சட்டம் ஒழுங்கை தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தலித் மக்களை தாக்கத் தொடங்கிவிட்டது, ‘பசு கண்காணிப்பு’ என்ற பெயரில் மதவெறி வன்முறை கூட்டம். அதிகார அமைப்பிலும் காவல் துறையிலும் ஊடுருவி நிற்கும் மதவெறி சக்திகள் இந்த வன்முறைக்கு துணை நிற்கின்றன. குஜராத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி செத்துப் போன பசுமாட்டின் தோலை விற்பனை செய்வதற்கு உரித்தார்கள் சில தலித் இளைஞர்கள். அதுவே அவர்களின் வாழ்க்கைக்கான தொழில். ‘பசு கண்காணிப்பு’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் மனித மிருகங்கள் நான்கு தலித் இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இது நடந்தது சவுராஷ்டிரா அருகே உள்ள ‘உனா’ எனும் கிராமத்தில். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் பதிவேற்றப்பட்டன. பிரச்சினை பற்றி எரியத் தொடங்கிவிட்டது.

இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாநிலம் குஜராத் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதிக் குவித்தது. அத்தனையும் அப்பட்டமான பொய். இப்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. குஜராத் மக்கள் தொகையில் 8 சதவீதம் தலித் மக்கள்.  அவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருவதை புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 தலித் மக்கள் கொல்லப்படுகிறார்கள். பாலியல் வன்முறைக்கு 45 தலித் பெண்கள் சராசரியாக உள்ளாகி வருகிறார்கள். குஜராத் அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படியே 2010-15ஆம் ஆண்டுகளில் 130 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும், 336 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிய குற்றங்களும் நிகழ்ந்துள்ளதோடு 5628 வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரை பதிவான வன்கொடுமை வழக்குகள் 27. உயிர் பயமின்றி துணிவுடன் காவல் துறைக்கு புகார் கொடுத்தவர்கள் எண்ணிக்கைதான் இது.

உனா சம்பவம் தவிர, 2012ஆம் ஆண்டில் சுரேந்திர நகரில் தங்காத் என்ற பகுதியில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் 3 தலித் மக்கள் கொல்லப் பட்டனர். இது குறித்து அரசு நடத்திய விசாரணை அறிக்கையை அவசர அவசரமாக வெளியிட்டு, அதை குஜராத் உயர்நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தார்கள். இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதில் காவல்துறை மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அந்த அறிக்கை கூறியது. 2016 மே மாதம் ரஜியா நகரில், ‘பசு பாதுகாப்பு குண்டர்கள்’ தலித் மக்கள் மீது கொடூரமாக தாக்கினர். இதில் இராமாபாய் சிங்காராக்கியா என்ற தலித் கொலை செய்யப்பட்டார் (6.7.2016). அடுத்த நான்கு நாள்களில் (10.7.2016) சாகர் பாபுபாய் ரதோட் என்ற தலித் விசாரணைக் கைதி, காவல் நிலைய விசாரணையில் இறந்து போனார். தொடர்ச்சி யாக தலித் மக்கள் மீதான   தாக்குதல் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் தான் தலித் மக்களின் எழுச்சிக்கு காரணம்.

உனா சம்பவத்துக்குப் பிறகு 7 தலித் இளைஞர்கள் தற்கொலை முயற்சியில் இறங்கினர். “இனி இழிவு வேலை செய்ய மாட்டோம்; செத்த மாட்டை தூக்கிச் சென்று புதைக்க மாட்டோம்; மலம் எடுக்க மாட்டோம்” என்ற புரட்சிகர முழக்கங்களை முன்னெடுத்து இளைஞர்கள் திரண்டார்கள். செத்துப் போன “கோ மாதா”க்களை தூக்கி வந்து அரசு அலுவலகங்கள் முன் வீசினார்கள். “பசுப் பாதுகாவலர்கள்” எவரும் கோமாதாவை தூக்கிச் சென்று அடக்கம் செய்ய முன் வராததால் செத்த மாடுகள் அழுகிப் போய் நாற்றமெடுக்க ஆரம்பித்தன.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அகமதாபாத்தில் 15000 தலித் மக்கள் திரண்டு பேரணியாக புறப்பட்டனர். ஜிக்மேஷ் மேவானி, சுபோத் பார்மர் என்ற இரண்டு தலைவர்கள் பேரணிக்கு தலைமை தாங்கி வழி நடத்தினர். இஸ்லாமியர்களும் ஆதரவாக களமிறங்கினர். எந்த அரசியல் கட்சிகளையும் சாராத மக்கள்  பேரணியாக இது கிராமம் கிராமமாகப் போய் தலித் மக்களை தட்டி எழுப்பியது. கிராமம் கிராமமாக இழி தொழில்களை நிறுத்தக் கோரும் இயக்கம் நடந்தது.

“மக்களின் ஆவேசத்தை நேரில் பார்த்தோம்; அதே நேரத்தில் அமைதியாக உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் பேரணியை முன்னெடுப்பதில் உறுதியாக இருந்தோம்” என்கிறார், தலைமை தாங்கிய மேவானி. குஜராத்தில் தலித் மக்களின் அரசியல் தலைவர்கள் பலவீனமானவர்கள்; எனவே நாங்களே களமிறங்கினோம் என்று கூறுகிறார்கள் இந்த தலைவர்கள். “நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்; உயர்ஜாதியினருக்கு உள்ள அனைத்து உரிமைகளும் எங்களுக்கு உண்டு; இனியும் இழிவு வேலைகளை செய்ய மாட்டோம்; சமூகப் பொருளாதார அதிகாரத்தை வழங்கு” என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது. “இது 21ஆம் நூற்றாண்டு; மனிதன் சந்திர மண்டலத்துக்குப் போகிறான்; ஆனால் நாம் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க உரிமை இல்லை” என்று கிராமங்களில் திரண்ட மக்களிடம் பேசினர்.

ஊடகங்களை ஈர்க்கும் முழக்கங்களை மேவானிஉருவாக்கினார். “வேண்டுமானால் பசு மாட்டு வாலை நீ பிடித்துக் கொள்; எங்களுக்கு நில உரிமைகளை வழங்கு”, “எங்களுக்கான உரிமைகளை எங்களுக்கு வழங்கிடு; எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பிக் கொடு”, “அரை வயிற்று சாப்பாடு போதும்; ‘உனா’வுக்கு முன்னேறுகிறோம்” என்ற முழக்கங்கள் உணர்ச்சிகரமாக வெடித்துக் கிளம்பின.

இது வரை குஜராத்தில் இப்படி ஒரு தலித் எழுச்சி உருவாகியதில்லை என்றும், இருட்டடித்த பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்களை சமூக வலை தளங்கள் வழியாக தலித் இளைஞர்கள் அம்பலப் படுத்தினார்கள் என்றும், செய்திகள் கூறுகின்றன. “எங்களுடைய இளைஞர்கள் இவ்வளவுக்குப் பிறகும் ஜாதியையோ ஜாதி ஒடுக்கு முறையையோ ஏற்கத் தயாராக இல்லை” என்கிறார் மேவானி. 2015ஆம் ஆண்டில் குஜராத்தில் தலித் மக்களுக்கு எதிராக பதிவான வன்கொடுமை வழக்குகள் 6,655, சத்தீஸ்கரில் 3,008 வழக்குகளும், ராஜஸ்தானில் 17,144 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

“இந்த இயக்கம் ஏதோ உணர்ச்சிகளுக்கான வடிகால் அல்ல; பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி போராடுகிறோம். பார்ப்பனியப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்க்கக் கிளம்பியிருக்கிறோம்” என்று ‘பிரன்ட்லைன்’ ஏட்டுக்கு (செப்டம்பர் 2, 2016) அளித்த  பேட்டியில் மேவானி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

பார்ப்பனிய ஜாதியமைப்புக்கு எதிராக தமிழகத்தில் உருவான எழுச்சி இப்போது குஜராத்தில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.