மக்கள் குமுகத்தின் வாழ்வியல் முறைகளையே பண்பாடு என்கிறோம். இவ்வாழ்வியல் முறைகள் திடுமென ஒரே காலத்தில் தோன்றி விடுவதில்லை. சமூகம் பல்வகையில் இயற்கையின் தாக்கங்களை எதிர் கொள்வதன் வழிப் படிப்படியாகப் பண்பாட்டு ஒழுங்கமைத்துக் கொள்கிறது. விலங்கியல் வாழ்வு முறையிலிருந்து படிப்படியாக வளர்ந்து தம் எண்ணங்களை வெளிப்படுத்திச் சொல்வதற்கு மொழி எப்படி தோற்றங் கொண்டதோ, அப்படியே தம் குலக் குழுவுக்குரிய வாழ்வியல் முறைகளையும் மாந்தக் குமுகம் வளர்த்துக் கொண்டது.

நீண்ட ஒரே நிலப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒவ்வொருகுலக் குழுவும் மொழியிலும், பண்பாட்டு வாழ்வியல் முறைகளிலும் தம் குலக் குழுக்களை வேறுபடுத்தி அறிந்து கொண்டன. ஆக, பண்பாடு என்பது ஒவ்வொரு குலக் குழுவிடத்திலும் வெவ்வேறு வகையில் மரபு தொடங்கி வளர்ச்சி கொள்கிறது.

கால வளர்ச்சியில் சொத்துடைமை தோற்றங் கொண்டு, சமூகங்கள் வகுப்புகளாக (வர்க்கங்களாக)ப் பிளவு பட்ட போதிலும், ஆண்டை வகுப்புகளின் பண்பாடு ஆளுமைப் பண்பாடு என்றும், அடிமை வகுப்புகளின் பண்பாடு அடிமைப் பண்பாடு என்றும் வேறுபாடுகள் தோன்றின. ஆயினும் அவற்றில் மரபுக் கூறுகள் இழையோடியபடியே தன் அடையாளத்தைக் காட்டி நின்றது.

நிலவுடைமைச் சமூகத்திலும் அதன் ஆளுமைப் போக்குக்கு மாறாக உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வியல் முறைகளைக் காத்து தனிப் பண்புகளோடு வாழ்ந்தனர். வணிகங்கள் தோன்றி, முதலாளிய உருவாக்க முறை உருக் கொண்ட பின்பு, உருக் கொள்ளுகிற தேசத்தில் கூட அதற்கான மரபு வழி வளர்ந்த பண்பாட்டுக் கூறுகளும் இழையோடியபடியே இருக்கிறது. ஒரு தேசத்திற்குள் மொழி எவ்வாறு படிநிலையில் காலத் தேவைக்கேற்ப, வளர்ச்சி கொள்ளுகிறதோ, அவ்வாறே பண்பாடும் கால வளர்ச்சி மற்றும் தேவைக்கேற்ப வளர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழ்த் தேசப் பண்பாடு

தமிழ்த் தேசத்தைப் பொருத்த அளவில் அதற்கு நீண்ட நெடிய மரபு வளர்ச்சி உண்டு. உலகில் பழந் தொன்மை இனங்களுள் ஓர் இனமாகத் தமிழினம் தன் பழமைக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. குறுகிய நிலப்பரப்புக்குள் பல்வேறு பட்ட நிலையில் தன்மைக்கேற்ற வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்ட தேசமாகத் தமிழகம் விளங்கியிருக்கிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை வாழ்வில் முறைகளில் பல சமூகங்கள் வேறுபட்டு இருந்தன. முதலாளிய உருவாக்கப் பொருள் வழியான வணிகம் தொடங்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே இயற்கை விளைப்புப் பொருள்களின் வணிகம் மிகப் பெருமளவில் நாடு கடந்து நடந்திருக்கிறது.

பழந்தமிழ் வீரர்கள் கால வாழ்க்கை முறைகள், இயற்கை விளைப்பு வணிக முறையில் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்த பண்டைய கிரேக்க உரோம வாழ்க்கை முறைகளாலும் வட நாடுகளின் வணிகத் தொடர்புகளின் வாழ்வியல் முறைகளாலும் கலப்பு கொண்டிருப்பினும், தமிழகம் தம் தேச அளவில் தன் பழமை வாழ்வியல் முறைகளோடான குமுக அமைப்பைக் கட்டிக் காத்திருந்தது.

தமக்குள் நான்கு சமூக வேறுபாடுகளைப் பழந்தமிழகம் கொண்டிருந்தாலும் அது வடக்கில் இருந்த ஆரிய ஒழுங்குமுறைகளான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வர்ண ஆச்சாரமாக இல்லை. குல வழி வேறுபாடுகளைக் கொண்டிருந்த குமுகம், பின்னர் ஆரிய குலப் பகுப்பு முறையால் வர்ண சாதியப் பகுப்பு முறையாக மாற்றங்கொண்டது. அதனால் தமிழக ஆண்டைகளின் ஆரிய ஆளுமைப் பண்பாடு தலைவிரித்தாடியது. தொடர்ந்து வந்த ஆரியச் சார்புடைய மராட்டிய, கன்னட, தெலுங்கு ஆளுமைச் சாதியர் ஆட்சியிலும், இசுலாமியர் ஆட்சியிலுமாகத் தமிழகம் அடிமையுற்றது.

ஆங்கிலேய வல்லரசு தம் வல்லரசிய ஆளுமையின் கீழ்த் தமிழகத்தை அரசியல், பொருளியலில் மட்டுமல்லாமல் பண்பாட்டாலும் அடிமைப்படுத்தியது. ஆக, வரலாற்றுக்குரிய பழங்காலங்களிலிருந்தே தமிழக மக்கள் பன்னாட்டுப் பண்பாடுகளை, வாழ்வியல் முறை மறுத்தும் எதிர்த்தும் சில கூறுகளில் கரைந்து மீள இயலாமலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

தமிழக நிலவுடைமைப் பிற ஆளுமையர்களின் பல பண்பாட்டுக் கூறுகளோடு கலந்துரையவும் செய்தனர். அத்தகைய போக்கால் சில வாழ்வியல் கூறுகள் தமிழர்க்குரியவையா இல்லையா என்பதாகக் கூட பிற் காலங்களில் ஆளுமையர்களிடையே மயக்கங்கள் ஏற்பட்டதுண்டு.

ஆளுமைப் பண்பாடுகளுள் இருந்த வேறுபாடுகள் ஆரியக் கூறுகளை எதிர்த்த நிலையிலும், வைதீகப் பண்புக் கூறுகளிலும் தமிழகப் பண்பாடுகள் சிறந்ததாக மூலமானதாக அறிவிக்கவும் செய்தன. ஆயினும் அவை, ஆரியம் உருவாக்கிய அரசியலையும், பிற் காலங்களில் அது உருவாக்கிய இந்து மதமெனும் வைதீகக் கலவை மதப் போக்கையும் எதிர்த்திடவில்லை. எனவே தமிழக ஆண்டை குலவகுப்புசார் பெருமளவில் பிற ஆளுமை குறிப்பாக ஆரிய வைதீகப் பண்புகளுள் மெல்ல கரையத் தொடங்கின. இந்நிலையில் தமிழ்த் தேசப் பண்பாடு என்பது எவை? அவற்றைக் காப்பது, வளர்ப்பது எவ்வாறு என்பன அடிப்படையான கேள்விகளாகின்றன.

உலகமயமாக்கம் என வல்லரசுகள் உலகம் முழுக்க ஆளுமை வலை விரித்திருக்கிற சூழலில் ஒரு தேசம் தன்னுடைய அரசியல், பொருளியல், வாழ்வியல், உரிமைகளில் அவற்றுக்கு அடிமைப்படாத வகையில் தமிழைக் காத்துக் கொள்வது என்பது மிகக் கடினமானதே. அவ்வாறு தேசங்கள் தங்களைக் காத்துக் கொள்ளத் தவறுவதுஅவை அவ் வல்லரசுகளுக்கு அடிமைப்பட்டுப் போகின்றன என்பதையே வெளிப்படுத்துகின்றது.

முற்றும் முழுமையான பொருளியல் சுரண்டல் நோக்கில் செயல்படும் வல்லரசுகள் அரசியல் வழியும் தங்களின் ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இத்தகைய ஆளுமைப் போக்குகள் ஒருபுறம் இருக்க, அடிமைத் தேச மக்களிடையே சிறிதளவும் விழிப்புணர்வு ஏற்பட்டு விடாத வகையில் அவற்றின் பண்பாட்டை, மொழியை மட்டுமின்றி வரலாற்றை உள்ளடக்கிய கல்வி முறைகளையெல்லாம் சிதைத்து அவற்றிலும் வல்லரசியங்கள் ஆளுமை செலுத்துகின்றன. இந்நிலையில் ஒரு தேசம் அரசியலில், பொருளியலில் உரிமைப் போராட்டங்கள் நடத்த வேண்டுமாயின், அது பண்பாட்டு உரிமைப் போராட்டங்களையும் செய்ய வேண்டியுள்ளது.

மொழிவழியான உரிமைப் போராட்டங்களும், பண்பாட்டு வழியான உரிமைப் போராட்டங்களும் அடிமைப்பட்ட தேசங்களுக்கு முகாமையாகின்றன. அவ்வாறு பண்பாட்டு வழியான உரிமைகளுக்காகப் போராட வேண்டுவதற்கு, தாங்கள் எந்த எந்த பண்பாட்டுக் கூறுகளைக் காப்பதற்காகவும், எவை எவற்றை எதிர்ப்பதற்காகவும், போராட வேண்டியுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கென தனி மொழியையும், பண்பாட்டையும் பெற்றிருக்கின்றன. ஒரு தேச மக்கள் வெளிப்படையாக அடையாளங் காட்டுவதே இவை இரண்டும்தாம்.

அரசியலும், பொருளியலும் ஒரு தேசத்தை அடையாளங் காண்பதற்குரியவை அல்ல. அதேபோல் ஒரு தேசத்தின் வரலாறு என்ன என்பது அத்தேச மக்களின் வாழ்க்கை முறையில் வெளிப்படையாகத் தெரிந்திடாது. ஆக, மொழியும், பண்பாடுமே தேசங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் காட்டும். எனவே, வல்லரசியமும், அதைச் சார்ந்த ஆளுமை அரசுகளும் அத்தேச அடையாளக் கூறுகளைப் படிப்படியாகச் சிதைப்பதற்கான அனைத்தையும் செய்கின்றன.

புறநிலையில் வெளிப்படுகிற நடை உடை வழியான நாகரிகப் போக்குகளிலும், வாழ்வியல் முறைகள் கொண்ட பண்பாட்டுக் கூறுகளிலும் வல்லரசியம் சலிப்பை உருவாக்குகிறது.

ஒரு தேசத்தின் குமுக மக்கள் அத்தேசத்தின் தட்ப வெப்ப இயற்கைச் சூழலுக்கேற்ற வகையிலேயே உடைகளை உடுத்தவும், உணவுகளை ஏற்கவும் செய்கின்றனர். அவ்வாறு உடை, உணவு முறைகளை வகைப்படுத்திக் கொள்வது காலம் காலமாக தேவை. முயற்சியில் ஒழுங்கமைக்கப்பட்டது.

கடும் குளிர் பகுதிகளுக்கு உகந்த குப்பாயம் போன்றவற்றை (கோட் சூட்டுகளை) வெப்ப மண்டலப் பகுதியில் உடுத்திக் கொள்வதும், பருத்தி தவிர்த்த பிற செயற்கையிழை ஆடைகளை உடுத்துவதும், உடல் உறுப்புகளின் காப்பு, மறைப்புகளுக்காக உடை உடுத்துவதும் ஆனால் அதைத் தவிர்த்து, உடல் அலர்ச்சிக்குரிய அரைகுறை உடைகளை உடுத்திக் கொள்வதும் வல்லரசியங்களின் ஊடகப் பரப்பல்கள் வழி ஏற்பட்ட அடிமைப் போக்குகளே.

பெண்களை பாலியல் வக்கிர வெறி யூட்டக் கூடிய உணர்வில் கவர்ச்சிப் பொருளாக்கியதும், அரைகுரை ஆடைகளை கொண்டு அழகிப் போட்டிகளை நடத்துவதும், அதன்வழி அழகுப்படுத்தலுக்கான புனைவுப் பொருள்களின் விற்பனைகளைப் பெருக்கிக் கொள்வதும் வல்லரசியப் பண்புச் சீரழிப்புகளே. இந்நிலையில், வல்லரசிய ஊடகப் பரப்பல் பெருக்கத்தால், ஏற்பட்ட கருத்துத் திணிப்புகளால் தங்கள் பண்பாடு எவை எவை என அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத மயக்கத்திற்கு தமிழ்த் தேசம் ஆட்பட்டிருக்கிறது.

தங்களுடைய பண்பாடு இன்னது என்று சொல்லி அடையாளப்படுத்திக் கொள்வதற்குக் கூட அது பண்பாடு வழிப்பட்ட அரசியல் தெளிவைப் பெறஇயலாத மயக்கத்தில் இருக்கிறது.

தமிழகப் பண்பாடு இந்தியப் பண்பாடா?

இதற்கிடையில், தமிழக மக்களின் பண்பாட்டை இந்தியப் பண்பாடு என இந்திய அதிகார வகுப்பு தன் ஊடக வலுவால் சொல்ல வைத்திருக்கிறது. அதன்வழி தமிழக மக்கள் தங்கள் பண்பாட்டை பண்பாடு என அறியாத நிலையிலும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்தியப் பண்பாடு என்றால் என்னப் பண்பாடு என்று அறிந்து கொள்ளும் அரசியல் தெளிவற்றவர்களாகவும் இருக்க நேரிடுகிறது.

இந்தியாவுக்குள் பல்வேறு தேசங்கள் அடைக்கப்பட்டிருப்பதை நாம் அறியவேண்டும். காஷ்மீரம், நாகலாந்து, மிசோரம், குரோத், ஒரியா, கேரளம், தமிழகம் எனப் பல தேசங்கள் அடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலுமுள்ள மக்களின் நாகரிகமும் பண்பாடும் வேறுபட்டவை என்பதை மேலோட்டமாகப் பார்க்கிற போதே அறிய முடியும்.

காஷ்மீர மக்களின் பண்பாடும், பஞ்சாபியர் பண்பாடும், நாகலாந்து மக்களின் பண்பாடும், குரோத்தியப் பண்பாடும், கேரள மக்களின் பண்பாடும், தமிழக மக்களின் பண்பாடும் ஒன்று போன்றவை அல்ல என்பதை எளிதே விளங்கிக் கொள்ள முடியும். அவரவர் வாழ்க்கை முறைகளும், உணவு மற்றும் உடை உடுத்து முறைகள் கூட வேறுபட்டன. மொழிகள் வேறுபட்டன. இப்படியான வேறுபாடுகளில் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்தியர் எனச் சொல்ல வைப்பதே இந்திய அரசியல் ஆளுமைப் போக்கு. இந்திய அரசால் அதற்குள் அடக்கப்பட்டிருக்கிற பல்வேறுபட்ட மக்களையும் இந்திய குடிமக்கள் என்று சொல்ல முடியுமே அல்லாமல் இந்தியர்கள் என்று சொல்ல இயலாது.

அரசியல் அளவில் எப்படி இந்தியர் எனச் சொல்ல இயலாததோ, அப்படியே இந்தியாவுக்குள் அடைக்கப்பட்ட மக்களின் பண்பாட்டைப் பொதுப்பட இந்தியப் பண்பாடு என்றும் சொல்ல முடியாது. இந்தியப் பண்பாடு என்று தனித்த பண்பாடு எதுவும் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மைத் தேசங்களுக்குள்ளும் இந்திய வைதீக ஆரியப் பார்ப்பன ஆளுமை வகுப்பினராக இருப்பதை அறியலாம். அவர்கள் தங்களுக்குள் ஓர் ஒருமித்த ஆளுமை இணைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஆரிய வைதீக முறைகளைப் பின்பற்றும் பார்ப்பனர்கள் தங்களுக்குள் பல கிளை வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற வைதீக ஆளுமைக் கோட்பாட்டில் ஒருமித்தவர்களே.

ஆரியக் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வேத புராணங்களை ஏற்பது தொடங்கி, வேறு எவருக்கும் தாய் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை தேவபாஷை என்கிற அடிப்படையில் தங்களின் ஆளுமைக் கோட்பாட்டிற்கான மொழியாக ஏற்பவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்திய ஆட்சிக்குட்பட்ட பல்வேறு தேசங்களின் சிறு, பெரு தெய்வ வழிபாடுகளையெல்லாம் இணைத்தும் அதற்கு இந்து மதம் எனப் பெயரமைத்து, அம்மத வழிப்பட்ட சடங்கு, வழக்கு முறைகளைத் தாங்களே தீர்மானிப்பவர்களாகக் காட்டிக் கொண்டு, அதற்குரிய கலை பண்பாடுகளையே இந்தியப் பண்பாடு என அறிவித்துக் கொள்கின்றனர். ஆக, இந்திய அரசு இந்தியப் பண்பாடு என அறிவிப்பதும், பரப்புவதும் அத்தகைய ஆரிய வைதீகப் பண்பாடுகளையே ஆகும்.

பல்வேறுபட்ட தேசங்களின் மக்கள் பண்பாடுகளை எல்லாம் மறுத்தும், ஏற்காமலும், அடக்கியும் வைப்பதோடு, இந்தியப் பண்பாடு என ஆரிய வைதீகப் பண்பாட்டை இந்திய ஆதிக்க யரசு பரப்புவதை அந்தந்த தேசங்களின் உழைக்கும் மக்கள் எவ்வாறு ஏற்க முடியும். ஆக பல தேசங்களின் பண்பாட்டுக் கூறுகளை மறுக்கிற இந்தியப் பண்பாடு ஒரு குறிப்பிட்ட தேசத்தின் பண்பாடாகி விட்டது.

அடுத்து, தமிழக மக்களின் பண்பாடு இந்துப் பண்பாடு எனச் சொல்லப்படுவது குறித்தும் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களின் பண்பாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ள கிறித்தவ, இசுலாமிய, பௌத்த, சீக்கிய, சமண மதச் சார்பற்ற பிறர் அனைவரின் பண்பாட்டையும் இந்துப் பண்பாடு என்று மதவியலாளர்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சியரும் பரப்பல் செய்கின்றனர். ஒரு மதத்திற்கென்று ஒரு தனித்த பண்பாடு உண்டு என்று கருதுவதும், பரப்புவதும் உண்மைக்கு நேர்மாறானது.

உலகில் பல நாடுகள் கிறிஸ்துவத்தையும், இசுலாத்தையும் தழுவி உள்ளன. அந்த அந்த மதங்களின் வழிபாட்டு முறைகள் என்கிற வழக்கங்கள் பொதுப்பட பல நாடுகளின் மக்களிடையே ஒன்று போல இருந்தாலும் அவரவர்களின் வாழ்வியல் முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறை வழக்கங்கள் உள்ளிட்ட பல பண்பு நிலைகள் மாறுபட்டனவாகஉள்ளன.

கிறித்தவ மதத்தைச் சார்ந்த ஐரோப்பிய நாடுகள் பல வேறுபட்ட பண்பாடு, மொழிகளைக் கொண்டிருக்கின்றன. அவ்வேறுபட்ட பண்பு வழி தங்களின் தனித் தன்மைகளை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. இசுலாத்தைத் தழுவிய இசுலாமிய நாடுகள் பல வேறுபட்ட பண்புக் கூறுகளோடு தனித்தன்மையில் உள்ளன. பாக்கிசுதானும், வங்காளமும் மத அடிப்படையில் ஒரே அரசாகக இருக்க இயலாமல் தனி நாடுகளாவதற்கு அவற்றுக்கு இடைப்பட்ட தேசிய இன வழி வேறுபாடுகளே காரணம்.

அரபு நாடுகள் அக்கம் பக்கமாக நெருங்கி இருந்தும்,மத அளவில் இசுலாத்தைத் தழுவிய போதும் பல நாடுகளாகப் பிரிந்திருப்பதற்கு, அவை பல்வேறு இனம் சார்ந்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதே காரணம். ஆக, இந்திய ஆட்சி அதிகாரத்திற்குள் அடக்கப்பட்டுள்ள பல தேசங்களின் மக்கள் இன்றைக்கு வளர்க்கப்பட்டிருக்கிற இந்து மத வழிபாட்டு முறைகளில் ஒத்த போக்குக் கொண்டிருந்தாலும், அவர்கள் ஒரே பண்புடையவர்களாக மொழியைக் கொண்டவராக இல்லை.

இந்து மதத்தை அரசு மதமாகவே அறிவித்திருந்த நேப்பாள மக்கள் அதன் அருகில் ஒட்டி இருந்த பிகாரிய, வங்காளிய இன மக்களிலிருந்து வேறுபட்ட மொழி, பண்பாடுகளைக் கொண்டிருப்பவர்கள் என்பதை அறியலாம். ஒரே மதம், சார்ந்தவர் என்பதற்காக நேப்பாளப் பண்பாட்டையும், மேற்கு வங்கப் பண்பாட்டையும் ஒரே பண்பாட்டு எனக் கூறிட முடியாது.

தமிழக மக்கள் பண்பாடு எது?

ஆக, இத்தகைய விளக்கங்களோடு நாம் நம் தமிழ் மக்களின் பண்பாடு எது என்றறிவதும் தேவையானது.

ஒரு தேசம் தன் மொழி உரிமைகளுக்காகவும், அரசியல், பொருளியல், உரிமைகளுக்காகவும் எந்த அளவு போராட்ட முனைப்பு கொள்கிறதோ அந்த அளவு அதன் பண்பாட்டு உரிமைகளுக்காகவும் முனைப்பு கொண்டாக வேண்டும். பண்பு வழி உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல், ஒழுங்கமைக்காமல் போகிற தேசம் அரசியல், பொருளியல் வழி உரிமைகளைப் போராடி மீட்பதிலும் அக்கறை செலுத்த இயலாது.

ஏனெனில் பொருளியல் வழியும், அரசியல் வழியும் சுரண்டுகிற அடிமைப்படுத்துகிற பன்னாட்டு முதலாளி களும் அதன் அரசுகளும் பண்பாட்டு வழியாக தேசங்களின் அனைத்து அடையாளங்களையும் சிதைக்கவும் கெடுக்கவும் செய்கின்றன.

வெறிமயக்கக் குடிப்புகளைக் பெருமளவில் விற்பனை செய்கின்றன. பாலியல் வக்கிர வெறியுணர்வை வளர்க்கின்றன. மதவெறி மயக்கங்களைப் பரப்புகின்றன. விளையாட்டுகளைச் சூதாட்டங்களாக்குகின்றன. குமுகப் பொறுப்பு சிந்தனை என்கிற உணர்வுகளிலிருந்து ஒவ்வொருவரையும் தனித்தனிப் போக்குடையவர்களாக மாற்றுகின்றன ஆக இந்த வகையில் எல்லாம் குமுகத் தொடர்பற்ற உதிரிப் போக்குகளை உணர்வுகளை வளர்க்க வளர்க்க மக்கள் ஒருங்கிணைப்பு மக்கள் பண்பு என்பது சிதைக்கப்படுகிறது. அவை சிதைக்கப்படுகிற சூழலில் வல்லரசுகளும், ஆண்டை அரசுகளும் தங்களின் சுரண்டலையும் அதிகாரத்தையும் எளிதே செய்ய முடிகிறது.

ஆக, வல்லரசியச் சுரண்டலை, அரசதிகாரத்தை எதிர்த்து அரசியல், பொருளியல் உரிமைகளுக்காகப் போராடுகிற ஒரு தேசம் தன்னுடைய மக்கள் பண்புகளைக் காப்பதிலும், அவற்றைத் தேச ஒருங்கிணைப்பில் வளர்த்தெடுப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். தமிழகத்தைப் பொருத்த அளவில் இரண்டு பெரிய அதிகாரங்களை தமிழக மக்கள் முதன்மையாக, கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

ஒன்று பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையும் அதன் அதிகாரப் போக்கும், மற்றது இந்திய அரசதிகாரம். இந்த இரண்டு அதிகார முனைகளையும் வீழ்த்துவதன் வழிதான் தமிழகம் தன் அரசியல் பொருளியல் உரிமைகளை அடையவும், அவற்றின் ஊடாகத் தமிழகத்தின் பிற அதிகார முனைகளைப் படிப்படியாக அடக்குகிற ஒரு மக்கள் குடியாட்சியை நிறுவ முடியும்.

ஆக, அந்த இரண்டு அதிகாரப் போக்குகளையும் அரசியல் வழியாகவும், பொருளியல் வழியாகவும், சுட்டிக் காட்டி எதிர்ப்பது மட்டுமல்ல, பண்பாடு வழியாகவும் சுட்டிக் காட்டி எதிர்க்க வேண்டியுள்ளது.

வல்லரசியங்களின் வக்கிற பண்பாடுகளை விரட்டி அடிக்க வேண்டியுள்ளது. இந்திய வைதீகப் பார்ப்பனிய ஆளுமைப் பண்புகளை அடி அறுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், வல்லரசியங் களால் உருவாக்கப்பட்டிருகுகிற வெறி மயக்கக் குடிப்புகளை எதிர்ப்பது, பாலியல் வக்கிர வெறி அதன் வழி பெண்ணடிமைப் போக்கை உருவாக்குகிற அழகுப்போட்டி, உள்ளிட்டவற்றை எதிர்ப்பது, மதப் பரப்பல்களை மத நிறுவனப் பரப்பல்களை எதிர்ப்பது, விளையாட்டுச் சூதாட்டங்களாக்கிப் பரப்புவதை எதிர்ப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரப் போக்குகளுக்கும் எதிராகப் போராடி அழிக்க வேண்டியுள்ளது.

இந்திய வைதீக ஆளுமைக் கூறுகளாக இருக்கிற வர்ண, சாதி அடக்குமுறைகளை எதிர்ப்பது கோயில்கள் என்கிற பெயரில் அடிக்கப்படும் கொள்ளைகளை எதிர்ப்பது, வழிபாட்டு முறைகளில் சமஸ்கிருத வைதீகமயமாக்கத்தை எதிர்ப்பது (வழிபடுதல் தனிப்பட்ட ஒருவரின் விருப்பம் என்கிற அளவைக் கடந்து மத வழிபட்ட பரப்பல்களை நிறுத்துவது) தமிழை வழிபடத் தகுதியற்றதென அழிவுபடுத்துகிற சமஸ்கிருதஆளுமையை அடியோடு ஒழிப்பது, தமிழ்த்தேச வரலாற்றை, வாழ்வியலை மூடி மறைத்து அப்பிக் கிடக்கிற ஆரிய வைதீகக் குப்பை கூளங்களிலிருந்து தமிழ்த்தேச மக்கள் வரலாற்றை மீட்டெடுப்பது, வல்லரசிய, இந்திய வைதீக ஆளுமைக்கு அடிபணியாத உரிமை பெற்ற தேசத் தேவையை யொட்டிய வரலாற்று வழிபட்ட கல்வி முறையை உருவாக்குவது போன்ற அனைத்து நிலைகளிலும் முனைப்பு கொள்ளுதல் வேண்டும்.

ஆக, இந்த இருமுனை ஆதிக்கப் போக்குகளை அதன் பண்பாட்டுச் சீரழிப்புகளை எதிர்க்கிற மக்கள் உரிமைப் பண்புக் கூறுகளே தமிழ்த்தேசப் பண்பாடாக இருக்க முடியும். ஆண்டை அதிகாரப் போக்குடைய வல்லரசிய, இந்திய பண்பாடுகளை எதிர்த்து விரட்டுவதன் வழிதான் தமிழக உழைக்கும் மக்களின் பண்பாட்டைக் காக்கவும், வளர்க்கவும் முடியும்.

மக்களுக்குள் ஏற்றத்தாழ்வான வாழ்வியல், கருத்தியல்களைக் குழிதோண்டிப் புதைத்து சமன்மை உணர்வோடு வளர்க்கும் தமிழ்த் தேசப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதுதான் வழி ஆதிக்க வெறி பண்பாடுகளை விரட்டியடிப்போம்!

- தமிழரசு

Pin It