பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (5)

(கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைத்து ஒற்றை ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்துகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒன்றியம்’ என்ற சொற்றொடரே மனுவாதிகளுக்கு கசக்கிறது. இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் இந்தியா தொடங்கி மோடி ஆட்சி வரை நடந்த மாநில உரிமைகள் தொடர்பான சுருக்கமான வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.)

முந்தைய பகுதி: மாகாண சுயாட்சி வழங்கிய சைமன் ஆணையம்மாகாண சுயாட்சி வழங்கிய சைமன் ஆணையம்

1947 ஆகஸ்ட் 15 - இந்தியாவுக்கு ‘சுதந்திரம்’ என்ற அறிவிப்பு வெளியானது. இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள். பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரம் பார்ப்பன-பனியாக்களுக்கு கை மாறுகிறது (Madeover) என்று ஓங்கி ஒலித்தது ஒரு குரல்; அது தான் பெரியாரின் குரல்.

வரலாற்று ஆசிரியர் ரோனாலட் சேகால் இந்தியா ஒரே நாடு அல்ல என்ற வரலாற்று உண்மையை இவ்வாறு கூறுகிறார்:

“இன்றைய இந்தியா மொழிவாரி மாநிலங் களைக் கொண்ட ஓர் கூட்டாட்சி ஒன்றியம். வேறுபட்ட மக்கள், மொழி, கலாச்சாரம், மரபுகளைக் கொண்ட நாடு என்பதற்கு மொழி வழி மாநிலங்களே சான்றுகள். அதன் வேறுபாடுகள் மிக ஆழமாகத் தெரிகின்றன. வட இந்திய விவசாயி, உருவம், அளவு, நிறம், உடை, மொழி, மரபு ஆகியவைகளால் தென்னிந்தியன் மாறுபடுகிறான்.

ஆரியத்தின் வழி வந்த இந்தியை, நாட்டின் ஆட்சி மொழியாக ஏற்க மறுத்த தென்னகத் துக்கு திராவிடர் களால் நடத்தும் மொழிப் போராட்டம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வெளியார் படையெடுப்புகளை எதிர்த்து பூர்வகுடி மக்கள் நடத்திய போராட் டத்தையே பெரிதும் ஒத்திருக்கிறது” என்கிறார். (ஆதாரம்: Ronald Segal; “The Crisisis of India” 1971 p.20-21)

பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி பார்ப் பனர்கள் மேலாதிக்கம் செலுத்த விரும்பியதையும் பிரிட்டிஷார் பார்ப்பனர்களைத் தங்களுக்கு இணை யாக முன்னிறுத்த மறுத்த நிலையில் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு முழக்கத்தை முன் வைத்தார்கள் என்றும், அதுபோது ஒடுக்கப்பட்ட மக்களோடு உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள மறுத்தார்கள் என்றும் ஆய்வாளர் எஸ். சந்திரசேகர் தென்னிந்திய வரலாற்றுக் காங்கிரசின் 22ஆவது மாநாட்டில் சமர்ப்பித்த ஆய்வில் சுட்டிக் காட்டுகிறார்.

“தென்னிந்தியாவில் தேசிய இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் முதலாவது தலைமுறையைச் சார்ந்த பார்ப்பனர்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்த சலுகை களையும் வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே தங்களோடு சமமான உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முயற்சித்தனர். அம்முயற்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்கத் தொடங்கினர். ஆனால் பிற்படுத் தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் தங்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியபோது அவர்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள பார்ப்பனர்கள் மறுத்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் சமமான மதிப்பு நிலைக்கு தாங்கள் வரும் வரை பிற்படுத்தப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் பேசாமல் காத்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். இந்த சூழ்நிலையை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர்.”

(S. Chandrasekar study of Early National Phase in South India - Problem and Perspectives)

பார்ப்பன மேலாதிக்கத்துக்கு மற்றொரு சான்றை யும் கூறலாம். 1937ஆம் ஆண்டு மாகாண சட்டசபை களுக்கான தேர்தல்கள் நடந்தபோது 7 மாகாணங் களில் 6 மாகாண முதல்வர் பதவிகளை அபகரித்துக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்.

அய்க்கிய மாகாணம் - கோவிந்த வல்லபந்த்; மத்திய மாகாணம் - ரவிசங்கர் சுக்லா; பீகார் - கிருஷ்ண சின்ஹா; பம்பாய் - பி.ஜி. கெர்; அசாம் - கோபிசந்த் பர்கவா; சென்னை - ராஜகோபாலாச்சாரி.

ஏழாவது மாகாணமான வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மிகப் பெரும்பாலோர் இஸ்லாமியர் களாக இருந்த காரணத்தாலும் அங்கு பார்ப் பனர்களே அறவே இல்லாததாலும் அம்மாகாண முதல்வராக டாக்டர் கான் சாகிப் என்ற இஸ்லாமியர் பதவிக்கு வந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் எப்படித் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது? பிரிட்டி ஷாரை தன் வயப்படுத்திப் பார்ப்பனர்கள் எப்படி பதவிகளைப் பிடித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

அப்போதெல்லாம் சென்னை மாகாணத்தில் ஐ.சி.எஸ். அல்லாத பணிகளுக்கும் (non-ICS.), டெபுடி கலெக்டர் அல்லாத பணிகளுக்கும் (non-Deputy Collector) ஆட்களை நியமிக்கும் பொறுப்பு மாவட்டக் கலக்டரிடமே இருந்தது.

அந்தக் காலத்துக் கலெக்டர்களோ சர்வவல்லமை படைத்தவர்கள். தஞ்சைக் கலெக்டராக நியமிக் கப்பட்ட எச்.எஸ். தாமஸ் என்கிற வெள்ளைக்காரர் பதவியேற்கும்போது மூவேந்தர்களைப் போலத் தஞ்சை நகரத்துத் தெருக்களில் யானை மீது பவனி வந்ததாக 1888, ஜூலை 25ஆம் நாள் ‘இந்து’வில் வந்த செய்தி கூறுகிறது.

டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் கீழ்க்கண்ட செய்தியைக் குறிப்பிடுகிறார்:

“உத்தமதானபுரத்தில் அண்ணா ஜோஸ்ய ரென்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் ஜோஸ் யத்திலும் வைதிக வாழ்க்கையிலும் வேண்டிய வற்றைப் பெற்றுக் கவலையின்றி ஜீவனம் செய்து வந்தார். நல்ல கட்டுள்ள தேகம் வாய்ந்த அவர் ஒரு நாள் எங்கோ ஒரு கிராமத்தில் சாப்பிட்டுவிட்டு மார்பு நிறையச் சந்தனமும், வாய் நிறையத் தாம்பூலமும், குடுமியிற் பூவும் மணக்க மணக்க உல்லாசமாக ஊருக்கு வந்து கொண்டிருந்தார். நடு வழியே பாபநாசத்தில் தஞ்சாவூர்க் கலெக்டர், ‘முகாம்’ செய்திருந் தார். அவ்வழியே வரும்போது கலெக்டரும் சிரஸ்தேதாரும் வெளியே நின்று கொண்டிருந்தனர். கலெக்டர் வெள்ளைக்காரர்; சிரஸ்தேதார் இந்தியர்.

கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா ஜோஸ்யர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும், ரிஷபம் போன்ற நடையையும், முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டா யிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரஸ்தேதார் மூலமாக அவரிடம் சில விஷயங்கள் கேட்கலானார்.

கலெக்டர் : “உமக்குப் படிக்கத் தெரியுமா?”

ஜோஸ்யர் : “தெரியும்.”

கலெக்டர் : “கணக்குப் பார்க்கத் தெரியுமா?”

ஜோஸ்யர் : “அதுவும் தெரியும். நான் ஜோஸ் யத்தில் நல்ல பழக்கம் உடையவன். அதனால் கணக்கு நன்றாகப் போடுவேன்.”

கலெக்டர் : “கிராமக் கணக்கு வேலை பார்ப்பீரா?”

ஜோஸ்யர்: “கொடுத்தால் நன்றாகப் பார்ப்பேன்.”

“அவர் கம்பீரமாக விடையளிப்பதைக் கேட்ட துரைக்குச் சந்தோஷம் உண்டாகி விட்டது. ஜோஸ்யர் நன்றாக அதிகாரம் செய்யக் கூடியவரென்றும், ஜனங்கள் அவருக்கு அடங்குவார்கள் என்றும் அவர் நம்பினார். உடனே ஒரு கர்ணம் வேலையைக் கொடுத்து விட்டார்.”

- இப்படி போட்டியோ, தேர்வோ இல்லாத அந்தக் காலத்தில் உத்தியோகம் தானாக அவர்களை நாடி வந்தது!

உயர் பதவியில் ஒரு “பிராமணர்” நியமிக்கப் பட்டால் உடனே தனது நியமன அதிகார வரம்பிற் குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

ஒருமுறை வருவாய்த் துறை வாரியம் ஆய்வு நடத்தியபோது, நெல்லூர் மாவட்டத்தில் ஜி.வெங்கட் ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரிய வந்தது.

இந்தத் தகவல், வருவாய்த் துறை வாரியத்தின் 1854ஆம் ஆண்டின் மார்ச் மாதக் குறிப்பில் காணப்படுகிறது.

இதோ, மேலும் ஒரு உதாரணம் -

1890களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய ‘வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம்’ (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங் களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர் களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால் காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு-செம்ஸ் ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் முதல் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரெட்டரி களாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தார்களாக வும் பப்ளிக் பிராசிகியூட்டர் களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர்.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் (அய்யங்கார்கள்) நாடெங்கிலும் பெரும் பதவி வகித்து வந்ததால், வெம்பாக்கத்துக் காரர்கள் அவர்களோடு திருமண உறவு கொண்டு மதுரை, திருச்சி, தஞ்சை வரைக்கும் உறவின் முறை யினரைக் கொண்டிருந்தனர். அந்தச் சமுதாயத்தில் நல்ல பிரகாசமான இளைஞர்கள் - உறவினர்கள் அல்லாதவர்களாக இருந்தாலும் மண உறவின் மூலம் அவர்களைத் தங்கள் சுற்று வட்டத்திற்குள் இழுத்துக் கொண்டனர்.

தங்களது குடும்பக் கட்டமைப்பையும், செல்வாக்கையும் காப்பாற்றிக் கொள்வதற்காக 1890ஆம் ஆண்டி லிருந்து வெம்பாக்கத்துக்காரர்கள் ஆண்டுதோறும் தங்கள் ‘குடும்ப மாநாடு’ ஒன்றைக் கூட்டித் தங்களது குடும்ப நலன் - கல்வி - வேலை வாய்ப்புகள் முதலியன குறித்து விவாதித்திருக் கின்றனர். இந்த மாநாட்டில் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொள்வது வழக்கமாம். உண்மையில் அந்தக் குடும்பம் ஒரு சிறிய சாதிச் சங்கமாகவே செயல்பட் டிருக்கிறது.

இதுபோலவே ஆங்கிலேயர் ஆட்சியின் உத்தியோகத் துறையை நன்கு பயன்படுத்திக் கொண்ட குடும்பம் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சர். சி.பி.இராமசாமி அய்யர் குடும்பமாகும். அவரது தாத்தா வட ஆற்காட்டிலிருந்து தஞ்சைக்குச் சென்றார். அவரது தந்தை தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்தார். 1900ஆம் ஆண்டிற்குள் உறவின் முறை மூலமும், நட்பின் மூலமும் தஞ்சையிலிருந்து மலபார் வரை அவர்கள் ஆதிக்கம் நீடித்தது. சர். சி.பி. இராமசாமி அய்யர் சென்னை மாகாணத்தில் அமைச் சராக நியமிக்கப்பட்டார். அவரது உறவினர்களான சி.வி. குமாரசாமி சாஸ்திரி, (நீதிபதி ரௌலட்டோடு இணைந்து ரௌலட் சட்டத்தை இயற்றியவர்) விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளானார்கள்.

1870-71ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 164 பேர் பட்டம் பெற்றார்கள். அதில் 110 பேர் (அதாவது 67%) பிராமணர்கள்.

1901லிருந்து 1911 வரை பட்டம் பெற்றவர்கள் 5,709 பேர். இதில் 4,074 பேர் (அதாவது 71%) பிராமணர்கள்.

- இதன் விளைவாக அரசாங்க உத்தியோகம் பிராமண வகுப்பாரின் ஏகபோக உரிமையாயிற்று.

1870லிருந்து 1918 வரை சட்டப் படிப்பில் (பி.எல்.) பட்டம் பெற்றவர்கள் 3,651 பேர். இதில் 2,686 பேர் பிராமணர்கள்.

அதுபோலவே ஆசிரியருக்கான பட்டப் படிப்பில் (எல்.டி.) 1,498 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 1,094 பேர் பிராமணர்கள், 207 பேர் இந்தியக் கிறித்துவர், 163 பேர் தான் இந்து பிராமணரல்லாதார். (ஆதாரம்: சி.ஜே. பேக்கர், டி.ஏ. விஷ்புரூக் மற்றும் எஸ். சரசுவதி எழுதிய ஆய்வு நூல்கள்)

ஆக, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கம் என்ற ஒற்றைப் பார்வை யோடுதான் பிரிட்டிஷ் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகளை எடுத்தனர். அப்போது தொழிலதிபர்களாக வளர்ந்து வந்த பனியாக்களோடு பார்ப்பனர்கள் கைகோர்த்துக் கொண்டார்கள். எனவே பெறப் போகும் சுதந்திரம் பார்ப்பன-பனியாக்களிடம் அதிகாரத்தை மாற்றும் சுதந்திரம் என்ற சரியான கணிப்புக்கு பெரியார் வந்தார். அதைத் தான் வரலாறும் உறுதிப்படுத்தியது.

(தொடரும்)