தமிழக சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் - ஒரு கற்பனைக் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்குப் பிறகு, பிரபாகரன், மூப்பனாரை சந்தித்தாராம். மூப்பனார், பிரபாகரனை ராஜீவிடம் அழைத்துச் சென்றாராம். அப்போது ராஜீவ் தனது பாதுகாப்புக் கவசத்தை பிரபாகரனுக்கு வழங்கியதாக மூப்பனார், பீட்டர் அல்போன்சிடம் கூறினாராம்.

உண்மைக்கு சிறிதும் தொடர்பில்லாத அப்பட்டமான கற்பனை இது. ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்குப் பிறகு பிரபாகரன், தமிழ் நாட்டுக்குள் வரவே இல்லை. புதுடில்லியிலிருந்து தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட பிரபாகரன், பிறகு மீண்டும் ஈழத்துக்கு புறப்பட்டு விட்டார். ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவுக்கோ, தமிழ் நாட்டுக்கோ வராத பிரபாகரன், எப்போது மூப்பனாரை சந்தித்தார்? எப்படி ராஜீவை சந்தித்தார்? பிரபாகரன் மீது அவ்வளவு அக்கரை கொண்டிருந்தார் ராஜீவ் என்ற பொய்யை வலியுறுத்துவதற்காக, இப்படியெல்லாம் கதைகளை உருவாக்குகிறார்கள். “After all two thousand boys” என்று விடுதலை புலிகள் பெரிய சக்தியே இல்லை என்று கேலி பேசி, இந்திய ராணுவத்தை அனுப்பி யவர் தான் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தி செய்த துரோகங்கள் ஒன்றா, இரண்டா?

• “தமிழ் ஈழத்தின் ஒரே பிரதிநிதியாக உங்களைத்தான் அங்கீகரித்திருக்கிறோம்” - என்று பிரபாகரனிடம் பொய்யான வாக்குறுதி தந்து, ரகசியமாக தயாரிக்கப் பட்டிருந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அவரை, தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். அப்படி ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும் செய்தியே பிரபாகரனிடம் கூறப்படவில்லை. பிரபாகரனிடம் பொய்யான தகவலைக் கூறியவர் - இந்திய அரசின் முதன்மைச் செயலாளர் பூரி.

• பிரபாகரனை டெல்லி அசோகா ஓட்டலில் தங்க வைத்தப் பிறகுதான் ஜெ.என். தீட்சத் (இந்தியாவுக்கான இலங்கைத் தூதர்) ஒப்பந்தத்தைக் காட்டினார். உடனிருந்த பாலசிங்கத்திடம் ஆங்கிலத்தில் இருந்த ஒப்பந்தத்தைப் படித்து, தமிழில் பிரபாகரனுக்கு கூறும்படி உத்தரவிட்டு, இரண்டு மணி நேரம் கெடுவைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாக வேண்டும் என்று மிரட்டினார்.

• தங்களின் தனி நாட்டுக்காக தமிழர்கள் போராடியபோது, தமிழர்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே, சிங்கள அரசுடன் தன்னிச்சையாக ஒப்பந்தம் போட்டு, தமிழர்கள் மீது திணித்தவர்தான் ராஜீவ்.

• இப்படி திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பவில்லை, சென்னையில் ஒப்பந்தம் செய்தமைக்காக ராஜீவ்காந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில், பங்கேற்காமல் தவிர்க்க விரும்பி, அமெரிக்கா பயணமாக எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அவரது உடைமைகள் எல்லாம் விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆரை வற்புறுத்தி, தனது பாராட்டு விழாவில் பங்கேற்க நிர்ப்பந்தப்படுத்தியவர்தான், ராஜீவ்.

• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என்று அறிவித்த பிரபாகரன், ஆனாலும், ‘இந்தியா நேச நாடு. ராஜீவிடம் எங்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஒப்படைத்து, ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்” என்று யாழ்ப்பாணம் அருகே முதுமலை என்ற இடத்தில் நடந்த மாபெரும் கூட்டத்தில் அறிவித்தார். ராஜீவ் காந்தியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு என்ன நடந்தது?

• சென்னையில் அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு, அலுவலகப் பொருள்களை கப்பலில் ஏற்றிக் கொண்டு நிராயுதபாணியாக ராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நம்பி, யாழ்ப்பாணம் நோக்கி வந்த 13 விடுதலைப்புலிகளின் தளபதிகளை சுற்றி வளைத்து, கைது செய்தது சிங்கள ராணுவம். தங்களைக் கைது செய்தது ஒப்பந்தத்துக்கு எதிரானது. ராஜீவ் தலையிட்டு ஜெய வர்த்தனாவிடம் எடுத்துக் கூறி, தங்களை விடுவிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ராஜீவும், அவரது தூதுவர்களும் காதில் போட்டுக் கொள்ளாததால், 13 விடுதலைப் புலிகளும் உயிருடன் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொள்ள விரும்பா மல், சைனைட் விஷக் குப்பிகளைக் கடித்து, வீரமரணமெய்தினர். ராஜீவை நம்பி, ஏற்றுக் கொண்ட ஒப்பந்தத்துக்காக ராஜீவ் காந்தி தந்த பரிசு இதுதான்!

• ஒப்பந்தத்தை ஏற்று, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து வரும் போது இந்திய இராணுவம் வேறு சில குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தை செய்தது. போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்த ஜெயவர்த்தனா, அதை அமுல்படுத்த மறுத்தார். ஒப்பந்தத்துக்கு எதிராக ஜெயவர்த்தனா செயல்படுவதை சுட்டிக்காட்டி, இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துதான் அகிம்சை வழியில் திலீபன் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார்.

• திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள் 1987 செப்.15. செப்டம்பர் 24 ஆம் தேதி பிரபாகரன், ராஜீவ் காந்திக்கே கடிதம் எழுதி, திலீபன் உண்ணாவிரதத்தின் கோரிக்கையை செவிமடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ராஜீவ் புறக்கணித்தார். பலாலி வரை வந்த இந்தியத் தூதர் தீட்சத்தை மரணத்துடன் போராடும் திலீபனை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டபோது, தீட்சத் சந்திக்கவே மறுத்தார். ராஜீவுக்கு பிரபாகரன் கடிதம் எழுதிய அடுத்த இரண்டாவது நாளிலேயே திலீபன், வீரமரணத்தை தழுவினார். ராஜீவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்ததற்கு ராஜீவ் வழங்கிய மற்றொரு பரிசு இது!

• ஈழத்தில் நுழைந்த இந்திய ராணுவம் முதலில் தமிழர்கள் நடத்திய ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ நாளேடுகளின் அலுவலகங்களில் குண்டுகளை போட்டு தகர்த்து, தகவல் தொடர்புகளை துண்டித்தது. அந்த நிலையில், 1987 அக்.25 ஆம் தேதி பிரபாகரன், ராஜீவுக்கு மற்றொரு கடிதம் எழுதினார். “எங்களைத் தாக்காதீர்கள்; போரை நிறுத்துங்கள்” என்று அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தார். ராஜீவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 1988 ஜனவரி, 12 ஆம் தேதியும், மார்ச் 9 ஆம் தேதியும் பிரபாகரன் நியாயம் கேட்டு ராஜீவுக்கு கடிதங்கள் எழுதினார். எந்த பதிலும் இல்லை.

• கடலில் கப்பலில் வந்த 13 புலிப்படை தளபதிகள் இறந்த பிறகு, இந்தியாவி லிருந்து ஜானி என்ற விடுதலைப் புலியை இந்திய அரசே தூதராக அனுப்பி, பிரபாகரனிடம் பேசச் சொன்னது. உளவுத் துறையையும், ராஜீவையும் நம்பி, தூதராக சென்ற ஜானியை ஈழத்தில் அவர் காட்டுக்குள் வந்தபோது இந்திய ராணுவமே சுட்டுக் கொன்றது. ‘நான் இந்தியாவின் தூதராக வருகிறேன்’ என்று கூறிய நிலையிலும் ஆயுதமின்றி, உளவுத் துறையின் தூதராக வந்த விடுதலைபுலியை இந்திய ராணுவமே சுட்டுக் கொன்றது.

இவ்வளவு துரோகத்துக்கும் காரணமாக இருந்தவர் ராஜீவ் என்பது கரை படிந்த வரலாறு. பீட்டர் அல்போன்சு போன்றவர்கள் உண்மைகளுக்கு மாறான கற்பனைகளை பேசினால், இந்த வரலாற்று உண்மைகளை நாம் பட்டியலிட்டுத் தானே ஆக வேண்டும்!