‘சனாதன தர்மத்தைத்’ திணிக்கும் அணிக்கும் அதை முறியடிக்கும் அணிக்குமான போராட்டக் களமாக உருவெடுத்திருந்தது தமிழகத் தேர்தல் பரப்புரைக் களம். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி.

தி.மு.க. அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து அரசியல் கட்சிகளுமே தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் சமூக நீதிக்கு வலிமை சேர்த்தும் மதவெறி அரசியலுக்கு எதிராகவும் ஒரே குரலில் ஒலித்ததை தமிழகம் பார்த்தது.

அ.இ.அ.தி.மு.க. - பா.ஜ.க. அணியோ தங்களது ‘சனாதன தர்ம’ ஆதரவுப் போக்கை வெளிப்படையாக மக்களிடம் நேரடியாகப் பேச முடியாமல் திணறிப் போய் தனிமனித விமர்சனங்களைக் கையில் எடுத்தது. இந்தியாவின் ‘இந்துத்துவ’ அவதாரமாக பார்ப்பனிய சக்திகளால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பிரதமர் மோடியின் நிலையோ பரிதாபம்! தமிழ்நாட்டில் அவர்களின் கட்சியாலும் கூட்டணி கட்சிகளாலும் தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் மோடி ஓரம் கட்டப்பட்டார். அவரது ‘சித்தாந்த முகம்’ சீந்துவாரற்ற எதிர்மறையான நிலையையே தமிழக மக்களின் உள்ளங்களில் ஆழப்பதித்து வைத்திருக்கிறது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்திய ‘அரசியலுக்கான இளைஞர்கள்’ அமைப்பு, சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையையே முதலிடத்தில் நிற்கிறது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளது.

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஏப்.5, 2021) புதுடில்லி அய்அ.அய்.டி.யில் பணியாற்றும் ஆய்வாளர் ரித்திக்கா கேரா என்பவர் அனைத்து தேர்தல் அறிக்கைகளையும் ஆய்வு செய்து விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதில் 17,000 வார்த்தைகளைக் கொண்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை மிகவும் விரிவானது.

மக்கள் நலத் திட்டங்கள் குறித்து 55 முறையும், கல்வி-பள்ளிகள் குறித்து 61 முறையும், உணவு சுகாதாரம் குறித்து 17 முறையும் பேசுகிறது. ஏனைய தேர்தல் அறிக்கையில் இந்த முக்கிய பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. குறிப்பாக பா.ஜ.க. அறிக்கை இப்பிரச்சினைக் குறித்து 23 முறை மட்டுமே பேசுகிறது. ஆதி திராவிடர் நலத் துறையை பட்டியலின மக்களின் நலத்துறையாக பெயர் மாற்றுவோம் என்பதோடு பா.ஜ.க. நிறுத்திக் கொண்டது.

மாறாக தி.மு.க. தேர்தல் அறிக்கை - அரசு வேலைகளில் இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, தலித் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள், தங்கும் விடுதிகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. ‘பஞ்சமி’ நிலங்களை மீட்டு ‘தலித்’ மக்களிடம் ஒப்படைப்போம் என்று கூறுகிறது பா.ஜ.க. தேர்தல் அறிக்கை.

ஆனால், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த போது (இப்போது தமிழக பா.ஜ.க. தலைவர்) இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகனிடம் மனு அளித்தபோது அதை ஏற்காது நிராகரித்தார் என்ற தகவலையும் ஆய்வாளர் சுட்டிக் காட்டுகிறார்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விலை இல்லாத திட்டங்களைப் பற்றி மட்டுமே தமிழ்நாட்டு ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றனவே தவிர, அதில் இடம் பெற்றுள்ள ஆக்கபூர்வமான திட்டங்களை விவாதத்துக்கு உட்படுத்துவது இல்லை என்று குறிப்பிடுகிறார் அந்த ஆய்வாளர்.

நீட் திணிப்பு; மாநிலங்களின் அடையாளங்களைப் பறித்தல்; இந்தி - சமஸ்கிருதத் திணிப்புகள் வடநாட்டாருக்கு ‘தாரை’ வார்க்கப்படும் வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வைப் பல இலட்சம் மக்களிடம் தி.மு.க. அணி - குறிப்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.

வாக்கு சேகரிப்புக்கான பேச்சு என்றாலும்கூட அதன் தாக்கம் அதையும் கடந்து நிற்கிறது. சமூக விழிப்புணர்வை மக்களிடையே இவை ஆழமாக விதைத்திருக்கிறது என்பது இதில் அடங்கியுள்ள முக்கிய அம்சம்.

10 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத தி.மு.க. மீதான தனி நபர் சார்ந்த குற்றச்சாட்டுகளைத்தான் பிரதமர் போன்ற நிலையில் உள்ளவர்களே பேசினார்கள். தங்களின் மதவாத சிறுபான்மை வெறுப்பையோ பார்ப்பனிய அரசியலையோ இடஒதுக்கீட்டு எதிர்ப்பு கொள்கைகளையோ பெரியார் மண்ணில் முன் வைக்க முடியாமல் பதுங்கி நின்றார்கள்.

தேர்தல் பரப்புரையின் இறுதி கூட்டத்தில் தனது தொகுதியான கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் பேசியபோது, ஒரு கேள்வியை முன் வைத்தார். பெரியார் சிலைகளுக்கு இங்கே காவி அடித்தீர்கள்; ஆனால் பா.ஜ.க. வேட்பாளர்களே இப்போது தேர்தல் பரப்புரையில் இடம் பெற்ற ‘மோடி’யின் பெயரை மறைக்க சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் தமிழ்நாடு என்று நச்சென்று கூறினார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சனாதன தர்மத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து தமிழ்நாட்டின் சுயமரியாதைக் களத்தைச் சூடேற்ற வேண்டிய மிகப் பெரும் கடமை காத்திருக்கிறது.

‘திராவிடம்’ என்ற கோட்பாட்டின் உள்ளடக்கம் ‘சுயமரியாதை; சமூகநீதி’ என்ற கருத்தாக்கத்தைக் கடந்த பல ஆண்டுகளாகவே திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து பேசியது, எழுதியது, பரப்புரை செய்தது.

அந்த முழக்கம் இந்த தேர்தல் களத்தில் தி.மு.க.வின் கோட்பாடாக ஏற்கப்பட்டு விளம்பரங்களாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இது பெரியாருக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

- விடுதலை இராசேந்திரன்