ஒன்றிய - மனுவாதிகளுக்கு எதிராக பரப்புரை: கழகத் தலைமைக் குழு முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 20.06.2021 ஞாயிறு மாலை 5 மணிக்கு இணையம் வழியாக நடைபெற்றது.

தலைமைக் குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

தலைமைக்குழு துவங்கும் முன் தோழர்கள் மடத்துக்குளம் மோகன், கோவை மு.அறிவரசு ஆகியோர் மறைவிற்கு தலைமைக் குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அடுத்து கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அறிமுக உரையாற்றினார்.

நடைபெற்ற தலைமைக் குழுவில் திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திமுக அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் சமூக நீதி திட்டங்களான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வேலை வாய்ப்பு உரிமை, 7 தமிழர் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இவற்றிற்கு ஒன்றிய பாஜக அரசும், ஆதிக்க பார்ப்பன சக்திகளும் ஏற்படுத்திக் கொண் டிருக்கும் இடையூறுகள் குறித்து பேசப் பட்டது. இதை எதிர்த்து ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் ஆதரவைத் திரட்டும் செயல் பாடுகளை முடுக்கிவிட முடிவெடுத்து விட்டது.

கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை. ஈழத்தமிழ் ஏதிலியர்களுக்கான கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியமை, நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதிபதி குழு ஆகியவை திமுக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் என தலைமைக் குழு வரவேற்கிறது.

கீழ்க்காணும் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் முன் வைக்க தலைமைக் குழுவில் விவாதிக்கப்பட்டது :

• தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு முதலிடமும், விருப்ப மொழியாக சமஸ்கிருதமாகவும் ஆக்குவது.
• அனைத்து கிராமங்களிலும் மின் மயானங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை.
• அரசு நூலகங்களில் சமூக நீதி சிந்தனை குறித்த நாளிதழ்கள்,வார, மாத இதழ்கள் மற்றும் புத்தகங்களை இடம் பெறச் செய்தல்.

ஊரடங்கு அமுலில் இருப்பதால் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகளாக இணையவழி பயிற்சி முகாம்கள், பெரியாரியல் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்துவது எனவும் ஊரடங்கு விலக்கிற்கு பின்னான கள செயல்பாடுகள் குறித்தும் திட்டமிடப்பட்டது.

மேலும் கழகத்தின் நிலைப்பாடுகளை எதிர்த்தும், மாறுபட்டும் பொதுவில், சமூக வலைதளங்களில் பதிவிடும் மாவட்ட கழக நிர்வாகிகள் மீது தலைமைக் கழகமும், தோழர்கள் மீது அந்தந்த மாவட்டக் கழகமும் உரிய நடவடிக்கை எடுக்க தலைமை குழு பரிந்துரைத்துள்ளது.

தலைமைக் குழுவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொரு ளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தின சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், சூலூர் பன்னீர் செல்வம், இளையராஜா, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சமூக வலைதள பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர்.

வெளியீட்டுக் குழு செயலாளர் கோபி இளங்கோவன், பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- திராவிடர் விடுதலைக் கழகம்