தமிழ்நாட்டின் தேர்தல் களம் சனாதன தர்மத்துக்கு எதிரான களமாக உருவெடுத்திருக்கிறது. அதாவது சமூகத்தில் ‘ஜாதி-வர்ணா ஸ்ரம’ ஒடுக்குமுறைகளை மாற்றவே முடியாது; அது நிலையானது என்பதே ‘சனாதன தர்மம்’. வேதமதத்தை ஒட்டு மொத்த மக்களின் ‘இந்து’ மத தர்மமாக்கி திணிக்க முயலும் ‘சனாதன’ கட்சியான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., அதனிடம் ‘சரண’டைந்து கிடக்கும் அ.தி.மு.க. உதவியுடன் ‘சனாதன தர்மத்தைத்’ திணிக்கிறது. கல்வியை முடக்குதல், இஸ்லாமியர்களே எதிரிகள் என்று அவர்களைத் தனிமைப்படுத்தி ‘மனுவாதி’களின் சமூகச் சுரண்டல் மேலாதிக்கத்தை திசை திருப்புதல், ‘சனாதன தர்மத்தின்’ அடையாளமான மக்களே பேசாத மொழியான சமஸ்கிருதத்தை திணித்தல், நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான தொழில் வளர்ச்சி, விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, ‘நீட்’ திணிப்பு, இடஒதுக்கீடு மறுப்பு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைவிட ‘வேத பார்ப்பனியத்தை’ உயர்த்திப் பிடிப்பதே முதன்மையான இலட்சியம் என்ற நோக்கத்தோடு ‘சனாதன தர்மத்தைத்’ திணிக்கிறது அ.இ.அதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி.

இந்த நிலையில் இந்த ஆபத்துகளை முறியடிக்க அ.தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டும்; இது வழமையாக இரு அணிகளுக் கிடையே நடக்கும் போட்டி அல்ல; ‘சனாதன தர்மத்தைத்’ திணிக்கும் பார்ப்பனிய அணிக்கும் சமூக நீதிக்கான மக்கள் அணிக்கும் இடையிலான கருத்துப் போராட்டம் என்று இறுதிகட்டப் பிரச்சாரத்தில் தலைவர்கள் பேசி வருகின்றார்கள்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் கடந்த 28ஆம் தேதி ஒரே மேடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினர். தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் இரண்டு கட்சிகளுக் கிடையிலான போட்டி அல்ல; இரு வேறு கருத்தியல்களுக்கு எதிரான போராட்டம். தமிழர்களின் மொழி, பண்பாடு, வரலாறு அனைத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்த்து நடக்கும் போராட்டம்.

பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைக் கொண்ட இந்தியாவில் அனைவரையும் சமநிலையில் நடத்தாமல் தங்களது பண்பாடுதான் உயர்ந்தது என்று திணிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுக்கு எதிரான போராட்டம். ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.இ.அ.தி.மு.க. இப்போது இல்லை; இப்போதுள்ள அ.இ.அ.தி.மு.க. - ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க.வாக மாறிவிட்டது.

அ.இ.அ.தி.மு.க. என்ற முகமூடியை அணிந்து வருகிறது. தமிழ் மொழி, பண்பாடு, உணர்வு என்பது அடுத்தவர்கள் காலில் விழாத பண்பாடு. அமித்ஷா, மோடி காலில் விழுந்து அந்தப் பண்பாட்டை அ.இ.அ.தி.மு.க. அழிக்கிறது” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன், இப்போது நடப்பது சனாதன தர்மத்துக்கும் அதை வீழ்த்த வேண்டும் என்ற சமூக நீதிக்கான சக்திகளுக்கும் இடையிலான போர் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம், கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், “பாரதிய ஜனதா கட்சி சனாதன தர்மத்தை தனது கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதை திராவிட கட்சியும் தேசிய இயக்கமும் தமிழ்நாட்டில் உறுதியாக எதிர்க்கிறார்கள்.

தந்தை பெரியாருக்குப் பின்னால் பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும் அதை எதிர்த்தார்கள். மூன்று தலைமுறை இங்கே சனாதன தர்மத்தை வென்று காட்டியிருக்கிறது. மீண்டும்’ சனாதன தர்மம்’ நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்வது வாக்காளர்களின் கடமை” என்று கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் இது தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கும் தேர்தல் என்று பேசி வருகிறார்.

தமிழ்நாட்டு மக்களிடம் உருவாகியுள்ள எதிர்ப்பு அலையைப் புரிந்து கொண்டதால் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் மட்டுமல்ல, பா.ஜ.க. வேட்பாளர்களே, மோடி - அமீத்ஷா படங்களைப் போடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்க வேண்டாம் என்று கையெழுத்திட்டு எழுதிய கடிதம் முக நூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இது போலி கடிதம், மறுப்பு தெரிவிக்கப் போகிறோம் என்று அ.இ.அ.தி.மு.க. ‘அய்.டி.’ பிரிவு மறுத்து மறுப்பு வெளியிடப் போவதாக அறிவித்தது. ஆனால் அப்படி மறுப்பு எதுவும் வெளியிடவில்லை.

- விடுதலை இராசேந்திரன்