பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யாசிங் தாக்கூர், வர்ணாஸ்ரமத்தை ஆதரித்துப் பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் என்ற ஊரில் அவர் பேசியபோது ‘பிராமணர் - சத்திரியர் - வைசியர்’களை அந்த வர்ணத்தைக் கூறிஅழைத்தால் தவறாகக் கருதுவதில்லை. ஆனால் ‘சூத்திரரை’ சூத்திரர் என்று அழைத்தால் ஏன் தவறாகக் கருத வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

மனுசாஸ்திரமும் ஸ்மிருதிகளும் ‘சூத்திரர்’ என்றால் யார் என்பதை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.

“உடைந்த மட்பாண்டங்களில் தான் சூத்திரனுக்கு உணவளிக்க வேண்டும். அதையும் ஒரு சேவகன் மூலமே செய்ய வேண்டும்.” (சு.55)

கோயிலின் வெளிப்பிரகாரம் அல்லது வேறெந்த மதச்சம்பந்தப்பட்ட இடங்களிலாவது சூத்திரன் நுழைந்து தீட்டானால் என்ன செய்ய வேண்டும்?

“அந்த இடங்களை ஒரு பசு மாட்டை நடக்கச்செய்து, பின் பசு மூத்திரத்தை தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்” - ஹரித ஸ்மிருதி

சூத்திரனைவிட மிருகங்களின் கழிவே உயர்வானது. ஏனென்றால் பசுவின் மூத்திரத்தைக் குடித்தால் சூத்திரன் தொட்டதால் உண்டான தீட்டினின்றும் தூய்மை அடைகிறான்.  (சமவார்த ஸ்மிருதி, 183)

‘சூத்திரன்’ - ‘பிராமணர்’களின் வைப்பாட்டி மகன். - மனு சாஸ்திரம்

இந்து மதம் சூத்திரர்களுக்கு தரும் “பெருமை’ இவை. இன்னும் ஏராளமாகப் பட்டியலிட முடியும்.

இப்படி ஒரு இழிவை சூத்திரர் சுமந்து கொண்டு அதைப் பெருமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் பிரக்யாசிங் தாக்கூர்.

மனு சாஸ்திரம் இப்போது எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்போருக்கு பிரக்யாசிங்கே பதில் கூறி விட்டார். ‘மனு சாஸ்திரம்’ இந்து மதமாக இந்து மதத்திலேயே இருக்கிறது. போலீஸ் மோப்ப நாயை வைத்து மனு சாஸ்திரத்தை தேட வேண்டியது இல்லை. நாங்களே அதை ஆதரிக்கிறோம் என்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி மறைத்து வைத்திருக்கும் வர்ணாஸ்ரம ஆதரவை ‘வெடிகுண்டு புகழ்’ பிரக்யாசிங் தாக்கூர் வெளியே கொண்டு வந்து போட்டிருக்கிறார். கோட்சே ஒரு தேச பக்தர் என்று நாடாளுமன்றத்தில் பேசியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை இராசேந்திரன்