இலங்கைத் தீவு தனது வரலாற்றின் போக்கில மற்றுமொரு தொடக்கத்திற்குத் தன்னை அணி செய்து கொண்டிருக்கிறது. இப்புதிய அத்தியாயத்திற்கான தூரிகையைத் தற்போது விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக அந் நாவலந் தண்பொழில் குருதிச் சாக்காட்டில் நினைந்து கொண்டிருக்கிறது. தோட்டாக்களின் சீறலும், வெடிகுண்டுப் பொழிவுகளும் ஈடிணையற்ற ஈழத்தின் இயற்கைச் செல்வங்களை கந்தகப் பூமிகளாய் மாற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் ஏதிலிகளாய்ப் புலம் பெயரும் இழிநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காண்டுப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏறக்குறைய முடிவிற்கு வந்து விட்டது. என்றே கருதலாம். சர்வதேச சமூகத்தின் அறிவுரையையும், எச்சரிக்கையையும் மீறி அதனைச் சற்றும் பொருட்படுத்தாது தமிழினத்தின் மீது போரைத் திணித்திருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்தா இராஜ பட்சே. இலங்கையின் முன்னாள் அதிபர்கள் ஜெயவர்த்தனே, சந்திரிகா, பிரேமதாசா போன்ற பேரினவாதிகளின் சர்வாதிகார மனப்போக்கிற்குச் சற்றும் குறையாத திமிர் பிடித்தவராய் மகிந்தா தமிழின விரோதப் போக்கைக்கைக் கொண்டிருக்கிறார். நார்வேயின் அமைதி முயற்சியைக் குலைத்து, அதனை கண்மண் தெரியாமல் சிதைத்து ஈழத்தமிழர் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பெறப்போகும் அதிபராக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Chencholai

இலங்கைப் பிரதமர் பொறுப்பிற்குப் பிறகு, அதிபராக மகிந்தா இராஜ பட்சே தேர்ந்தெடுக்கப்பட்டதிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதத்தை தூபமிட்டு வளர்த்து வருகிறார். தனது கூட்டணி அரசில், தமிழர்களின் ஜென்ம விரோதிகளாய்த் திகழும் ஜாதிக்கெல உறுமய என்ற புத்த மதவாதிகளின் கட்சியையும் இணைத்துக் கொண்டு, வெறியாட்டம் ஆடத் தொடங்கியிருக்கிறார். ஆஸ்லோ பேச்சு வார்த்தையைக் குலைத்தது, போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் தமிழ்பகுதிகளில் அறிவிப்பின்றி போரை நடத்தியது. பல்வேறு கண்ணி வெடித் தாக்குதல்களில் சிங்களர் உள்ளிட்ட பொது மக்களை கொன்று விட்டு புலிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தியது என்று அதிபர் மகிந்தா தமிழருக்கு எதிரான செயல்களில் கொஞ்சமும் மனிதாபிமானமின்றி நடந்து கொண்டிருக்கிறார்.

போதாக்குறைக்கு கடந்த ஆகஸ்ட் 14ஆம் நாளன்று முல்லைத் தீவிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் பாடசாலையான செஞ்சோலையில் கடும் மூர்க்கத்தனமாய் பதினாறு குண்டுகளை வீசி 63 தமிழ்ச் சிறுமிகளை கொன்று குவித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கொடுங்கோலனை நாகரிகமாய் எழுதுவதற்கும் கூட நமது எழுதுகோல் தடுமாறுகிறது. பொதுமக்களைக் கேடயமாய்ப் பயன்படுததுகின்ற இராணுவம் எதுவாக இருந்தாலும், அது கேடிலும் கேடான படையாகத்தான் இருக்க முடியும். சிங்கள இராணுவத்தின் பேடித்தன்மை இன்னமும் தொடர்கிறது. இச் சம்பவத்தைக் கண்டிக்காது உலகின் பல நாடுகள் வாய் மூடி மௌனம் காக்கின்றன. தமிழர்தம் தாயகத்தை தன்னுள் கொண்டிருக்கும் இந்தியத் திருநாடும் அப்பெருமைக்குரிய நாடுகளில் ஒன்று. விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்காகப் பெரும்பாலும் இராணுவத் தலைமையகமாகவோ, இராணுவ முகாம்களாகவோ, விமான தளங்களாகவோ, பொருளாதார கேந்திரங்களாகவோ தான் இருக்கும்.

ஆனால் சிங்கள இராணுவப் படைகளுக்கு இப்போதும் அப்பாவித் தமிழர்களே இலக்காக இருந்து வருகிறார்கள். ஈவிரக்கமின்றி பொது மக்களைக் கொன்று குவித்துவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழி போடுவது சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான பண்பாடாக இருந்து வருகிறது. இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த பிறகும் கூட, சிங்களக் காடையர்களுக்கு குருதிப் பசி தீரவில்லை போலும்.

புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளையை வெட்டி விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு இந்தியாவிலுள்ள கயாவுக்கு இலங்கையிருந்து புத்த பிக்குகளும், எம்.பிக்கள் குழுவும், வருகை புரியும் போது தமிழர்கள் இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாய்க் கொல்லப்படும்போது வெறுமனே அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டு இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தமிழக மாவட்டமான கோவையில் (தற்போது பயிற்சித் தளம் மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது) பயிற்சி தருகின்ற இந்தியாவின் நிலைப்பாடு, அப்பட்டமாய் தமிழர்களுக்கெதிரானதே. ஆண்டன் பாலசிங்கம் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியைத் திரித்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு மாயையைத் தோற்றுவிக்க முனைந்த மத்திய அரசின் அதிகார வர்க்கம் உலக சமூகத்திற்கு முன்பாக அம்பலப்பட்டுக் கிடக்கிறது. சொல்லாத ஒன்றைச் சொன்னதாகத் திரித்து வெளியிட்ட ஆதிக்க சக்திகளின் இந்திய ஊடகங்கள் மூக்கறுபட்டு நிற்கின்றன.

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு இலங்கைக்குச் சென்றார் அன்றைய இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி. அவரைத் தனது கடற்படை வீரன் ரோகன விஜயமுனி மூலகமாகக் கொலை செய்ய முயற்சித்த இலங்கை அரசின் செய்கை இங்குள்ள அதிகார வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் மறந்து போயிருக்கலாம். இலங்கை நீதிமன்றம் அந்தக் கொலைகாரனுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், 1990ஆம் ஆண்டு, அக்கயவனுக்கு மன்னிப்பளித்து பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது இலங்கை அரசு. அப்பேர்பட்ட இலங்கை அரசின் இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கும் அளவிற்கு இன்று இந்தியா முதிர்ச்சியடைந்துள்ளது.

அந்த நல்லெண்ணத்தின் தொடர்ச்சியாக, தமிழர் நலனுக்கு இழுக்குச் சேர்க்கும் பல்வேறு ஆலோசனைகளை சிங்கள அரசுக்கு நல்கி வரும் இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் இராமுக்கு, இலங்கை அரசின் உயரிய விருதான ஸ்ரீலங்கா ரத்னா கிடைத்ததற்காக நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்ற நிலையைத் தாண்டி இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுகின்ற இந்து இராம், இலங்கைக்கான இந்தியத் தூதுவரா அல்லது மகிந்த இராஜ பட்சே உள்ளிட்ட இலங்கை அதிபர்களின் அந்தரங்க ஆலோசகரா? இதனை வெளிப்படையாய் அறிவிப்பதற்கு இராமின் எந்த முகம் தடையாய் இருக்கிறதோ தெரியவில்லை?

இராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவன் கொள்ளை சிங்கள அரசுக்கு சாதகமாக அமைந்தது. இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங் மீண்டும் இராஜீவ் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவது இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு உகந்தது அல்ல. அதனால் இலங்கைப் பிரச்சினையில் புதிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இந்தியாவின் முதற்கட்டத் தலைமை, இலங்கைத் தமிழர் குறித்து சிந்திக்க முனையும் நேரத்தில், இரண்டாம் மட்டத்திருக்கின்ற அதிகாரிகள் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டிற்கே ஊக்கம் தருகின்றனர்.

இந்திய வெளியுறவுச் செயலராக தொடர்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை தவறான வெளியுறவுக் கொள்கையின் காரணமாய் இழக்க நேர்ந்தது. அதுமட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும், விடுதலைப்புகளின் தளபதிகளான கிட்டு, புலேந்திரன், குமரப்பா உள்ளிட்டோரையும் அகிம்சை வழியில் போராடிய அன்னை பூபதி, திலீபன் போன்றோரையும் இழக்க வேண்டிய இழிநிலை ஏற்பட்டது. தமிழர்களுக்கு ஆதரவாய்ச் சென்ற இந்திய அமைதிப்படை பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்ததோடு, தமிழ்ச் சகோதரிகளைக் கற்பழித்துச் சூறையாடியது. அமைதிப்படையின் இந்த அட்டூழியப்போக்குக் குறித்து இன்று வரை இந்தியா வருத்தமோ, மன்னிப்போ தெரிவித்ததுண்டா?

சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் பெரும்பான்மையாய்க் குடியிருக்கும் பகுதிகளில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக அத்துமீறி சிங்களர்களைக் குடியமர்தத்தி வருகிறது. இந்த எண்ணிக்கை சில இடங்களில் பத்து மடங்காகவும், பல இடங்களில் நூறு மடங்கிற்கும் மேலாகவும் இருந்து வருகிறது. அப்பிரச்சனையின் தொடர்ச்சியாகத்தான் மாவிலாற்றுப் பகுதிகளில் சிங்களரைப் பெருமளவில் குடியமர்த்தியதோடு, அப்பகுதியிலுள்ள தமிழர்தம் விளை நிலங்களைப் பறிமுதல் செய்து சிங்கள விவசாயிகளுக்கு வழங்கிய சிங்கள அரசின் செயலைக் கண்டித்து திரண்டெழுந்த மக்கள் எழுச்சிக்கு புலிகள் ஆதரவளித்தனர். அது மட்டுமின்றி வேளாண்மைக்கும், புழங்குவதற்கும் தேவையான தண்ணீரை சிங்களருக்கே அரசு திறந்துவிட்டது. இதனால் குடிதண்ணீருக்கு பல மைல் தூரம் நடந்து போராட வேண்டிய நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது.

கடந்த 1991ஆம் ஆண்டே புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே தண்ணீருக்கான சண்டைகள் பலமுறை நடந்தேறியுள்ளன. மாவிலாற்றின் பெரும்பாலான பகுதிகள் தற்போது புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வளவு காலமும் தமிழர்களை வஞ்சித்து தண்ணீர் வழங்க மறுத்த சிங்கள இனவெறியர்களுக்குப் பாடம் புகட்ட புலிகள், மடையை அடைத்து சிங்களருக்குத் தண்ணீர் தர மறுத்தனர். பிறகு அனைத்து நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க மடையைத் திறந்து விட்ட புலிகள் மீது வஞ்சினம் கொண்ட இலங்கை இராணுவம், தமிழர்களைத் தாக்கத் தொடங்கியதுதான் சிங்கள இராணுவத்திற்கும் புகளுக்கும் இடையிலான போராட்டத்தைத் தீவிரமாக்கியது.

சந்திரிகா அதிபராக இருந்தபோது ஆணையிறவில் நடைபெற்ற கடும் சமரில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளின் போர்த் தந்திரத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அன்று உலக நாடுகளையெல்லாம் மண்டியிட்டு தனது வீரர்களைக் காப்பாற்ற வேண்டி நின்றார் சந்திரிகா அம்மையார். புலிகள் அவர்களை மன்னித்து அனைவருக்கும் உயிர்ப்பிச்சை அளித்தார்கள். இதுபோன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் சிங்கள வீரர்களின் உயிருக்கு புலிகள் உத்தரவாதம் கொடுத்துள்ளனர். ஆனாலும் நன்றி கெட்ட சிங்கள அரசு, புலிகளை அழித்தொழிக்கும் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளித்ததோடு, இரகசியமான செயல்பாடுகளில் தீவிரம் காட்டியது. சமாதான புறா போன்று வேடம் தத்த ரணில் விக்கிரம சிங்கே ஆட்சியில் தீட்டப்பட்ட இரகசியத் திட்டத்தின் விளைவாகத்தான் கருணாவை புலிகளிடமிருந்து பிரித்து நமது விரல்களைக் கொண்டே நமது கண்ணைக் குத்தும் சிங்கள கயமைத்தனம் அரங்கேற்றப்பட்டது.

போர் நெருக்கடியில் சிங்கள வீரர்கள் திக்குமுக்காடும் போதெல்லாம் போர் நிறுத்தம் என்று கதைப்பது சிங்களப் பேரின வாதத்தின் தொடர்ச்சியான போக்காகவே உள்ளது. நார்வே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதின் அடிப்படையில் சிங்கள அரசு இதுவரை நடந்து கொள்ளவில்லை. 1. தமிழ்ப் பகுதிகளில் உள்ள வழிபாட்டிடங்களிலும், பள்ளி மற்றும் கல்விக் கூடங்களிலும், இதர இடங்களிலும் அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள இராணுவத்தை விலக்கிக் கொள்ளும் முடிவை ஒப்பந்தம் கையெழுத்தாகிய நான்காண்டுகளிலும் சிங்கள அரசு செயற்படுத்தவில்லை. 2. கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழ் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் எந்த செயல்களிலும் இலங்கை இராணுவம் மீறக்கூடாது என்ற ஒப்பந்தத்தையும் மீறி, மீனவர்களைக் கொன்று குவித்ததோடு அவர்களை ஏதிலிகளாய் ஆக்கி வேடிக்கை பார்த்தது.

3. சிங்கள இராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்படும் பிற தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதம் எந்த விதத்திலும் வழங்கக்கூடாது என்று ஒப்பந்தம் வலியுறுத்தினாலும், கருணா போன்ற குழுக்களுக்கு சிங்கள இராணுவம் தேவையான ஆயுதங்களை வழங்கி, அப்பாவித் தமிழர்களைக் கொல்ல ஊக்குவித்தது. போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை வலியுறுத்திய போது சிங்கள அரசும், உலக நாடுகளும் கண்டுகொள்ளவே இல்லை. தான் செய்கின்ற ஒவ்வொரு தவறையும் மறைப்பதற்காக அதனைப் புலிகள் மீது பழி போட்டுத் தப்பிக்கும் பச்சைச் சந்தர்ப்பவாதத்தை தொடர்ந்து செய்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு.

தற்போதும் கூட திரிகோணமலையில் தனக்கான ராணுவத் தனத்தை அமைக்க அமெரிக்கா கடுமையாகப் போராடி வரும் நிலையில், அம்முயற்சிக்குத் தடையாய் உள்ள தமிழர்களை அப்புறப்படுத்த சிங்கள இராணுவம் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலைத் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி இந்திய செஞ்சிலுவைச் சங்கம் போராளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது இங்கு நோக்கத்தக்கது. இலங்கையையும், ஈழத்தையும் பாதுகாக்கும் வலிமையும் துணிச்சலும் விடுதலைப் புலிகளுக்கே உண்டு என்பதை நிரூபிக்க இது மற்றுமொரு சான்றாகும்.

இலங்கை அரசுக்கும் சிங்களர்களுக்கும் இது வெறும் போராக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இப்போர், இழந்து போன மானத்தையும், மண்ணையும் மீட்கும் உரிமைக் குரலாகத்தான் இருக்க முடியும். இலங்கைத் தீவில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போர் இறுதி முடிவை எட்டக்கூடியதாகக் கூட அமையலாம். ஆனால் வெல்லப்போவது சகோதரத்துவமும், சமாதானமும், மனிதநேயமாகவும் தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பில்லை. தற்போது ஈழத்தில் திரண்டு கொண்டிருக்கும் மக்கள் படை புதிய வரலாற்றை வென்றெடுக்கும் என்பதில் சற்றும் அய்யமில்லை. தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசின் பிரதிநிதி ரிச்சர்ட் பௌச்சர் அண்மையில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழின மக்களால் எழுப்பப்படுகின்ற கோரிக்கைகள் அனைத்தும் நியாயப்பூர்வமானவை. எவர் ஒருவரும் தங்களது சொந்த பிரதேசங்களை ஆளுகின்ற உரிமை, தங்களது தாயகத்தை நிர்வகித்தல் என்பது நியாயமானதாகும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

கப்பற்படை, காலாட்படையை மட்டும் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இன்று வான்படைக்கும் உரியவர்களாய் உயர்ந்திருக்கிறார். நாங்கள் என்ன ஆயுதத்தைக் கையிலேந்த வேண்டும் என்பதை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் என்று மாவோ கூறியது போல், விடுதலைப் புலிகளின் வான்படையைச் சிங்களர்கள் தீர்மானிக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 11ஆம் நாள் பலாலி விமான தளத்தைத் தாக்கிச் சிதைத்த புலிகளின் வான்படை சிங்கள இராணுவத்தின் உயரிய பாதுகாப்பு வளையத்தை மிக எளிதாக ஊடுருவி சாதித்துள்ளது. உயர்ந்த நோக்குடன் ஈழத்தில் நல்லதொரு தமிழ் அரசைக் கட்டமைத்துள்ள விடுதலைப்புலிகள் இன்று உலக சமூகத்தையே பெரும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள். இது பசி ஆறியவனின் புளியேப்பமல்ல. பசித்தவனின் பசி ஏப்பம். இனி இலங்கைத் தீவை ஒரு போதும் ஒன்றாக்க இயலாது. நான் 1956ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொழும்பிற்குச் சென்றபோது அது சிங்கப்பூரை விடச் சிறப்பான நகரமாக இருந்தது.

தமிழ் சிறுபான்மையினர் மீது சிங்களப் பெரும்பான்மையினர் மேலாதிக்கம் செலுத்தியபோதும, இலங்கைத் தீவில் தமிழர்கள் கடுமையாக உழைத்தார்கள். அதற்காகவே சிங்களர்களால் தண்டிக்கப்பட்டார்கள். பலவீனமான, தவறான தலைவர்களைக் கொண்டிருந்த காரணத்தாலேயே இலங்கை மக்கள் வெற்றி பெற இயலவில்லை என்று சிங்கப்பூரின் சிற்பியாக வர்ணிக்கப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த காலத்தில் இலங்கை அரசு பல நாட்டு ஆயுதங்களை வாங்கிக் குவித்தபோது, புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் வார ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இலங்கைத் தீவில் இனி ஒரு போர் ஏற்படுமானால், சந்திரிகா அம்மையார் எங்களிடம் தனி நாடு கேட்டுப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்று கூறியிருந்தார். அதைத் தற்போது மாற்றி சந்திரிகா என்ற இடத்தில் மகிந்தா இராஜ படசே என்று திருத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

உலகத் தலைவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து சிங்கள அரசு செயல்படுமானால், இலங்கையிலும், ஈழத்திலும் நல்லதொரு சூழல் உருவாக வாய்ப்புள்ளது. அதை விடுத்து, தமிழர் விரோதப் போக்கை மேலும் தொடருமேயானால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சிங்களப் பேரினவாத அரசே பொறுப்பேற்க நேரிடும்.

மற்றொரு விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்ட சூழ்நிலையில், தமிழர்கள் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. நிமிரட்டும் தமிழீழம்!
Pin It