farmer protests• பத்திரிகையாளர்கள் மீது தேச துரோகச் சட்டத்தை ஏவுகிறது பா.ஜ.க. ஆட்சி.
• பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இப்போது அந்த நாட்டிலேயே நீக்கப்பட்டு விட்டது.
• அரசியலமைப்பு சபையில் கடும் எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்ட இந்த சட்டப் பிரிவு, பிறகு தண்டனைச் சட்டத்தில் திடீரென்று நுழைந்தது.

விவசாயிகள் பேரணி குறித்தும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது, வழக்கு போடப்பட்டுள்ளது.

‘இந்தியா டுடே' வின் ராஜ்தீப் சர்தேசாய், ‘நேஷனல் ஹெரால்டு' இதழின் மூத்த ஆசிரியர் மிருணாள் பாண்டே, ‘குவாமி ஆவாஸ்' ஆசிரியர் ஜாஃபர் ஆகா, ‘கேரவன்' இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத், அதே இதழின் ஆனந்த் நாத், வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன.

தேச துரோகம், வகுப்புவாத அமைதி யின்மையைத் தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒரே நேரத்தில் அய்ந்து மாநிலங்களில் ஒரே மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மரணமடைந்த விதம் குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் எழுதிய பத்திரிக்கையாளர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களை வைத்து, ‘அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிட்ட ராஜ்தீப் சர்தேசாய், ‘அந்த விவசாயி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதினால் தான் இறந்தார்' என போலீசார் வெளியிட்ட வீடியோவையும் உடனே பகிர்ந்தார்.

பொய்களிலிருந்து உண்மையைப் பிரித்தறிய முடியாத அளவுக்கு வதந்திகள் பலவும் செய்திகளைப் போலவே வேடமணிந்து வரும் சமூக வலைதளயுகம் இது. இந்தச் சூழல், பத்திரிக்கையாளர்கள் பலரையும் ஏமாற்றி விடுகிறது.

ஒரு போராட்டம் நடைபெறும் நேரத்தில், அதில் நிகழும் பல்வேறு சம்பவங்களைப் பத்திரிக்கையாளர்கள் பதிவு செய்வது இயல்பே! சம்பவங்களை நேரில் பார்ப்பவர்கள் மற்றும் காவல்துறையினர் தரும் தகவல்களை அடிப்படையாக வைத்தே இதைப் பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள். இதில் தவறுகள் நேர்வது இயல்பு. அதைத் திருத்திக் கொள்வதும் இயல்பே!

இந்தப் பத்திரிக்கையாளர்கள் எழுதிய ட்வீட்கள் உள்நோக்கத்துடன் தீங்கிழைக்கும் வகையில் இருந்தன. போராட்டக்காரர்கள் செங்கோட்டையை முற்றுகையிட அதுவே காரணம்' என்றும் முதல் தகவல் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. உறுதி செய்யப்படாத ஒரு தகவலை எழுதுவது என்பது தேச துரோகமா? நிச்சயம் இல்லை.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள், பண மதிப்பழிப்பு நடவடிக்கையை கண்டித்தவர்கள், ஜிஎஸ்டியை எதிர்த்தவர்கள், இப்போது டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் என பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் எல்லோருக்கும் சங்கிகளால் தவறாமல் கிடைத்துவரும் பட்டம் “தேச துரோகி”.

இப்போது மட்டுமல்ல காலங்காலமாக, அரசின் அடக்குமுறைகள், மக்கள் விரோத சட்ட திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் மீது பயன்படுத்துகிற சொல்லாகவே “தேச துரோகம்” என்பது உள்ளது.

இதன் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள தேச துரோக சட்டம் சமூக நலன் சார்ந்த போராளிகளை சிறையில் அடைக்கவும், அவர்களின் படைப்புகளை முடக்கவுமே பயன்பட்டு வருகிறது. இந்தியாவில் காலனிய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டம் குறித்து இப்போதும் தீராத விவாதங்களும், அடுக்கடுக்கான கேள்விகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

உரிமைக்கான குரல்களை ஒடுக்குவதற்கான காலனிய ஆட்சிக்கால சட்டம் இந்தியாவில் இன்ன மும் நடைமுறையில் இருந்தாலும், இங்கிலாந்தில் இச்சட்டம் இப்போது நடைமுறையில் இல்லை.

இந்த சட்டம் குறித்து இங்கிலாந்திலும் நீண்ட காலமாக விவாதங்கள் நடந்து வந்தது. பேச்சுரிமை ஜனநாயகத்தின் சிறப்பம்சம், தனிநபர்கள் அரசின் மீது வைக்கும் விமர்சனமே சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எனக் குறிப்பிட்டு, தேசதுரோக சட்டத்தை நீக்க 1977ஆம் ஆண்டில் பிரிட்டன் சட்ட ஆணையமே பரிந்துரைத்தது.

கருத்து சுதந்திரம் ஒரு உரிமையாக இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் தற்போதும் நடைமுறையில் இருப்பது நியாயமற்றது என்ற அடிப்படையில் 2009ஆம் ஆண்டில் தேசதுரோக சட்டத்தை இங்கிலாந்து நீக்கியது.

இந்தியாவில் தேச துரோக சட்டத்தின் வரலாறு

1837ஆம் ஆண்டில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாக தேசதுரோகம் என்பதையும் இணைப்பது, தாமஸ் பாபிங்டன் மெக்காவின் வரைவறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த அந்த மசோதா 1860ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தாலும், கணக்கிலடங்கா தவறுகளை கொண்டிருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் பத்தாண்டுகளுக்கு பிறகு 1870இல் சிறப்புச் சட்டம் மூலம் மெக்காலேவின் சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தது. அரசாங்கத்தின் மீதான அதிருப்தி உணர்வுகளை தூண்டுவதை தண்டிப்பதே இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. ஆங்கிலேயர் களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமைகளை நசுக்கு வதற்கான கருவியாக இச்சட்டம் பயன்பட்டது.

ஆனால் இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள ஒரு சட்டம் இந்தியாவிற்கும் அப்படியே பொருந்தும் என்பதை கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தியாவில் நிலவும் சமூக நிலைகளும், இங்கிலாந்தில் நிலவும் சமூக நிலைகளும் ஒன்றாக இல்லை என்பதே அதற்கு முக்கியக் காரணம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அலி சகோதரர்கள், காந்தி, அன்னி பெசண்ட் போன்றோர் இச்சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 1947க்கு பின்பு இதுவரையில் கணக்கிலடங்காதோர் தேசதுரோக சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள், விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்ளிட்ட பலர் மீது தேசதுரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் விவகாரம், குடி யுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட் டம், கூடங்குளம் அணு உலை போராட்டம் உள்ளிட்டவற்றில் ஏராளமானோர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சட்டம் குறித்த கே.எம்.முன்ஷி யின் கருத்தை அறிவது அவசியமாகிறது. 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவறிக்கை வெளியானது. அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருத்தங்களுடன் அரசியலமைப்பு வரைவறிக்கையின் மறு பதிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில், அரசியலமைப்பு நிர்ணய சபையானது “அவதூறுகள்” குறித்து விவாதித்தது. அப்போது தேசதுரோகம் என்ற வார்த்தையை அரசியலமைப்பில் இருந்து நீக்குவதற்கான திருத்தத்தை கே.எம்.முன்ஷி முன்மொழிந்தார்.

தேசதுரோகம் என்ற வார்த்தைக்குப் பதிலாக வேறொரு சொற் றொடரைப் பயன்படுத்த வேண்டுமென்பது அவருடைய வாதம். இந்த வார்த்தை அரசின் பாதுகாப்பை கேள்விட்குட்படுத்துவதாக உள்ளது என்றார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் அரசுக்கு எதிராக கூட்டம் நடத்துவதோ, ஊர்வலம் செல்வதோ கூட தேசதுரோகமாக இருந்தது. அரசுக்கு எதிரான கருத்தை முன்வைப்பது கூட தேச துரோகமாக கருதப்பட்டது என்பதையும் கே.எம்.முன்ஷி குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் அடிப்படையே அரசாங்கத்தின் மீதான விமர்சனம்தான் என்பது அவரது கருத்து. அரசியல் நிர்ணய சபை ஒருமனதாக இதனை ஏற்று, தேசதுரோக சட்டப்பிரிவு 124-ஏ-வை நீக்கியது. இது அரசின் மீதான அதிருப்தி உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை உண்டு என்பதை உணர்த்துவதாகவே இருந்தது.

ஆனால் பின்னாளில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் இந்த முக்கிய விவாதங்கள், காற்றில் பறக்கவிடப்பட்டு தேச துரோக சட்டம் மீண்டும் தண்டனை சட்டத்தில் இணைக்கப்பட்டது. இது தொடர்பான 2 முக்கியமான வழக்குகளில், உச்சநீதி மன்றம் எப்படி முரணான நிலைப்பாடுகளை எடுத்தது என்பதை 2 உதாரணங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

சென்னை மாகாணத்தில் இருந்து வெளியான ”கிராஸ் ரோட்ஸ்” என்ற இதழை காங்கிரஸ் அரசு தடை செய்தது. இடதுசாரி சிந்தனையாளர் ரோமெஷ் தாப்பர் நடத்திய இவ்விதழில் காங்கிரஸ் அரசு மீதான விமர்சனங்கள் இருந்ததே தடைக்கு காரணமாக இருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில், 1950ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு விரோதமானது என தீர்ப்பளித்தது. நீதிபதி ஃபசல் அலி, கிராஸ் ரோட்ஸ் இதழுக்கு தடை விதித்த அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தார்.

ஆனால் 1962ஆம் ஆண்டில் கேதர்நாத் சிங் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தேச துரோக சட்டத்தை இந்தியாவில் மீண்டும் நுழைத்தது. ஒருவரின் கருத்து உடனடியாக பொது அமைதியை சீர்குலைத்தாலோ அல்லது வன் முறையைத் தூண்டினாலோ காலனிய ஆட்சிக்கால சட்டப்பிரிவு 124-ஏ பயன்படுத்தலாம் என 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

ஆனால் கருத்துரிமையை கட்டுப்படுத்த இப்பிரிவை பயன்படுத்தக் கூடாது என்றும், இப்பிரிவின் கீழ் வழக்குப் பதியும்போது இத்தீர்ப்பை கருத்தில் கொள்ளவும் அறுவுறுத்தியது.

ரோமெஷ் தாப்பர் வழக்கில், அரசின் நடவடிக்கை செல்லாது என தீர்ப்பளித்த 5 பேர் கொண்ட அமர்வில் ஒருவராக இருந்த நீதிபதி எஸ்.ஆர்.தாஸ், இந்த அமர்விலும் இடம்பெற்றிருந்தார். இப்பிரிவின் கீழ் வழக்குப் பதியும்போது, இந்த தீர்ப்பின் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஆனால் அன்றுமுதல் இன்றுவரை அடக்குமுறைக் கருவியாகவே இச்சட்டம் ஏவப்படு வதும், அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி விடுதலை பெறுவதும் முடிவில்லாத தொடர் கதையாகிவிட்டது.

‘தேச துரோகச் சட்டத்தை உண்மையிலேயே நாட்டுக்கு விரோதமாக நடக்கும் செயல்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாரோ சிலர் இங்கும் அங்கும் சில கோஷங்களை எழுப்புவ தெல்லாம் தேசவிரோதம் ஆகிவிடாது’ எனக் கடந்த 1995ஆம் ஆண்டு பல்வந்த் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது. 2016 செப்டம்பரில் ஒரு தீர்ப்பில், இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிகளையும் விவரித்தது.

ஆனால் அவற்றை யாரும் பின்பற்றவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் சட்ட ஆணையம் இந்த இ.பி.கோ 124 (A) பிரிவை நீக்குவதற்குப் பரிந்துரை செய்தது. அல்லது ‘அரசுக்கு எதிராகக் கலவரங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்கள் மீது மட்டுமே இந்தச் சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று யோசனை சொன்னது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் ஆகியோர் வரிசையில் இப்போது பத்திரிக்கையாளர் மீதும் வழக்கு.

‘இப்படி வழக்கு பதிவுசெய்வது, பத்திரிக்கை யாளர்களை அச்சுறுத்தும் முயற்சி’ என இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்திய பிரஸ் கிளப் தலைவர் ஆனந்த் சஹாய், “எமர்ஜென்சி காலத்தில்கூட பத்திரிக்கையாளர்கள் இவ்வளவு கடுமையாக நடத்தப்பட்டது இல்லை. உத்திரப்பிரதேசம், மணிப்பூர், குஜராத், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களில் சமீப காலங்களில் இப்படிப் பத்திரிக்கையாளர்கள் மீது தேச துரோக வழக்கு போடுவது அதிகரித்துள்ளது” என்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும்போதுகூட பிரிட்டிஷ் கால முறைப்படி நாங்கள் இனி பட்ஜெட் தாக்கல் செய்ய மாட்டோம், வழக்கமான முறையில் சூட்கேஸில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்துவரும் முறையை கடைபிடிக்க மாட்டோம் என பாஜக அரசு கூறி வருகிறது.
அவர்கள் எண்ணப்படியே கொரோனாவை காரணம் காட்டி பட்ஜெட் உரை அச்சிடுவதை தவிர்த்து, சூட்கேஸ் எடுத்துவரும் வழக்கத்தை விட்டுவிட்டார்கள். ஆனால் காலனிய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒடுக்குமுறைச் சட்டத்தை நீக்குவோம், அது இந்தியாவுக்கு தேவை யில்லை என இவர்கள் ஒருபோதும் கூற மாட்டார்கள்.

- பிரகாஷ் (தகவல் ஆதாரம்: ‘பிரன்ட்ரைன்’ இதழில் ஏ.ஜி. நூரானி எழுதிய கட்டுரை)