதை உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும். ஆண்களுக்கு என்று ஒரு வேலை; பெண்களுக்கு என்று ஒரு வேலை என்று சமூகம் பிரித்துப் பார்க்கிறது. ‘மனு தர்மம்’ கட்டமைத்த சிந்தனையிலிருந்து இந்த பாகுபாடு தொடங்கு கிறது. பெரும்பாலான மக்களை மனுதர்மம் ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தியது. ‘சூத்திரர்கள்’ பெண்களை தங்களுக்குக் கீழே அடிமையாகவே வைத்திருந்தனர்.

சூத்திரர் இழிவை எதிர்த்த பெரியார், பெண்களின் உரிமைக்கும் குரல் கொடுத்தார். பெண்களுக்கான  கல்வி வழங்கப் படுவதே பெண்ணுரிமைக்கான அடிப்படை. பெண் கல்வி தான் பெண்களுக்கு தன்னம்பிக்கையை யும் துணிவையும் ஊட்டுகிறது. குடும்பங்களில் பெண் குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வளர்க்காமல் ஆண்பெண் பாகுபாடு காட்டாமல், பெண்களை வளர்க்க வேண்டும்; பெண்களுக்கான சுயமரியாதையை வலியுறுத்தும் இத்தகைய மாநாடுகள் மிகவும் அவசியமானவை” என்றார் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி.

‘பூப்புனித’ சடங்குகளை பெண்கள் புறக்கணிக்க வேண்டும்

oviya 350மாநாட்டில் உரையாற்றிய பெரியாரியலாளர் ஓவியா இந்த மாநாட்டை பெண்களே முன்னின்று நடத்திக் காட்டியதைப் பாராட்டினார். “பெண்களுக்கான சுயமரியாதை மாநாடாக இந்த மாநாடு நடக்கிறது. சுயமரியாதை என்ற சொல்லுக்குள்ஆழமான அர்த்தங்கள் அடங்கியிருக் கின்றன. எந்த விலங்குகளும் தங்களைக் கீழான விலங்குகளாக தாழ்த்திக் கொள்வது இல்லை.

ஆனால், இந்த சமூகம் ஒரு பிரிவினரை உயர் வாகவும் மற்ற பிரிவினரை தாழ் வாகவும் கற்பிதம் செய்திருக்கிறது. பெரியார் இலட்சியங்களிலேயே முதன்மையானது இரண்டு. ஒன்று ஜாதி ஒழிப்பு; மற்றொன்று பெண்ணுரிமை. இரண்டுக்குமே அடிப்படையானது சுயமரியாதை” என்றார் ஓவியா.

“ஆண்மையை கொண்டாடு வதும், ‘வீரம்’ ஆண்களுக்கே உரித் தானது என்றும், பெண் என்றால், அவள் தியாகம் செய்யக் கூடிய வளாக இருக்கவேண்டும் என்றும் சமூகம் கற்பிதங்களை பொதுப் புத்தியில் திணித்து வைத்திருக் கிறது” என்று கூறிய ஓவியா, “இப்போதும் திருமண வீடுகளில்கூட பெண்களை தரையிலும் ஆண்களை நாற்காலியிலும் அமர வைக்கிறார்கள்” என்றார்.

“ஆண்களை மகிழ்ச்சிப்படுத்து வதற்காகவே பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டி யவர்களாக இருக்கிறார்கள். ‘பெண்களை மகிழ்ச்சிப்படுத்து வதற்கு ஆண்கள் எதையாவது செய்கிறார் களா?’ என்று பெரியார் கேட்டார்.

நம்பிக்கைகளும் சடங்குகளும் கூட பெண்களின் சுயமரியாதைக்கு எதிரானதாகவே உள்ளன. ஒரு பெண் குழந்தை சாமியாடுவதற்கு பழக்கப் படுத்தப்படுகிறாள். சாமி வந்து ஆடுவோர் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள். பில்லி சூன்யக்காரி என்று பெண்கள் மீது பழி சுமத்தி, சமூகம் அவளை தண்டனைக் குள்ளாக்குகிறது.

பெண்கள் மீது ‘பூப்படைந்து’ விட்டாள் என்பதற்கு ஒரு சடங்கைத் திணிக்கிறார்கள். மனித உடல் வளர்ச்சியில் உறுப்புகளின் மாற்றங்கள் இயற்கையானவை. ஆண்-பெண் இருபாலருக்கும் இது நடக்கிறது.ஆனால் பெண் வயதுக்கு வந்து விட்டாள்; பூப்பெய்து விட்டாள் என்று கூறி ஒரு சடங்கு நடத்தி, ஊருக்கு அறிவிப்பது பெண்ணின் சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா? உடல் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அந்தப் பெண் ணுடன் பெற்றோர்கள் உரையாடல் எதையும் நிகழ்த்துவது இல்லை. பூப்பெய்தும் சடங்குகளை எனக்கு நடத்தக் கூடாது என்று பெண்கள் துணிவோடு எதிர்க்க வேண்டும்” என்றார் ஓவியா.

பெரியார் காங்கிரசில் இருந்த போது இதே ஈரோட்டில்தான் கள்ளுக் கடை மறியலில் பெரியார் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மா வும் தடையை மீறி ஈடுபட்டனர். மறியலை நிறுத்த வேண்டும் என்று காந்தியாரிடம் கேட்டபோது, ‘அது என் கையில் இல்லை; ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம்தான் இருக்கிறது’ என்று காந்தி கூறியதாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. வைக்கத்தில் நடந்த போராட்டத்திலும் பெரியார் குடும்பப் பெண்கள் ஈடுபட்டார்கள். மழை பெய்த போதும் கலையாமல் போராடினார்கள்.

மறியலின்போது நாகம்மையார், கண்ணம்மாவிடம் காவல்துறை ஜாதி கேட்டபோது எதற்காகக் கேட் கிறார்கள் என்பதைப் புரிந்து, ஜாதியை வெளிப்படுத்த மறுத்தனர். “தீண்டப்படாத” ஜாதியாக இல்லா விட்டால் சாலையை கடக்க அவர்களை அனுமதிக்க காவல்துறை திட்டமிட்டது.

டாக்டர் முத்துலட்சுமி மருத்துவம் படிக்க முன்வந்தபோது, சக மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு பெண்ணுடன் சேர்ந்து மருத்துவம் படிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிட்டிஷ் அதிகாரி யிடம் பிரச்சினை சென்ற போது சக மாணவர்கள் படிக்கா விட்டாலும் பரவாயில்லை; ஒரு பெண் மருத்துவராகட்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறி எதிர்ப்புகளை புறந்தள்ளினர். வகுப்பறையிலேயே முத்துலட்சுமி மட்டும் முழு திரைப் போட்டு மாணவர்கள் கண்களுக்குப் படாமல் தனிமைப்படுத்தப்பட்டார்.

மருத்துவம் படித்தும் மருத்துவ சேவையை அவரால் வழங்க முடியவில்லை. ‘பரவாயில்லை சமூக நோயைக் குணப்படுத்தும் சேவையை நான் தொடருகிறேன்’ என்றார் டாக்டர் முத்துலட்சமி. தேவதாசி முறையை ஒழிப்பதற்கு அவர்தான் முன்னின்று சட்டம் கொண்டு வரச்செய்தார்.

ஒரு நாத்திகர் இயக்கத்துக்கு பெரியாருக்குப் பிறகு தலைமை தாங்கி வழி நடத்தியவர் அன்னை மணியம்மையார். அவர்தான் காவிக் கூட்டத்துக்கு பதிலடி தரும் வகையில் ராமன், சீதை உருவங்களை தீயிட்டு ‘ராவணலீலா’வை நடத்திக் காட்டினார், என்று சுயமரியாதைக்காகப் போராடிய பெண்களின் வரலாறு களை நினைவு கூர்ந்தார் ஓவியா.