மோடி ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மெகா ஊழல்கள் நடந்துள்ளது.

தணிக்கை ஆணையம் வெளியிட்டுள்ள இன்னொரு முக்கியமான ஆய்வறிக்கை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜ்னா  (ABPMJAY  எனப்படும் மருத்துவ சிகிச்சை திட்டம் குறித்ததாகும்.

இந்த திட்டத்துக்கு அடிப்படை Socio Economic Caste Census எனப்படும் சமூக  பொருளாதார சாதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இந்த அடிப்படையே பல குறைபாடுகளை கொண்டுள்ளது என்பது தணிக்கை ஆணையத்தின் கருத்து.

இந்த திட்டத்துக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பத்தையும் தரவுகள் சேகரித்தலுக்கான மென் பொருளையும் ஒன்றிய அரசு தான் உருவாக்கியது. இதில் பல கோளாறுகளும் குறைகளும் உள்ளன. இதன் விளைவாக பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தவற்றை தணிக்கை ஆணையம் பட்டியலிடுகிறது. அவற்றில் சில:

சிகிச்சை பெற தகுதிகள் இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 60 லட்சம்.  தகுதிகள் இல்லாமலேயே சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை சுமார் 1.93 கோடி. இந்த திட்டத்தின் கீழ் 10.74 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என அறிவிக்கப் பட்டது. ஆனால் இதுவரை 4.70 கோடி குடும்பங்கள்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 1.89 முதல் 2.08 கோடி குடும்பங்கள் மட்டுமே தகுதி படைத்ததாக தீர்மானிக்கப் பட்டுள்ளன. தகுதி படைத்த அனைத்து குடும்பங்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர தணிக்கை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

200 வயதுக்கும் மேற்பட்டோர் 22.78 லட்சம் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. சிலரின் பிறந்த வருடம் 1814/1821/1841 என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் வயது 200க்கும் மேல்!  இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு 9 இலக்க தனித்துவ அடையாள எண்  தரப்படுகிறது. இது வாழ்நாள் முழுவதும் பொருந்தக் கூடியது. ஆனால் ஆணையத்தின் மாதிரி ஆய்வில் ஒரே எண் இருவர் அல்லது மூவர் அல்லது நான்கு பேருக்கு கூட தரப்பட்டுள்ளது. அப்படி 1.57 லட்சம் எண்கள் தவறாக தரப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தில் 100 முதல் 200 பேர்

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 11  முதல் 50 என 43180, 50 முதல் 100 குடும்ப உறுப்பி னர்கள் என 12,100 முதல் 200 வரை என 4 பயனாளிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் முறைகேடுகள் நடந்திருந்தால் ஆச்சர்யம் இல்லை. 000000000000 எனும் ஆதார் எண் கீழ் 1285 பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதே போல 784545 என தொடங்கும் ஒரே ஆதாரின் கீழ் 1245 பெயர்களும் 21547 என தொடங்கும் ஒரே ஆதாரின் கீழ் 975 பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இப்படி 5 ஆதார் எண் கீழ் 4761 பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களுக்கு காப்பீடு வழங்கப் பட்டுள்ளது. குணமாகி  சென்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1081 நிராகரிக்கப்பட்ட பயனாளிகளின் அட்டைகள் மூலம் ரூ.71.47 லட்சமும் முடக்கப்பட்ட 590 அட்டைகள் மூலம் 55.31 லட்சமும் பெறப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவ மனைகள் அதற்கு பின்னரும் சிகிச்சை அளித்து ரூ.1.46 கோடி பெற்றுள்ளன. ஒரே நோயாளி ஒரே சமயத்தில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக கணக்கு காட்டி பணம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு 2231 மருத்துவமனைகள் முறைகேடு செய்துள்ளன. காப்பீடு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ரூ.458.19 கோடி திரும்பப் பெறவில்லை. மேற்கண்ட குறைகளை ஒன்றிய அரசு உருவாக்கிய மென்பொருள் கண்டுபிடிக்கவோ அல்லது தடுக்கவோ இயலவில்லை.

- விடுதலை இராசேந்திரன்