periyar murali cafeபடுக்கையில் இருந்து எழும் போது, இன்று உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத நாளை வீணாய்ப் போனதாக, உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்ததாகவும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள், உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடைய தபசு இருங்கள்.

இன்றைய தினம் வாலிபர்களாயிருக்கிற உங்களில் இருந்துதான் புத்த பகவானும், மகாத்மா காந்தியும், நாயர் பெருமானும், தியாகராயரும் தோன்ற வேண்டும். இவர்கள் எல்லாம் உங்களைப் போல் வாலிபர்களாக இருந்தவர்கள் தான்.

எந்தத் தேசமும் எந்தச் சமூகமும் பெரும்பாலும் அவ்வத்தேசத்தில் வாலிபர்களைக் கொண்டுதான் முன்வந்திருக்கிறதே அல்லாமல், பெரியோர்களையும் முதியோர்களையும் கொண்டல்ல. உலக வாழ்க்கையில் ஈடுபட்ட பெரியோர்களிடம் பொது நலமும், தியாக புத்தியும் காண்பது மிகவும் அரிது; சுயநலந்தான் வளர்ந்துகொண்டு போகும். அவர்கள் பொதுநலத்திற்கு உழைப்பதாய்க் காணப்படுவது அவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்துத்தான் என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

(குடி அரசு : 12.09.1926)