வியட்நாமைச் சேர்ந்த 22 வயது நிகுயென் வான் ஹோவா, பத்திரிகையாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஃபார்மோசா நிறுவனத்தின் கழிவுகள் கடற்கரையில் கலக்கப்பட்டதை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். தொடர்ச்சியாக ஒளிப்படங்கள், வீடியோக்கள் என்று ஆதாரங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட வான் ஹோவாவுக்குத் தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தைவானைச் சேர்ந்த ஃபார்மோசா பிளாஸ்டிக் தொழிற்சாலை ஹா டின் நகரில் செயல்பட்டு வருகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் சயனைட் உட்பட நச்சு ரசாயனக் கழிவுகளை, சாதாரண கழிவு வெளியேற்றும் குழாய் வழியாக கடற்கரையில் வெளியேற்றி வந்தனர். கடற்கரையில் 120 மைல் தூரத்துக்கு இந்தக் கழிவுகள் பரவிவிட்டன.

pondicherry kolathurmani 600115 டன் மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இதனால் மீன்பிடித் தொழிலும் நலிவடைந்து விட்டது. சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்துவிட்டது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிலமும் நீர் ஆதாரங்களும் மாசு அடைந்திருக்கின்றன. இதைத் தட்டிக் கேட்ட வான் ஹோவாவை, அரசு ஆதரவு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் என்று குற்றம் சுமத்தின. அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இறுதியில் நீதிமன்றம், வான் ஹோவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதற்குப் பிறகு 3 ஆண்டுகள் வீட்டுக் காவலிலும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

வழக்கறிஞர் காங்டின், “இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. எந்தக் குற்றவாளிக்கும் தன் தரப்பைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. வான் ஹோவாவுக்கு வழக்கறிஞரை வைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்படவில்லை. இவருக்கு எதிராக எல்லா ஆதாரங்களும் கற்பனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. வான் ஹோவா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக மாற்றமுடிகிறது என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ரசாயனத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்களையும் கூட இந்த வழக்கில் நுழையவிடாமல் பார்த்துக்கொண்டன சர்வதேச ரசாயன நிறுவனங்கள்” என்கிறார்.

ஃபார்மோசா நிறுவனம் நச்சு ரசாயனத்தை வெளியிட்டது நிரூபிக்கப்பட்டால், சுமார் 500 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கமுடியும். ஆனால் அரசாங்கம், நிறுவனத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அவர்கள் தொழிற்சாலையை ஆரம்பிக்கும்போதே பிரத்தியேகமான ஓர் ஒப்பந்தத்தை அரசாங்கத்துடன் செய்துகொண்டிருப் பார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்.

மனித உரிமை ஆணையத்தின் ஆசியாவுக்கான பொறுப்பாளர் பில் ராபர்ட்சன், “வான் ஹோவாவின் தண்டனையானது அரசாங்கத்தின் பரந்த மனப்பான்மையையும் நீதிமன்றங்களை அரசாங்கங்கள் எவ்வளவு தூரம் நிர்பந்திக்கின்றன என்பதையும் காட்டுகிறது. நச்சுக் கழிவால் நான்கு மாநிலங்களின் கடல் சார்ந்த பொருளாதாரம் அழிந்துவிட்டது” என்கிறார். ஏற்கெனவே இந்தத் தவறைச் சுட்டிக்காட்டிய மி நாம் என்பவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.