ஈரோடு முனிசிபாலிட்டியைப் பற்றி அதன் கொடுமைகளை வெளியிடாமல் கொஞ்சநாளாக “குடி அரசு” மௌனம் சாதிப்பதாகவும் இதற்கு ஏதோ காரணங்கள் இருப்பதாகவும் சிலர் குறை கூறுகிறார்கள். மற்றும் சிலர் தற்கால முனிசிபல் நிர்வாகத்தை குறை கூற வேண்டுமென்றே பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பழி சுமத்துகிறார்கள்.

இவ்விரண்டையும் நாம் பொருட்படுத்தவில்லை. நமக்கு தோன்றியதை யாருடைய விருப்பு வெறுப்பையும் லக்ஷியம் செய்யாமல் அவசியம் நேரும்போது வெளியிட்டு வருவோம். உள்ளூர் விஷயத்தில் இன்னும் பல பொது ஸ்தாபனங்களும் புகாருக்கு இடம் வைத்துக் கொண்டு ஒழுங்கீனமாகவும் நடந்து வருகிறது. அவற்றில் பல விஷயங்களை பத்திரிக்கைகளில் வெளியிடாமலே திருத்திக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை கொண்டே விட்டு வைத்திருக்கிறதே அல்லாமல், வேறு எவ்வித தயவுக்கோ தாக்ஷண்ணியத்துக்கோ அல்ல. இவ்விஷயமாக நிரூபர்கள் அனுப்பிய பல நிரூபங்கள்கூட பிரசுரிக்காமல் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். ஆதலால் உள்ளூர் நிரூப நேயர்கள் மன்னிக்க வேண்டுகிறோம்.

நமது ஈரோடு முனிசிபாலிட்டியானது மிக சிறிய முனிசிபாலிட்டி, ஆனால் வரும்படியில் கோயமுத்தூர் சேலம் முதலிய முனிசிபாலிட்டி யைவிட விகிதத்தில் அதிகமானது. தற்கால நிலைமையைப் பார்த்தால் உண்மையாகவே வரி விகிதங்கள் சராசரி பொது ஜனங்கள் தாங்கக் கூடாததாயிருக்கிறது. இப்படி தாங்கக்கூடாத வரியை பொது ஜனங்களிடம் வசூலித்தும் அதை சரியான வழியில் பொது ஜனங்களுக்கு உபயோகப்படுத்தாமல் ஜனங்கள் மனம் பதறப் பதற தாறுமாரான வழியிலும் சிலருடைய சுயநன்மைக்கும் சிலருடைய பிழைப்புக்குமே உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகின்றது. இதை சில கவுன்சிலர்கள் தெரிந்திருந்தும் இம்மாதிரி அக்கிரமங்களுக்கு உடந்தையாயிருக்கிறார்கள் என்று சொல்லுவதை மன்னிப்பார்களாக.

சிங்காரவனம் (பார்க்)

நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் உத்தியோகஸ்தர் வக்கீல்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் நன்கறிந்ததே,

இப்பஞ்சத்தின் கொடுமையைப் பற்றி சென்னிமலை, கோ-வாப்ரேடிவ் யூனியன் செக்ரட்டேரி ஸ்ரீமான் . எஸ். கே. ராமசாமி முதலியார் நமக்கு அனுப்பியுள்ள பஞ்ச ரிப்போர்ட்டை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். இந்த விதமான நிலைமையில் தொழிலாளருக்கு தொழில் இல்லை. கூலிக்காரருக்கு கூலி இல்லை. ஏழைகளுக்கு கஞ்சி இல்லை. அநேக இடங்களில் குடிக்கவே தண்ணீர் இல்லை. இப்படியிருக்க ஈரோட்டு ஜனங்களுக்கு மாத்திரம் சிங்காரவனமாம். இதற்கு ஏழை வரி கொடுப்போர் பணம் பதினா யிரக்கணக்காய் செலவு செய்வதாம். இந்த வனம் முடிவுபெற்றால் அனுபவிப்பவர்கள் யார்? வரிகொடுக்கும் ஏழைகளா? கூலிக்காரரா? தொழிலாளிகளா? ஒருக்காலும் இல்லை. இவர்களுக்கு வயிற்றுக்கு கஞ்சிக்கு வழி தேடுவது வைகுண்டமா இருக்கும் போது சிங்காரவனத்திற்குப் போய் காற்றுவாங்க நேரம் எங்கே? மற்றபடி நமது வியாபாரிகள் அனுபவிக்கக்கூடுமா என்று பார்த்தால் அதுவும் முடியவே முடியாது. காலையில் 6 மணிக்கே கடை திறக்க வேண்டும். சிலர் இரவு 8 மணிக்கும் சிலர் 10 மணிக்கும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு போகவேண்டும். மத்தியில் வீட்டுக்கு சாப்பாட்டுக்குப் போக ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பகலில் எடுத்துக் கொள்வதையே பெரிய அன்னச் சத்திரம் கட்டுவதுபோல் நினைக்கிறவர்கள் மாலை நேரத்தில்தான் இவர்களுக்கு வியாபார மும்மரம். இந்த சமயத்தில் காற்றுவாங்கப் போய்விட்டால் நாளைக்கு கடன் காரனுக்கு பதில்சொல்ல வேண்டாமா?

அல்லது பெரிய மிராஸ்தார்கள் காற்று வாங்குவார்கள் என்றாலோ இந்த காலத்தில் மிராஸ்தார்கள் என்போர் யார் என்றால் அப்பன் தேடி வைத்த அரும்பொருளனைத்தையும்  என்று டம்பாச்சாரி சொன்னது போல செலவுசெய்யும் வீரர்களைத்தான் மிராஸ்தார்கள் என்று சொல்வது. இவர்கள் நமது நகரில் தாராளமாய் கணக்குப் போட்டாலும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள்தான் இருப்பார்கள். இவர்களுக்கும் மாலை நேரங்களில் பல ஜோலிகள் இருக்கும். அவற்றையெல்லாம் விட்டு காற்று வாங்க வருபவர்கள் இரண்டொருவர்தான் இருப்பார்கள். வரிகொடுக்காத உத்தியோகஸ்தர்களாவது அனுபவிப்பார்களா என்றால் அதுவும் முடியாத காரியம். கச்சேரியில் சாதித்தது போதாமல் வீட்டுக்கும் காகிதங்களை கத்தை கட்டிக்கொண்டு போவது ஆதலால் அவர்களுக்கு வழக்கமாய் போய் விட்டது. 1000, 500 என்று சம்பளம் வாங்குகிற இரண்டொருவர்களைத் தவிர மற்றவர்களால் முடியாத காரியம். இந்த இரண்டொருவரும் தொழில் வரிகூட கொடுக்காமல் ஏமாற்றுகிறவர்களாயிருப்பார்கள். பின் யார்தான் அனுபவிப்பார்கள் என்று யோசித்தால் ஒரு சமயம் நமது தேசத்திற்கே பெரிய வினை யாய் முளைத்திருக்கும் நமது வக்கீல் சகோதரர்கள் அனுபவிக்கலாம். அதுவும் முன்சீப் காற்று வாங்க போகாவிட்டால் பாதி பேர் போகமாட்டார்கள்.

டிப்டி கலெக்டரோ மேஜிஸ்ட்ரேட்டோ போகாவிட்டால் கால்வாசிபேர் போக மாட்டார்கள். ரங்கு, பரிலா, பிரிட்ஜ் இதுகளை ஆடுவதை விட்டு அரைகால் வாசிப்பேர் போகமாட்டார்கள். இந்த நிலைமையில் உள்ள சிங்காரவனம் ஏழைகளின் வரிப்பணத்தை எவ்வளவு சாப்பிடுகிறது என்று கணக்குப் பார்த்தால், ஏழைகள் கஷ்டம் எப்படி இருக்கும் என்று அறியாத நமது கவுன்சிலர் பிரபுக்கள் முதல் முதலாக பார்க்கு 3000 ரூபாயில் முடியுமென்று நினைத்து 3000ரூ. சாங்கிசன் செய்தார்கள். 2000 ரூ. குழந்தைகள் விளையாடு மிடத்திற்கென்று சாங்கிசன் செய்ததையும் அதற்கு உபயோகப்படுத்தாமல் கவுன்சில் சம்மதம் இல்லாமலே பார்க்குக்கு உபயோகப்படுத்தியாய்விட்டது. இதைப்பற்றியும் நமது கவுன்சிலர் பிரபுக்கள் கவனித்தவர்களே அல்ல. அல்லாமல் மாதம் 60, 70 சம்பளமுள்ள சூப்பரின்டெண்டு ஓவர்சீயர்கள் வேறே சாங்கிஷன் செய்யப்பட்டது. இஃதன்றி கவுன்சில் சம்மதமில்லாமல், சம்மதத்தை எதிர்பார்த்து செலவு செய்திருக்கும் தொகை சுமார் 3000 அல்லது 4000. இனி செலவு செய்ய சம்மதம் கேட்கும் தொகை 3000 அல்லது 4000. ஆக பதினாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சிங்காரவனம் விழுங்கப்போகிறது. இதை நிர்வகிக்க 100, 150 வீதம் வருசத்திற்கு 2000 ரூபாய்க்கு குறையாமல் செலவாகப் போகிறது.

தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு கால் அணா வாவது வரி கொடுப்பவர்களாயிருந்தால் இப்படி அக்கிரமமாய் செலவு செய்ய கவுன்சிலர்களுக்காவது சேர்மேனுக்காவது மனம் வருமா? இவர்கள் வரிகொடுப்பவர்களின் உண்மையான பிரதிநிதிகளாய் இருந்தால் இம்மாதிரி ஏழைகளின் வரிப்பணத்தை பாழாக்க சம்மதிப்பார்களா?

கவுன்சிலர் சாங்கிஷன் இல்லாமல் கவுன்சிலர் சம்மதத்தை எதிர்பார்த்து சேர்மென் செலவுசெய்ததாக சொல்லும் அயிட்டங்களை இனிமேல் கவுன்சிலர்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது என்றும் சேர்மெனும் இனி அவ்விதம் கவுன்சில் உத்திரவு பெறாமல் எவ்வித செலவும் செய்யக்கூடாது என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பு கவுன்சிலர்களும் சேர்மெனும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்களாம். அதற்கு பிறகு அனேக தொகைகள் இது விஷயத்தில் மறுபடியும் கவுன்சில் சம்மதத்தை எதிர்பார்த்து சேர்மனால் செலவு செய்யப்பட்டிருக்கிறதாம். சுயமரியாதை உள்ள நமது சில கவுன்சிலர்களாவது ஒப்பந்தப்படி நடக்கப்போகிறார்களா அல்லது தலையாட்டி கவுன் சிலர்களாயிருந்து ஏழைகள் பணம்தானே போகிறது நமக்கென்ன நஷ்டம், நாமும் இரண்டு மூன்று செடிகள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகலாம் என்று நினைத்து இதையும் ஒப்புக்கொண்டுவந்து விடுகிறார்களோவென்பது அடுத்த மீட்டிங்கில் தான் தெரியவேண்டும். இம்மாதிரி மனம் பதறப் பதற ஏழைகள் பணம் பாழாவதை பார்த்துக்கொண்டு இந்த கவுன்சிலர் பதவி வகிப்பதை விட வேறு வேலைக்குப் போனாலும் லாபமுண்டாகும்.

நமது ஊரில் எங்கு பார்த்தாலும் கொசுக்கள் உபத்திரவமும் வீட்டுக்கு வீடு குளிரும் காய்ச்சலும் வந்து அவஸ்தைப்படும் ஜனங்கள் கணக்கில்லாமல் கிடக்கின்றன. இவைகளை போக்க வேண்டுமானால் சுகாதார வசதியை நன்றாய் கவனித்துப் பார்ப்பதோடு இன்னும் அநேக இடங்களில் ஜலதாரை கள் கட்டவேண்டும். ஓடையில் ஜலதாரைத் தண்ணீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்கிறது. அதன் பக்கத்தில் குடியிருப்பவர்கள் மலைக்காய்ச்சலினால் அதிக கஷ்டப்படுகிறார்கள். இவற்றை கவனிக்கப் பணம் இல்லை, ஆளில்லை. சிங்காரவனத்திற்கு மாத்திரம் ஆள்களும் பணமும் கொள்ளை போகிறது. நமது முனிசிபாலிட்டி நிர்வாகிகளின் பொதுநல அறிவையும் பரோபகாரச் சிந்தையையும் பரிசுத்தத் தன்மையையும் படியை படுக்க வைத்துத்தான் அளக்க வேண்டும். இதல்லாமல் மற்றும் அநேக வழிகளிலும் துறைகளிலும் நமது வரிப்பணம் பாழாவதை அவசியம் நேரும்போது வெளி யிடுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.11.1925)

Pin It