சபர்மதி சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத்ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 30ந் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்ததையடுத்து கடந்த 28-30ந் தேதிகளில் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். இந்த விசாரணையின் போது போதிய ஒத்துழைப்புத் தராமல் சிபிஐ அதிகாரிகளுக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளார் அமித்ஷா. முக்கியமாக போலி என்கவுண்டர் தொடர்பான கேள்விகளுக்கு மவுனம் சாதித்திருக்கிறார்.

அமித்ஷா, தான் கைது செய்யப்படுவதற்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்ததோடு, தன்னை தைரியமானவராகவும், போலி என்கவுண்டரில் தொடர்பில்லாத பரிசுத்தவானாகவும் காட்டிக் கொள்ளும் வகையில் சிபிஐ தன்னை விசாரிக்கும்போது முழு விசாரணையையும் கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் வீர வசனம் பேசியிருந்தார். ஆனால் சிபிஐ கைது செய்த பின் லோ வாய்ஸ் ஆகி அமைதியாக இருக்கிறார் ஒத்துழைப்புத் தராமல்.

முன்னதாக, அமித்ஷா விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என அவரது வக்கீல்கள் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிபிஐயோ விசாரணையை ஆடியோவில் தனியாகவும், வீடியோவில் தனியாகவும் பதிவு செய்துள்ளது.

அமித்ஷாவைத் தொடர்ந்து கீதா ஜோஹரி

சொராபுதீனும், அவரது மனைவியும் கொல்லப்பட்ட வழக்கை முதலில் விசாரித்தது குஜராத் மாநில சிஐடி போலீஸôர்தான். சிஐடி விசாரணை பாரபட்சமாகவும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாகவும் நடைபெற்றதால் சொராபுதீனின் குடும்பத்தினரால் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்துத்தான் 6 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள அமித்ஷா மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் சிபிஐ விசாரித்ததில் மாநில சிஐடி பிரிவின் தலைவராக அப்போது பணியாற்றிய கீதா ஜோஹரிக்கும், சொராபுதீனின் போலி என்கவுண்டரில் தொடர்பிருந்ததாகக் கூறி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சி.பி.ஐ. தற்போது இராஜ்கோட் நகர போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்து வருகிறார் கீதா ஜோஹரி. இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் கீதா ஆகஸ்டு 6ந் தேதிதான் குஜராத் திரும்புகிறார் எனச் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கீதாவை 2 முறை சிபிஐ விசாரித்திருக்கிறது. இப்போது மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆகஸ்டு 10ந் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

கீதா ஜோஹரி குஜராத் மாநில சிஐடி பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த சொராப்தீன் என்கவுண்டரை விசாரித்து வந்தவர் சிஐடி இன்ஸ்பெக்டர் சோலங்கி. இவர் நேர்மையான விசாரணை நடத்தி தயார் செய்த விசாரணை அறிக்கையைப் பார்த்து கோபமான கீதா, என்கவுண்டரில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஆதரவாக அந்த விசாரணை அறிக்கையை மாற்றித் தருமாறு சோலாங்கியை நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். ஆனால் சோலங்கி அதற்கு மறுத்திருக்கிறார். இதை சோலங்கியே சிபிஐயிடத்தில் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த கீதா ஜோஹ்ரி, "கம்யூனலிசம் காம்பாட்' பத்திரிகை ஆசிரியரான தீஸ்தா செட்டில்வாட் தொடுத்த வழக்கை அடுத்து புலனாய்வுக் குழுவிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார். கீதாவிற்கு சொராப்தீன் வழக்கில் தொடர்புண்டு என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அதனால் அவரை புலனாய்வுக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் தீஸ்தா.

சொராப்தீனின் போலி என்கவுண்டருக்கு ஆந்திர மாநில போலீசார் 7 பேர் உதவி செய்திருப்பதாகவும் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்த 7 போலீசாரையும் அப்போதே அடையாளம் காண குஜராத் காவல்துறை தவறியுள்ளது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. ஜூலை 31ந் தேதிக்குள் தனது விசாரணை அறிக்கையை சிபிஐ சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது சிபிஐ. 

- அபு

Pin It