திருச்சியில் கல்லூரி முதலாமாண்டு படிக்கிற காலத்தில் நான் தங்கியிருந்த விடுதி (mansion) -யில் ஒரு பாட்டி கழிவறை சுத்தம் செய்ய வருவார்கள். எது சோத்தாங்கை எது பீச்சாங்கை மலம் அள்ளும் தோட்டித் தாய்க்கு..?என்று நான் எழுதிய சோக வரிகளின் நாயகி அவர்தான். 'தீபாவளி காசு ஐந்து ருபாய் கொடுங்கப்பா' என வருடம் முழுவதும் வேலைபார்த்த அந்த அம்மா ஒரே ஒரு நாள் தான் என்னிடம் பணம் கேட்டார்கள். மற்றபடி விடுதி உரிமையாளர் என்ன தருகிறாரோ அதனை வாங்கிக்கொண்டு அவ்வளவு சுத்தமாக சுத்தம் செய்துவிட்டு நகர்வார். அதன் பிறகு கல்லூரிக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டினை எடுத்து நானும் நண்பர்களும் தங்கியிருந்தோம்.

பீங்கான் குழாயில் ஏதோ சிக்கி கழிவு உள்ளே போக மறுத்ததை சரி செய்ய வந்தவர் 20 ருபாய் கேட்டார். வீட்டு உரிமையாளர் 15 ரூபாய்க்கு பேசிய பேரத்தை ஏற்றுக்கொண்டு வேலை செய்ய வந்தவருக்கு கொல்லைபுறம் போக நான் கதவை திறக்க வீட்டு உரிமையாளர் ஆடு நுழையும் அளவிற்கான சந்தினை அவருக்கு காட்டினார். வேலி ஒரு இன்ச் நகர்ந்திருந்தால் கூட வெட்டு குத்திற்கு செல்லும் நம் ஆட்கள் ஒரு அரை அடி சந்தினை மட்டும் விட்டுவைத்து வீடுகட்டியதின் சூட்சுமம் அன்றுதான் எனக்கு புரிந்தது. ஆனால் சென்னை வந்த பிறகு அரை அடியும் லட்சங்களில் கோடிகளில் இருப்பதால் வீட்டு வாசலிலேயே கழிவுத்தொட்டி கட்டி அதன் மேல் கோலம் போடுவது குறித்தெல்லாம் சங்கோஜப்படாத வீட்டு உரிமையாளர்கள் மலம் அள்ளுபவர்கள் வீட்டில் நுழையத் தேவையில்லாததின் காரணத்திற்காக மகிழ்ந்தார்கள். இதெல்லாம் சுகாதாரத்திற்கு நல்லதுதானே என்று கேட்கிறீர்களா? நல்லதுதான் ஆனால் கையால் மலம் அள்ளுகிற அவர்கள் சுகாதாரத்தைப் பற்றி ஒருநாள் யோசித்திருப்போமா?

இங்கு எந்த வகையிலும் நான் யோக்கியன் என்று சொல்ல வரவில்லை. எல்லோரிடமும் சிறு சிறு தவறுகள் நிறைய இருக்கின்றன ஆனால் அதனை சரிசெய்ய முயன்றால் மிகப்பெரிய அளவிலான நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறும். நம்ம வீட்டு குழந்தைகள் நம்ம வீட்டுக்குள் மலம் ஜலம் கழிக்கும் போது நாமே அதை சுத்தம் செய்வதில்லையா? அதேபோல் நாமே தகுந்த பாதுகாப்போடு சுத்தம் செய்யலாமே! குறைந்த பட்சம் அவர்கள் கேட்கிற கூலியையாவது கொடுக்கலாமே! ஆயிரம் ருபாய் கொடுத்தாலும் நாம் மலம் அள்ள‌ ஒத்துக்கொள்வோமா? இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது நாங்கலெல்லாம் பாதிக்கப்படுகிறோம் என்கின்ற உயர் சாதியினர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

மாட்டின் பீ சாமியான போது மனித சாணம் அள்ளியவள் எப்படி தோட்டியானாள்? அது ஏன் ஒரே சாதிக்கான தொழிலானது? அவர்களை ஒடுக்கியவர்கள் யார் யார்? வேறு யாரும் இல்லை நம் பாட்டன் முப்பாட்டன்கள்தான். அவர்களின் பாவம் நம் பரம்பரைக்கும் வாரிசுகளுக்கும் தொடராமலிருக்க ஏதாவது செய்ய வேண்டாமா? குறைந்தபட்சம் ரயில்நிலையங்களில் ரயில் நிற்கிறபோது ரயிலில் உள்ள கழிவறையை பயன்படுத்தாமலாவது இருக்கலாமே! அதை அவர்கள் அள்ளும்போது நம்மால் பிஸ்கட்டும் டீயும் சாப்பிட முடிகிறதே எப்படி? நட்சத்திர உணவு விடுதியில் மாடியில் உட்கார்ந்து வெளிநாட்டு உணவு வகைகளை நாம் சுவைத்து கொண்டிருக்கும்போது அதே நட்சத்திர உணவு விடுதியின் பாதாள சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி விச வாயு தாக்கி ஒருவன் இறந்து போகிறானே! இது மிகப்பெரிய மனித சமூக முரண்பாடில்லையா? மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

ஜி.எஸ்.எல்.வி க்கள் ஏககாலத்தில் ஏவுகிற உலகம் மலம் அள்ளுவதற்கும் சாக்கடை சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகளை ஏன் செய்யவில்லை? அவர்கள் அதனை செய்ய மறுத்தால்தான் அது நடக்குமா? அவர்களுக்கான மாற்று தொழிலையும், கெளரவமாய் வாழும் நிலையினையும் உருவாக்க வேண்டாமா? கணவனை இழந்த ஒரு தோட்டித்தாய் தன் கணவனின் வேலையை தன் மகளுக்கு காசு கொடுத்து வாங்கிய கதையை சக ஊழியரிடம் சொல்லிக்கொண்டே தெருக்கூட்டிக் கொண்டிருக்கிறாள். இது மாபெரும் கொடுமையில்லையா? அவளது பேத்தியையாவது காப்பாற்ற நாம் குரல் கொடுக்க வேண்டாமா?அதன் மூலம் நம் மாண்பினை நாமும் உயர்த்திக் கொள்லலாம் அல்லவா!

Pin It