“என்னோட பேரு செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நான் கொல்லபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். அது சூலை மாதம் எங்க வகுப்புல எல்லாருக்கும் பஸ் பாஸ் கொடுத்தாங்க. எனக்கும் இன்னும் நாலு பொண்ணுகளுக்கும் ஆக அஞ்சு பேரோட பஸ் பாஸ் மட்டும் தரல. ஒரு சில நாள் கழிச்சு எங்க அஞ்சு பேருக்கும் பஸ் பாஸ் வந்திருச்சு சாயங்காலம் ஸ்டாப் ரூம்பல வந்து பாஸ் வாங்கிக்கங்க என்று ஹிஸ்டரி மாஸ்டர் தாமோதரசாமி சொன்னார்.

சாயங்காலம் நாங்க அஞ்சுபேரும் ஸ்டாப் ரூமுக்கு போனோம். அங்க வேற மாஸ்ட்டர்ஸ் யாரும் இல்ல. தாமேதாரசாமி மட்டும் இருந்தார். எங்கள ஒவ்வொருத்தரா கையெழுத்துப் போட்டு பாஸ் வாங்கிட்டு போங்கன்னு சொன்னார். நாங்க வரிசையா நின்னு கையெழுத்துப் போட்டோம். ஒவ்வொருத்தருக்கா பாஸ் கொடுத்து வெளிய அனுப்புனார். கடைசியா நான் பாஸ் வாங்க கைநீட்டும் போது தாமோரசாமி மாஸ்டர் என் கையைப் பிடிச்சார். அப்படியே என் பக்கத்தில வந்து என் கன்னத்தையும் சொல்லக்கூடாத இடங்களிலும் கிள்ளினார்.

நான் பயந்து போய் ‘சார்’னு சத்தம் போட்டேன். உடனே அவர் என்னை விட்டுட்டார். நான் வகுப்புக்கு ஓடி வந்திட்டேன். வகுப்புல வந்து யாரு கிட்டையும் சொல்லாம யாருக்கும் தெரியாம அழுதேன். வீட்டுல சொல்லவும் பயமா இருந்துச்சு. இந்த மாஸ்டர் நெறைய பொண்ணுககிட்ட இதத மாதிரி நடந்து கிட்டாருனு பொண்ணுக சொல்லியிருக்காங்க. தயவு செஞ்சு எம்பேர பத்திரிகையில போட்ராதீங்க.”

“என் பேரு முருகன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். எங்க கணக்கு மாஸ்டர் பழனிச்சாமி எப்பவும் என்னை டேய் மைனஸ் எந்திரிடா என்று தான் சொல்வார். ஏன்னா எஸ்.சி. எல்லாம் மைனஸ், பி.சி. ப்ளஸ் என்று தான் வகுப்பில் எங்களை பிரித்துப் பேசுவார். தாழ்த்தப்பட்ட நாங்களெல்லாம் படிக்கக்கூடாதாம். தேங்காய் பொறுக்குவதற்கு போக வேண்டுமாம் இப்படி எல்லாம் திட்டுவார். குறைவா மார்க் வாங்கினா எஸ்.சி. மாணவர்கள கடுமையா அடிப்பார். உங்கப்பன கூட்டியாடா என்று திட்டுவார். ஆன பி.சி. மாணவர்களை எதுவும் சொல்ல மாட்டார். நாங்க என்னங்க தப்பு செஞ்சோம் எஸ்.சி.யா பொறந்தது எங்க தப்பா?”

இப்படி பேசுவது நமது தங்கையாக, நமது மகளாக இருந்தால்...? இப்படி கேட்பது நமது தம்பியாக, மகனாக இருந்தால்...? வேண்டாம். யாரோ ஒரு முகம் தெரியாத பெண், ஒரு முகம் தெரியாத பையன் என்றாலும் இதைச் சொல்வது ஒரு பத்தாம் வகுப்பு மாணவி என்றும், ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் என்றும் தெரிகிறபோது ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் இப்படியா நடந்து கொள்வார்? என்கிற அச்சமும், கோபமும் நமக்கு இயல்பாக எழ வேண்டும்.

செல்வியை, முருகனை எங்களுக்கு முன் பின் அறிமுகமில்லை. ஆனால் அந்தச் சின்னப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை, ஆசிரியரால் நேர்ந்த கொடுமையை எங்களிடம் சொன்னபோது, அந்தத் தம்பி எஸ்.சி.யா பொறந்தது எங்க தப்பா என்று கேட்டபோது எங்களுக்குள் மிகப் பெரிய அதிர்ச்சியும், துக்கமும், ஆத்திரமும் ஏற்பட்டது. இயல்பான குழந்தைத்தனத்தோடு அந்தப் பெண் பேசிய செய்திகளை முழுமையாக சொல்வதற்கும் எங்களுக்கு உள்ளபடியே சங்கடமாக இருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே நீங்கள் துணிச்சலாக முன் வாருங்கள்.

உங்களுக்கு எல்லாவிதத்திலும் தேவைப்படுகிற பாதுகாப்பை, உதவியை செய்து தருவதற்கு நாங்கள் இருக்கிறோம். மேலும் நீங்கள் நன்றாகப் படித்து இந்தக் கொடுமைகளை எல்லாம் சவாலாக ஏற்று தொடர்ந்து இந்த சமுதாயத்திற்கு பணியாற்றவும், சாதி ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும் போராட முன்வர வேண்டும் என்று கூறிவிட்டு கனத்த மனதோடு வெளியேறினோம்்.

பொள்ளாச்சி வட்டம் கொல்லபட்டி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் பழனிச்சாமி என்பவர் தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிப்பெயர் சொல்லி இழிவுபடுத்துவதாகவும், அதே பள்ளியில் வரலாறு ஆசிரியர் தாமோதரசாமி மாணவிகளிடம் வரம்பு மீறிய பாலியல் குறும்புகளில் ஈடுபடுவதாகவும் கூறி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கொல்லபட்டி பள்ளியைச் சார்ந்த சுமார் 50 மாணவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தி 13.10.2007 நாளிதழ்களில் வெளியானது. 15.10.2007 அன்று ஆதித் தமிழர் பேரவை நிகழ்ச்சியிில் கலந்து கொள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணி பொள்ளாச்சி வந்தார்.

அவரிடம் பல்லடம் கழகத் தோழர்கள் ராஜீவ், ஆறுமுகம், வடிவேல் ஆகியோர் வந்து கொல்லபட்டி பள்ளியில் நடைபெறும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் நேருகிற சாதி - பாலியல் துன்பங்கள் குறித்து பேசினார்கள். இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கழகத் தலைவர் பொள்ளாச்சி நகர செயலாளர் வெள்ளிங்கிரியிடம் கூறினார். இதைத் தொடர்ந்து தோழர்கள் வெள்ளிங் கிரி, விசயராகவன் ஆகியோர் கொல்லப்பட்டி நிலவரம் குறித்து பல்லடம் தோழர்களிடம் முழுமையாக கேட்டறிந்தனர்.

17.10.2007 அன்று சார் ஆட்சியின் ஆணைப்படி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் துணை வட்டாட்ச்சியரின் நேரடி விசாரணை கொல்லபட்டி பள்ளியில் நடைபெறுவதாகவும் விசாரணையில் குற்றம் செய்த ஆசிரியர்களை காப்பாற்று வதற்காக சுமார் 500 பேர் பள்ளி வளாகத்தில் திரட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் பல்லடத்திலிருந்து விசயகுமார் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். உடனடியாக நங்கள் கொல்லபட்டி சென்றோம். அங்கு பள்ளி வளாகத்திற்குள் முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் என்ற பெயரில் சுமார் 500 பேர் திரட்டி வைக்கப்பட்டிருந்தார்கள்.

மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்யும் அறையில் கொல்லபட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் நல்வழி, அப்பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர் இளம்பரிதி உள்ளிட்ட உயர்சாதியினர் கும்பலாக நின்று கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக மனுக்களையும், வாக்குமூலங்களையும் பதிவு செய்து வந்தனர். ஆசிரியர்களின் தவறுகளை அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்காக வந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்காமல் அங்கிருந்த சாதி வெறியர்கள் விரட்டி அடித்தனர். முன்னாள் மாணவர்கள் எனும் பெயரில் சாதி வெறி பிடித்த இளைஞர்களும், இளம் பெண்களும் மிகப் பெரிய கூட்டமாக ஓர் இடத்தில் திரட்டப்பட்டு அந்தக் கூட்டத்தின் நடுவில் பிரபு என்பவர் அமர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதி வெறியை தூண்டும்படியான பேச்சுகளை பேசிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் புகைப்படம் எடுக்க முயன்றபொழுது நமது புகைப்படக் கலைஞர் கோ. வெங்கடேசனையும், விசயராகவனையும் சாதி வெறியர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படத்தை அழிக்கும்படி வற்புறுத்தினார்கள். திடீரென்று இளம்பரிதியும் அவரது ஆட்களும் அங்கு வந்து நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டனர்.

நாங்கள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பத்திரிகையிலிருந்து வருகிறோம் என்று விசயராகவன் கூறிய உடன், இளம்பரிதியும் கூடியிருந்த சாதி வெறியர்களும் சேர்ந்து வெங்கடேசன், விசயராகவன் இருவரையும் தாக்கத் தொடங்கினர். ஒரு கும்பல் புகைப்படக் கருவியை பறித்துக் கொண்டு ஓடியது. இந்த கலவர சூழல் ஏற்பட்ட உடன் வெளியில் நின்று கொண்டிருந்த ஆதித் தமிழர் பேரவை தோழர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து தாக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காப்பாற்ற போராடினார்கள்.

புகைப்படக் கருவியை கோபால் மீட்டார். ஆனால் அதற்குள் புகைப்பட ஒளி நாடாவை எடுத்துக் கொண்டார்கள். அங்கு வந்த காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்தி தோழர்களை காப்பாற்றியது.

பெரியார் திராவிடர் கழக தோழர்களுடன் ஆதித் தமிழர் பேரவை, அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தோழர்களும் சேர்ந்து அங்கேயே தரையில் அமர்ந்து கொண்டு, சாதி வெறியர்களுக்கு எதிராக சத்தம் போட தொடங்கினார்கள். இப்போது வந்து அடியுங்கள். நாங்கள் பத்துப்பேர் இருக்கிறோம். எங்களை அடித்தே கொல்லுங்கள். எங்களையே இப்படித் தாக்குகிற நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களையும், மாணவர்களையும் எப்படிக் கொடுமைப்படுத்து வீர்கள் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும் என ஆவேசத்தோடு தோழர்கள் பேசியதும் சாதி வெறியர்கள் பின் வாங்கினார்கள்.

சற்று நேரத்தில் அங்கு வந்த நெகமம் காவல் துறை ஆய்வாளர் மனோகரன் ஒளி நாடாவை மீட்டுக் கொடுத்தார். நாங்கள் கொல்லபட்டியிலிருந்து வெளியேறினோம். இது குறித்து மறுநாள் காவல் நிலையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.

12.10.2007 அன்று மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகர் விசாரணையின் போது சாதி வெறியர்கள் நடத்திய வன்முறை மற்றம் கொல்லபட்டி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் நாம் நடத்திய நேரடி விசாரணைைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் பார்க்கும்பொழுது கொல்லபட்டி பள்ளியின் கணித ஆசிரியர் பழனிசாமி, வரலாறு ஆசிரியர் தாமோதரசாமி ஆகியோரது சாதி - பாலியல் குற்றச் செயல்களுக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்விக் குழு, உயர்சாதியினர், ஊராட்சி மன்றத் தலைவர் என அனைத்துத் தரப்பினருமே உடந்தையாக இருக்கிறார்கள் என்பதும் குற்றம் செய்த ஆசிரியர்களை காப்பாற்று வதற்காக இந்தக் கூட்டம் எத்தகைய வன்செயலிலும் ஈடுபட தயங்காது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

22.10.2007 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கோவை பன்னீர்செல்வம் தலைமையில் நகர செயலாளர் வெள்ளிங் கிரி, ஆதித் தமிழர் பேரவை மண்டல செயலாளர் தி.செ.கோபால் ஆகியோரது முன்னிலையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொல்லபட்டி பள்ளியில் சாதி - பாலியல் கொடுமைகள் செய்யும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சார் ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

கழகத் தோழர்களிடம் மாணவர்கள் அளித்த வாக்கு மூலங்களின் ஒளிப்பதிவு குறுந்தகடு ஒன்றும் சார் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் இதுவரையிலும் மேற்படி ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் துயரமான செய்தி. குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தொடர்ந்து போராடுவது என்பதில் மட்டும் நாம் உறுதியாக இருக்கிறோம்.