‘படைப்புக் கடவுள்’ பிர்மா மனுசாஸ்திரத்தை உருவாக்கி, பிராமண-சத்ரிய - வைசிய - சூத்திரர்களுக்கு தகுதி, கடமைகளை வகுத்திருப்பதால் அதன்படி வாழ வேண்டியதே தர்மம் என்று பார்ப்பனியம் சமூகத்தில் வர்ணாஸ்ரமத்தைத் திணித்தது. இதில் மக்கள் முடிவு செய்ய எந்த உரிமையும் இல்லை. அதேபோல் ஒன்றிய சாம்ராஜ்ய ‘பிரம்மாக்களால்’ - ‘மனுசாஸ்திரம்’ முறையாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர்கள் என்ற ‘தேவ தூதர்கள்’ - கல்வி, மொழி, பண்பாடு உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்காக அவர்களே தீர்மானிப்பார்கள். இதில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சிகளோ மக்களோ தலையிட முடியாது. தலையிட்டால் எருமை வாகனத்தின் மீது ‘சித்திரபுத்திரர்கள்’ விரைந்து வந்து “நரக”த்துக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என மிரட்டுகிறார்கள். ‘மனுவாதிகள்’ இப்போதும் வேறு வடிவத்தில் ‘ராமராஜ்யம்’ நடத்துகிறார்கள்.

இந்த மிரட்டல்களுக்கு ‘திராவிட மாடல்’ பணியாது என்பது மட்டுமல்ல; திருப்பித் தாக்கும் என்று தமிழ்நாடு அரசு போர்ச் சங்கைக் கையில் எடுத்து விட்டது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 13 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களை மாநில ஆட்சியிடமிருந்து பறித்து ஆளுநரே நியமித்து வந்ததோடு பல்கலைக்கழகங்களை மனுதர்மக் கூடாரங்களாக மாற்றும் வேலைகளை தமிழக ஆளுநர்கள் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அத்துமீறல்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றம் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களை மாநில அரசுக்கே வழங்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பபட்ட நாள் மிகவும் முக்கியமானது. அதே நாளில் தமிழக ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் கூட்டி, அவர்களுக்கு சில ஆர்.எஸ்.எஸ். புள்ளிகளைக் கொண்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இணை வேந்தரான தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பும் இல்லை; தகவலும் இல்லை. ‘சோஹோ கார்ப்பரேசன்’ என்ற தனியார் நிறுவன அதிகாரியான ஆர்.எஸ்.எஸ். மனுவாதி சிறீதர் வேம்பு என்பவர் பயிற்சி அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமே இருந்தது. மாநில அரசு பரிந்துரைக்கும் நிபுணர் குழு தயாரித்த பட்டியலிலிருந்துதான் ஆளுநர் தமிழக அரசு பரிந்துரைத்த ஒருவரை சம்பிரதாயமாக அறிவிப்பார். பன்வாரிலால் புரோகித் ஆளுநராக வந்த பிறகு தான் தன்னிச்சையாக ஆளுநரை நியமிக்கத் தொடங்கினார். ‘இரட்டையர்களின்’ அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்த அதிகார அத்துமீறலை அடிபணிந்து ஏற்றுக் கொண்டது.

ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்த 1995ஆம் ஆண்டில் ஆளுநராக இருந்த சென்னாரெட்டியிடமிருந்து பல்கலைக்கழக வேந்தர் எனும் பதவியைப் பறித்து அதை முதல்வருக்கு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், ஆளுநர் மாளிகையில் அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது சட்டமன்றத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மசோதா குஜராத் பல்கலைக்கழகம் (1949); தெலுங்கானாவில் அனைத்துப் பல்கலைக் கழக சட்டம் (2000) ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது. இம்மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமன உரிமை மாநில அரசுகளுக்கே உண்டு. ஆளுநர் ரவி துணைவேந்தர் நியமனத்தில் அத்துமீறலின் எல்லைக்கே சென்றார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பா.ஜ.க. ஆசீர்வாதத்தோடு நியமிக்கப்பட்ட ஆன்மிகப் பேச்சாளர் சுதா சேஷய்யன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கு பரிந்துரைக்க ஆளுநரே ஒரு குழுவை நியமித்தார். மூவர் பெயரை குழு பரிந்துரைத்தது. அந்தப் பெயர்களை நிராகரித்த ஆளுநர் ரவி, பதவி ஓய்வு பெற்ற சுதாசேஷய்யனுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கி தன்னிச்சையாக முடிவு செய்தார். ‘பிராமணர்’களுக்கான சமூக ஆதிக்க உரிமைகளை ‘பிராமணர்’களே முடிவெடுக்க ‘மனுசாஸ்திரம்’ அதிகாரம் வழங்கியிருப்பது போலவே ஆளுநர் செயல்பட்டார்.

ஆளுநர் புரோகித் நியமித்த அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது அடுக்கடுக்கான ஊழல் புகார் வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஊழல் விசாரணைக் குழுவை நியமித்தது. அதற்கு ஒத்துழைப்புத் தர, ஆளுநர் புரோகித் மறுத்தார். சூரப்பா டெல்லி அதிகார மய்ய செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழக அரசு ஊழல் குழு விசாரணையை முடக்கி வருகிறார். அண்ணா பல்கலையில் புதிய தொழில்நுட்ப பயிற்சிப் பிரிவுகளைத் தொடங்க மாநில அரசிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று கூறி டெல்லியிடமே சென்று அதற்கான அனுமதியைப் பெற்று வந்தார். நிதி ஏற்பாடுகளைத் தானே ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்று தமிழக அரசைப் புறக்கணித்தார். இவ்வளவுக்குப் பிறகும் அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க.வோடு கைகோர்த்துக் கொண்டு அவர்களின் ‘புரட்சித் தலைவி’ கொள்கைக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் துரோகம் செய்து பா.ஜ.க.வுக்கு பக்க மேளம் வாசிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநரின் அடாவடிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“எதேச்சாதிகாரத்தால் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டி யெழுப்பலாம் என யாரும் நினைக்க வேண்டாம் ! ‘வரலாறு என்பதே சாம்ராஜ்ஜியங்கள் சரிந்த கதை தான்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது மக்களாட்சி நடைபெறும் நாடு என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டும்! மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் தான் இந்தியா என்பதை ஒன்றிய அரசில் இருப்பவர்களும், அவர்களின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர்களும் உணர வேண்டும்!”

என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வு.

தமிழ்நாடு அரசு மாநில உரிமைக்காக எடுக்கும் இந்த நடவடிக்கைகளைப் பாராட்டி வரவேற்க வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்