ரூ.1000 கோடி விண்வெளிக் கல்வி நிறுவனம்

விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ மலையாளிகள் ஆதிக்கத்தில் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறது. இதில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஆறு அதிகாரிகளும் மலையாளிகள். அதுவும் மலையாளிகளின் உயர்சாதிப் பிரிவினர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நெல்லையில் இஸ்ரோ சார்பில் ‘விண்வெளிக் கல்வி நிறுவனம்’ ஒன்று தொடங்க திட்டமிடப்பட்டு, ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப் பெரும் திட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு போய்விட்டனர் ‘இஸ்ரோ’வின் மலையாள உயர் அதிகாரிகள். இந்த அதிர்ச்சியான தகவலை ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏடும் பதிவு செய்துள்ளது. அந்த ஏடு - வெளியிட்டுள்ள செய்தியை (20.4.2008) இங்கு வெளியிடுகிறோம்.

‘நெல்லையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருந்த விண்வெளிக் கல்வி நிறுவனத்தை, சத்தமே இல்லாமல் கேரளாவுக்கு லவட்டிக் கொண்டு போய்விட்டார்கள் இஸ்ரோவில் உள்ள கேரள அதிகாரிகள்’ என்றொரு பகீர் குற்றச்சாட்டைச் சொல்லி சூடு கிளப்பி வருகிறது நாடார் மகாஜன சங்கம்.

அண்மையில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் பளீரிட்டது அந்த சுவரொட்டிகள். நாடார் மகாஜன சங்கம் சார்பில் ஒட்டப்பட்டிருந்த மூன்று வகையான சுவரொட்டிகளும், பொதுமக்களை மட்டுமல்ல உளவுத்துறை போலீசாரையும்கூட சற்று உற்றுப் பார்க்க வைத்தது. ‘இந்திய அரசே... விண்வெளித் துறையே... திட்டமிட்ட ஆயிரம் கோடி ‘ஐ.ஐ.எஸ்.டி. மத்திய பொறியியல் கல்லூரி’யை நெல்லை, குமரி மக்கள் பயன் பெற மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் தொடங்கு’ என்ற முதல் சுவரொட்டி அனைவரையும் அதிர வைத்தது.

‘இஸ்ரோவில் ஆறு உயர் அதிகாரிகள் மலையாளிகள். தமிழர்கள் இப்பதவிக்கு வர முடியாத காரணம் என்ன? வெள்ளைஅறிக்கை வெளியிடு என்கிற அதிர்ச்சித் தகவல் இன்னொரு சுவரொட்டியிலும், ‘தகுதி, திறமை, சீனியாரிட்டி உள்ள தமிழ் விஞ்ஞானி டாக்டர் ஆதிமூர்த்தி ஒரு தலித் என்பதால் இயக்குனர் ஆவதைத் தடுக்காதே! அரசியல் கட்சிகளே குரல் கொடுங்கள் என்கிற சாதிப் பிரச்சினை மூன்றாவது சுவரொட்டியிலும் இருக்கவே, ஆடிப்போனது உளவுத் துறை. அவசரம் அவசரமாய் அந்த சுவரொட்டிகளைப் புகைப்படம் எடுத்து கோட்டைக்கு அனுப்பியுள்ளார்கள் அவர்கள்.

சுவரொட்டிகள் விவகாரம் நமது கவனத்துக்கும் வரவே, அதை ஒட்டிய கருங்கல் ஜார்ஜைத் தொடர்பு கொண்டு பேசினோம். ‘நெல்லை-குமரி மாவட்ட எல்லையான காவல் கிணறு - மகேந்திர கிரி - மலையடிவாரத்தில் மத்திய விண்வெளித் துறையின் திரவ இயக்கத்திட்ட மையம் (எல்.பி.எஸ்.சி.) உள்ளது.

இங்கு ராக்கெட்டுகளில் பொருத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜின்கள் சோதனை செய்து பார்க்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு இந்திய விண்வெளித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஒன்றை புதிதாய்த் தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கென்று ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கு மெஜாரிட்டியாக இருக்கும் கேரள அதிகாரிகள், அக்கல்வி நிறுவனத்தை கேரளாவுக்குக் கொண்டு போகத் திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். விண்வெளி ஆராய்ச்சி பற்றி மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படும் இக்கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களை, இந்திய விண்வெளித் துறை அப்படியே வேலையில் சேர்த்துக் கொள்ளும்.

உலகத் தரம் வாய்ந்த இக்கல்வி நிறுவனத்தில் வகுப்பறைகள்கூட ஏ.சி. செய்யப்பட்டிருக்கும். இக்கல்வி நிறுவனம் தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் அமைந்தால் நெல்லை - குமரி மக்களுக்கு பெரும்பயனாய் இருக்கும். ஆனால், எல்.பி.எஸ்.சி. மட்டுமல்ல; இஸ்ரோ முழுக்க மலையாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாயர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறக்கிறது.

மலையாளிகள் இஸ்ரோவை தங்கள் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டார்கள். எனவே, மகேந்திரகிரியில் போதிய இடமில்லை என்று சொல்லி கேரளாவில் தற்போது தாற்காலிகமாய் இயங்க ஓரிடத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆயிரம் கோடி மதிப்பிலான விண்வெளிக் கல்லூரியைப் பற்றி நமது அரசியல்வாதிகள் யாருக்கும் தெரியாது.

மத்திய அமைச்சர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களோ காவிரி, முல்லைப் பெரியாறு, நெய்யாற்றின் கரை, இப்போது ஒகேனக்கல் என அண்டை மாநிலங்களுடன் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கும்போது, மேலும் ஒரு பிரச்சனையாக இதை ஆக்க வேண்டாம் என்று ரகசியம் காக்கிறார்கள் போலிருக்கிறது.

எனவே, விண்வெளிக் கல்லூரி நமக்கு வேண்டும். நாட்டு மக்களுக்கு இப்பிரச்சினை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் சுவரொட்டிகளை ஒட்டினேன். மகேந்திரகிரியைச் சுற்றியுள்ள ஊர்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் தீர்மானித்திருக்கிறேன். அரசியல் கட்சிகள் இப்பிரச்சினையைக் கையிலெடுத் தால் கல்லூரி நிச்சயம் நமக்குக் கிடைக்கும்’ என்றார் அவர். - இவ்வாறு ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

‘அய்.எஸ்.ஆர்.ஓ.’வின் 6 உயர் அதிகாரிகள்

தலைவர் : மாதவன் நாயர்
இயக்குநர் : எம்.கே.ஜி. நாயர்
இணை இயக்குனர்: குஞ்சி குமரன் நாயர்
உதவி இயக்குனர் : சசீதரன் நாயர்
நிர்வாக அதிகாரி : சோம சேகரன் நாயர்
வி.எஸ்.எஸ்.சி. இயக்குனர் : ராதா கிருஷ்ணன் நாயர்

அகில இந்திய நிறுவனமான இஸ்ரோ மலையாளிகளின் சொத்தா?