kousalya 373

04.03.2016 திங்கள் அன்று ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் இணையர் கவுசல்யாவை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினர்.

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கம் எனும் ஊரில் கொல்லப்பட்ட தனது கணவர் சங்கர் வீட்டில் வாழ்ந்து வரும் கவுசல்யாவை தோழர்கள் சந்தித்தனர். தலை, கைகள் மற்றும் உடல் முழுவதும் ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார் கவுசல்யா. சங்கர் வீட்டில் கவுசல்யா வாழக்கூடாது எனும் ஒரே நோக்கத்தில் ஜாதி வெறியர்கள் சங்கரைப் படுகொலை செய்து கவுசல்யாவை கொடூரமாகத் தாக்கினார்களோ அவர்களின் நோக்கத்திற்கு எதிராக நெஞ்சுரத்துடன் சற்றும் அஞ்சாமல் அதே சங்கர் வீட்டில் திரும்ப வந்து வாழ்கிறார் கவுசல்யா.

இனி ‘நான் சங்கர் வீட்டில்தான் வாழ்வேன்' என்றும் ‘வேலைக்கு சென்று சங்கரின் அப்பாவையும் தம்பிகளையும் காப்பாற்றுவேன்' என்றும் ‘சங்கர் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையர் களுக்குப் பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்வேன்' எனவும் நாளிதழ்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கவுசல்யாவின் இந்த மன தைரியத்தைப் பாராட்டி, ‘கழகம் என்றும் அவருக்குத் துணை நிற்கும் எனவும் எந்நேரமும் கழகத் தோழர்களை உதவிக்கு அழைக்கலாம்’ எனவும் தோழர்கள் உறுதியளித்தனர்.

 இந்த சந்திப்பின் போது கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, மடத்துக்குளம் மோகன், கவிஞர் கனல்மதி, உடுமலை அருட்செல்வன், தனபால், முத்து, பரிமளராசன் ஆகியோர் உடனிருந்தனர்.