பார்ப்பன ராஜாவுக்கு இயக்குனர் சீமான் சவால்!

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 20.7.2008 மாலை 7 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்கெட்டில் கழக சார்பில் காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் வழக்கறிஞர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகத் தோழர்கள் எ.கேசவன், சா. குமரன், அன்பு தனசேகர், பெரம்பலூர் லட்சுமணன், வழக்கறிஞர் சு. குமாரதேவன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் இயக்குநர் சீமான், ஒன்றரை மணி நேரம் எழுச்சியுரையாற்றினார். அதே பகுதியில் பெரியாரை இழிவாகப் பேசிய பா.ஜ.க.வைச் சார்ந்த எச்.ராஜா எனும் பார்ப்பானுக்கு பதிலடி தந்தார்.

“நீ எழுதி வைத்த புராணங்களிலுள்ள கதைகளை நாங்கள் கூறினால், ஆபாசம் என்றால், உன் கடவுளும் ஆபாசம் தானே! ராமன், விநாயகன் பிறப்புக்கு இதே கதையைத் தானே நீயும் சொல்வாய்? ஒரே மேடையில் விவாதிக்க தயார்; நீ தயாரா?” என்று சவால் விட்டுக் கேட்டார் சீமான். எங்களுடைய இனமக்களை மூடநம்பிக்கையிலிருந்து திருத்துவது எங்கள் கடமை. அதைத் தடுத்து நிறுத்த நீ யாரடா? என்றும் சீமான் கேட்டார்.

திரண்டிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தை உணர்வுகளால் கட்டிப் போட்டது சீமான் உரை. அவரது உரையிலிருந்து...

எங்கள் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு கிருத்துவ மதத்தை, இசுலாம் மதத்தைப் பற்றியெல்லாம் பேசாமல் இந்து மதத்தைப் பற்றியே தாக்கி பேசுகிறார்களே என்பது. இங்கே இருக்கிற கிருத்துவன், முசுலீம்களின் பாட்டனார் யார்? நேரடி வாரிகள் யார்? எப்படி இத்தனை பேர் கிருத்துவனானான், இசுலாமியானான். பார்ப்பனர்களுடைய சாதிக் கொடுமை தாங்க முடியாம தான் இந்த மதங்களை நாடிச் சென்றான். இல்லை என்று மறுக்க முடியுமா?

இசுலாமியனின் வேத நூல் குர்ஆன் ஒவ்வொரு இசுலாமியனும் கட்டாயம் படிக்க வேண்டும்; படிக்கிறான். கிருத்துவ மதத்தின் வேதநூல் பைபிள். ஒவ்வொரு கிருத்துவனும் கட்டாயம் படிக்க வேண்டும். படிக்கிறான். இந்து மதத்தின் வேத நூல் எது? ‘பகவத் கீதை’. யார் படித்தது? பார்ப்பனரை தவிர பகவத்கீதையை படித்த ஒரு இந்துவை சொல்ல முடியுமா? குர் ஆனை படிக்க வேண்டும் என்று இசுலாத்தில் சட்டம் இருக்கின்றது. பைபிளை படிக்க வேண்டும் என்று கிருஸ்துவத்தில் சட்டம் இருக்கின்றது. ஆனால் பகவத் கீதையை படிக்கவே கூடாது என்று பார்ப்பானின் சட்டம் இருக்கின்றது. இப்பேர்ப்பட்ட மதத்தின் பின்னால் நாங்கள் வர வேண்டுமா? என்ன மதம் இது.

இந்த நாட்டில் எல்லா சாதிக்கும் கட்சி இருக்கிறதே! அதேபோல பார்ப்பனர்களும் ஒரு சாதி கட்சி தொடங்கட்டுமே. மதம் இல்லாம ஒரு சாதிக் கட்சியாக வாயேன். ஒரு இடத்திலும் உனக்கு வாக்கு விழாது. ஏனா, நீ ஆயிரத்திற்கு இரண்டு பேரு. அதனால தான் மதத்துக்குள்ளே போயி நீ ஒளிஞ்சுகிட்டு, இந்துக்கு ஆபத்து என்கிறாய்! இந்து என்கிறாயே நீயும் இந்து நானும் இந்து, அப்புறம் ஏன் சாதி? அப்புறம் என்ன பிரிவு? என்ன பிரச்சினை இங்கே? உன் கட்சிக்கு இராமன் தலைவரு. புள்ளையாரு பொதுச் செயலாளர். (சிரிப்பு)

நாங்கள் என்ன கடவுள் இல்லைனா இந்து மதக் கடவுள், கிருஸ்தவ மதக் கடவுள் இருக்குன்னா சொல்றோம்? கடவுள் இல்லைனா மொத்தமாக கடவுள் இல்லை தான். மதம் இல்லைனா எந்த மதமும் எங்களுக்கு இல்லை. சாதி தாண்டி, மதம் தாண்டி கடவுளை மறந்து மனிதர்களை நேசிக்கிற மகத்தான கூட்டம் தான் எங்கள் கூட்டம். எங்களை விட நல்லவர்களை உலகத்திலே எங்கேயும் கண்டுப்பிடிக்க முடியாது. (கை தட்டல்)

மதம் என்பது என்ன? அது ஒரு ‘அபின்’. மாமேதை மார்க்சு சொல்றார், கள்ளுக்ககூட குடித்தால் தான் போதை வரும். மதம் என்று சொன்னாலே போதைவரும் என்றார், எங்கள் அய்யா பெரியார். யானைக்கும், மனிதனுக்கும் மதம் பிடித்தால் அழிவைத் தவிர வேறொன்றும் மிஞ்சாது. நீங்கள் இந்த மதங்களில் எங்களை திணிக்க பார்க்கிறீர்கள். இந்த மக்களை இந்த மதங்களிலிருந்து மீட்க நாங்கள் போராடுகிறோம். இதுதான் வித்தியாசம்.

இந்துக் கடவுளையே குறை சொல்றான் என்கிறாயே. ராஜாவே உன்னைக் கேட்கிறோம். என்னை கீழ்சாதி, வேசி மகன் என்று சொன்னது இந்துக் கடவுள்தானே. அதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். இந்து மதக் கடவுள் பிறப்பைப் பற்றி நீ எழுதின புராணத்திலிருந்து தான் சொல்கிறேன். நீயும் அதைத் தானே சொல்லப் போகிறாய். எந்தப் பார்ப்பானா இருந்தாலும் சரி; சவால் விடுகிறேன். ஒருத்தன் இந்த மேடையிலே ஏறி பேசுடா! இராமன் பிறந்ததை நாங்கள் சொல்றது தவிர, நீ சொல்வது தான் சரி என்று, உன்னால் பேச முடியுமா? ராமன், பிள்ளையாரு எப்படி பிறந்தார்னு, நீ பேசுவதைத் தானே நாங்களும் பேசுகிறோம்; நீயும் அதைத் தானே பேசுவ. நாங்களா பிறப்புக் கதையை எழுதி வைச்சுகிட்டு பேசுகிறோம்? உன் புராணத்துல இருக்குதா? இல்லையா? நீ மூடி மறைக்கிறாய். நான் என் மக்களிடம் வெளிப்படையாக சொல்றேன்.

இதுல இராஜாவுக்கு என்னடா வந்தது? நாங்க தீ மிதிச்சா எங்க ஆளுங்க கரகம் எடுத்து ஆடினா உங்களுக்கு ஏன் கோபம் வருதுன்னு கேட்கிறான். ஒன்னுமில்ல ராஜா அவர்களே, உங்களைத்தான் கேட்கிறோம். அதே கரகத்தை நீங்க எடுத்து ஆடுங்க. உங்க அக்கா தங்கச்சி அம்மா, உங்க உறவுக்காரங்க தீ மிதிங்க. அப்ப நாங்க எதிர்த்து கேட்டால் செருப்பைக் கழட்டி அடிங்க. இந்த தேசத்திலே ஒரு பாப்பாத்தி தீச்சட்டி எடுத்து தெருவுல ஆடி இருக்காளாடா? ஒரு பார்ப்பான் தீ மிதிச்சிருக்கானாடா? காவடி எடுத்து ஆடி இருக்கானாடா? நேர்த்திக் கடனுக்காவது மயிரை வளர்த்து சிரைச் சிருக்கியாடா? இதையெல்லாம் செய்வது என் அம்மாவும், தங்கச்சிகளும் என்கின்ற அவமானத்தினால் தானே நாங்கள் தெருவுல வந்து கத்தறோம். ராஜா, நீ வாப்பா; நீ வந்து தீமிதி; நெருப்புல இறங்கு; என் அருமை மக்களே இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பார்ப்பான் தீ மிதிச்சிருக்கானா? காவடி தூக்கி ஆடியிருக்கிறானா? அலகு குத்தியிருக்கானா? வேலு குத்தி ஆடியிருக்கானா? பறவைக் காவடியில் தொங்கியிருக்கானா? என்ன செஞ்சிருக்கான். எல்லாத்தையும் கொண்டுபோய் உள்ளே கொடுத்தா சின்ன மணியை அடிச்சிட்டு சுலோகம் சொல்லிவிட்டுப் போயிடுவான்.

அப்புறம் சொல்லுவான், செய்யும் தொழிலே தெய்வம் என்று. ஏன்? நீ செரைக்கற வேலையை செஞ்சிகிட்டே இரு. துணி வெளுக்கிற வேலையை செஞ்சிகிட்டே இரு. நீ பிணம் எரிக்கிற வேலையை செஞ்சிக்கிட்டே இரு. நீ தெரு கூட்டும் வேலையை செஞ்சிக்கிட்டே இரு. அப்போது தான் பார்ப்பான் சொகுசா இருக்கலாம். இப்படி எழுதின வேசி மகனைதாண்டா தேடிக்கிட்டு இருக்கேன் நான்! செய்யும் தொழிலே தெய்வம்னா நீ கொஞ்ச நாள் மலம் அள்ளு, நாங்கள் கொஞ்சம் நாள் மணி அடிக்கிறோம் வா! கொஞ்ச நாள் பொணம் எரியுங்க; நாங்கள் பூஜை பண்றோம் என்று சொன்னா வலிக்குதுள்ளே உனக்கு. இது எவ்வளவு பெரிய மோசடி.

அறிவுலக ஆசான் பெரியார் என்றால் உனக்கேன் வலிக்குது? அத்வானியை சொல்லவா, ராஜா உன்னை சொல்லவா? எந்த ஒன்றையும் சந்தேகி என்றான் சாக்ரடீஸ். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் திருவள்ளுவர். எதையும், ஏன்? எதற்கு? என்று கேள் என்றார் பெரியார். அந்த சந்தேகத்தில் தானே அறிவு பிறக்கிறது. சிவபெருமான் கையில் ஒரு சூலாயுதத்தைக் கொடுத்துவிட்டு அன்பே சிவம் என்கிறீர்களே. அன்பே சிவம்னா அவன் கையில் சூலாயுதம் எதற்கு என கேட்க வைத்ததே அதுதான் பகுத்தறிவு. அந்த பகுத்தறிவு இயக்கத்தின் தலைவர் தான் தந்தை பெரியார்.

ஆதாமையும், ஏவாலையும் படைத்து ஒரு ஆப்பிள் தோட்டத்தையும் படைச்ச ஆண்டவன், எங்க ஆத்தா வீட்டைச் சுற்றி ஏன்டா வேலிக்கருவ மரமா படைச்சான் என கேட்க வைத்த அறிவு பகுத்தறிவு. அந்த அறிவைத் தந்தவர்தான் பெரியார். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னீர்களே, ஏன் சாத்தினீர்கள் என்று கேட்பதுதான் பகுத்தறிவு. கேளுங்கள் தரப்படும் என்றீரே பரம்ம பிதாவே!

ஊமை எப்படி கேட்பான் என்று கேட்டோமே அந்த அறிவு பகுத்தறிவு. தேடுங்கள் கிடைக்கும் என்றீரே! குருடன் எங்கே போய் தேடுவான் என்று கேட்பது பகுத்தறிவு. இந்த அறிவை நீ சொல்லித் தரல. அப்படியே நம்புங்கள் என்றீர்கள். என்னை முழுமையாக விசுவாசி என்கிறீர்கள். எதையுமே சந்தேகிக்கக் கூடாது என்கிறீர்கள். அந்த இடத்திலே எங்கள் அறிவை சிந்தனையை நிறுத்தி மடமையிலே மூழ்கடித்தீர்கள். அதிலிருந்து எங்கள் சிந்தனையைத் தூண்டி எங்கள் அறிவில் கிளர்ச்சி செய்து அதை வளரச் செய்த தலைவர் தந்தை பெரியார். அதனால் தான் அவர் அறிவுலக ஆசான்.

நாங்கள் பேசுவது யாருக்காக? எங்கள் உறவுக்காக! ஏன் காட்டு மிராண்டிதனமாக இருக்கிறாய் என்று கேட்கிறோம். அலகு குத்தும் என் அன்பு சொந்தங்களே! இரண்டு தாடைகளுக்கு இடையில் உள்ள மெல்லிய சதைப் பகுதியிலே அலகு குத்துறீங்க; அதே பக்தியை சொல்லிக் கொண்டு நீ சிறந்த பக்தி மானாக இருந்தால் அப்படியே தாடைக்கு மேலே அரை அங்குலம் மேலே ஏற்றி குத்துப் பார்க்கலாம். உன்னாலே முடியுமா? முடியாது. செத்துப் போயிடுவோம் என்று தெரியும். தீமிதிக்கிறாயே நீ சிறந்த பக்திமானாக இருந்தால் நெருப்பு கரியை எடுத்துவிட்டு பழுக்கக் காய்ச்சிய 10 இரும்பு கம்பியை போடுறேன், மிதியடா பார்க்கலாம். அப்படி நீ மிதிச்சிட்டா, அன்றைக்கே நான் இந்த கருப்புச் சட்டையை போடல.

உன்னால் முடியுமா? முடியாது. ஏனா இது அறிவியல், கடவுள் மறுப்பு என்பது விஞ்ஞானம். வீட்டில் தாய்மார்கள் சமையல் செய்யும்போது கீழே விறகு கட்டை எரியும். அதன் நெருப்பு வெளியே வந்தால் கையாலே எடுத்து உள்ளே போடுவார்கள். மேலே ஒரு பானை இருக்கும் அதன் மேலே உலை மூடி இருக்கும். அதை கையால் எடுக்க முடியாது. ஒரு துணியை பிடித்து எடுப்பார்கள். காரணம் என்ன? அறிவியல்! வெப்பத்தை கரி கடத்தாது. உலோகம் உடனே வெப்பத்தை கடத்தி விடும். இது தான் அறிவியல்.

இதை என் சொந்தங்களுக்கு நான் சொல்லித் தராம, நாயே, நீயா சொல்லித் தருவே? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக என் இனத்தை மடமையிலே மூழ்கடித்து வைப்பாய்! பாம்புக்கு பால் ஊற்றும் எங்கள் இனத்தின் மடமையை எந்தக் காலத்தில் நாங்கள் விடுவிக்கப் போகிறோம்? நாங்கள் சொல்லித் திருத்த வேண்டாமா? பாம்பு பாலூட்டி இனமே இல்லை என்ற ஒரு உண்மையை சொல்லித் தர தவறிய என் இனத்து மக்களை எப்படியடா திருத்தப் போகிறோம்! பாம்புக்கு பிளவுப்பட்ட நாக்கு அது எதையும் உறிஞ்சிக் குடிக்காது. அப்படியே விழுங்கும். முட்டையைக் கூட கொத்திக் குடிக்காது. அப்படியே விழுங்கும்.

ஆனால் திரைப்படத்தில் குடிக்குதே என்று கேட்கலாம். அது அறிவு கெட்ட முட்டா பயல்கள் எல்லாம் சேர்ந்து மேலும் முட்டாளாக்க செய்கிற முட்டாள்தனம் அது. பாலைக் குடிக்குதே என்பீங்க. அது வாயைத் தைத்து வைச்ச சினிமா பாம்பு ஒரு மயிரும் குடிக்காது. சட்டி மேலே கொண்டு போய் வைப்போம். அது மயங்கிக் கிடக்கும் ஒரு காட்சியை எடுத்துப்போம். பாலை கொஞ்சம் கீழே ஊற்றிவிட்டு திரும்ப காட்சி எடுப் போம். இப்படி மூன்று நான்கு முறை எடுத்து எல்லாத்தையும் ஒன்று சேர்த்துக் கொள்வோம். பார்ப்பவர்களுக்கு பாம்பு சரவரவென பாலைக் குடித்ததுப் போல தெரியும். இதுல ஏமாறுகிறது போல் தான் எங்க சனங்க இரண்டாயிரம் வருடங்களா ஏமாந்து கிடக்கிறார்கள்.

பாம்புக்கு காதுக் கேட்காது. அதற்கு உணர்வு நரம்புகள்தான் இருக்குது. மகுடி ஊதுறவன் அப்படியே நின்னா பாம்பும் அப்படியே நிற்கும். ஆடிக்கிட்டே ஊதுறதாலே அதுவும் ஆடும். இவையெல்லாம் ஒரு அடிப்படை அறிவு. அடிப்படை அறிவுக்கூட வளராத என் இன மக்கள் 21-ம் நூற்றாண்டு வரை வந்து விட்டார்களே என்ற வேதனையில் தானே நாங்கள் எடுத்துச் சொல்றோம். இன்னும் குடகுடமா பாலைக் கொண்டு போய் ஊத்துற மக்களை என்ன சொல்வது ராஜா? ஏன் நீ இதையெல்லாம் சொல்லித் தரலை. ஏன் தெரியுமா?

எம் இனம் அறிவார்ந்த இனமா மாறிட்டா, பார்ப்பானுக்கு ஆபத்து. பிறகு கேள்வி கேட்பான். அது தானே உன் பிரச்சினை. கடவுள் இருக்கா? இல்லையா? என்று எங்கள் மக்கள் முன்னாலே நாங்கள் பேசும் நாத்திகம், எங்கள் மக்களின் விடிவுக்கான நாத்திகம். இன்னும் சொல்லப் போனால், நாங்கள் நாத்திகம் பேசவில்லை; அறிவை பேசுகிறோம்.

நான் மட்டுமா நாத்திகன்? இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நாத்திகன்தான். எவனாவது மறுக்க முடியுமா? பசிக்கு சாப்பிடுகிற எல்லாரும் நாத்திகன் தான். கடவுள் உங்களை பிறக்க வைச்சபோது நிர்வாணமா பிறக்க வைச்சா நிர்வாணமாக திரிய வேண்டியது தானே? இந்த நாட்டிலே தலைவலி, காய்ச்சலுக்கு திரு நீரைப் பூசிக்கிட்டு கோயிலிலே அங்க பிரதட்சணம் செய்ய வேண்டியது தானே? ஏன் டாக்டர்கிட்ட போறே? நீ டாக்டர் கிட்டே போறப்பவே கடவுளை நம்பவில்லையே, நீ! கோயில் கதவை பூட்டிக்கிட்டுப் போற எல்லாருமே நாத்திகன் தானே. கடவுள் நம்பிக்கை எனக்கா இல்லை, உங்களுக்கும் தானே இல்லை. (கைதட்டல்)

இசுலாமிய கடவுளை கிருத்துவனும், இந்துவும் நம்பல. கிருத்துவ மதக் கடவுளை இசுலாமியனும் இந்துவும் நம்பல. இந்துமதக் கடவுளை இசுலாமியனும், கிருத்துவனும் நம்பல. நாங்க மூன்றையும் நம்பறதில்லை. நீங்க சுத்தி சுத்தி நம்பல. நாங்க நேரடியா நம்பல. நீங்கள் தனித்தனியா சொன்னா அது நல்லது. நாங்க மொத்தமா சொன்னா நாத்திகமா! (கைதட்டல்)

நாத்திகம் என்பது அறிவு. நாத்திகம் என்பது கல்வி. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கற்க வேண்டிய பாடம். கோவிலில் கடவுள் அளவற்ற சக்தியும், அண்டசராசரங்களையும் இரட்சிக்கிற பேராற்றல் கொண்ட அந்த பெருமகனுக்கு எதுக்குடா கதவும், பூட்டும்? ஒரு நாள் அல்ல அரை மணி நேரம் திறந்து வைத்துபார். உன் கடவுள் அங்கே இருக்குதா என்று. கோணிப் பையிலே போட்டு கட்டிக் கொண்டு போயிருப்பான். அப்புறம் போய் போலீஸ் நாயை கொண்டு நக்கிக் கண்டுப் பிடிக்கனும், உன் கடவுளை. அவன் காலடியில் வைத்திருக்கிறாயே ஒரு உண்டியல் அதற்கு எதற்கு ஒரு பூட்டு. ஏன் வங்கிகளைவிட கோயில் உண்டியலில் தான் கொள்ளை அடிக்க அதிகம் பணம் இருக்கிறது.

இந்து மதம் என்பது பார்ப்பனீய மதம். மறுத்துப் பேச முடியுமா? நீயும் இந்து நானும் இந்து. பிறகு ஏன் நீ அய்யரு, நான் பறையரு? இது சாதிய துவேசம் அல்லவா? நபிகள் நாயகம் சொன்னாரா, நான் நான்கு வர்ணத்தைப் படைத்தேன் என்று? கிருஸ்து சொன் னாரா, சாதியை நான்தான் படைத்தேன் என்று.

கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்றான், ‘நால்வகை வர்ணாசிரம தருமத்தை நானே படைத்தேன் என்று. அது மட்டுமா சொல்றான்? இதை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று கிருஷ்ணன் சொல்றான். இது கொடுமையல்லவா? சரி கிருத்துவ மதத்தின் தலைவன் ஒரு கிருத்துவனாக இருக்கிறான். இசுலாம் மதத்தின் தலைவன் ஒரு இசுலாமியராக இருக்கிறான். இந்து மதத்தின் தலைவன் இந்துவாகத் தானே இருக்க வேண்டும். எங்கள் அண்ணன் திருமாவளவன் இந்து தானே! காஞ்சி மடாதிபதியை இறக்கிட்டு திருமாவளவனை 5 வருடம் மடாதிபதியாக்குங்கடா. நாங்க இந்து மதத்தைப் பற்றி பேசலை. (கைதட்டல்)

 இராமகோபாலனுக்கு ஒரு கேள்வி!

“கபாலீஸ்வரன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை போய்விட்டது. அந்த உண்டியலை இராமகோபாலன் 5 பேரோடு தூக்கிப் பிடித்துக் கொண்டு கோயில் உண்டியலை களவாடி விட்டார்கள். காவல் துறையே உடனே நடவடிக்கை எடு என்று கேட்கிறான். கடவுள் நம்பிக்கை உனக்கு இல்லையா? இராம.கோபாலன் அவர்களே, கோயில் உண்டியலை கடவுள் காப்பாற்ற முடியல. காலடியில் உள்ள உண்டியலை காப்பாற்ற முடியாத கடவுள் இந்த உலகத்தை காப்பாற்றுது நம்புங்கன்னு இவன் சொல்லி வச்சிருக்கான்.

ஒரு பெண் கவிஞர் கவிதை எழுதி இருந்தாங்க. ‘கையில் சூலாயுதம் இருந்தும், காத்துக் கொள்ள தவறிவிட்டாள் கடத்தப்பட்ட மகமாயி’; ஒருவன் புதுக் கவிதை எழுதினான் ‘ஆன்மீகத்தை நம்பினால் ஆயுள் கூடும்; நம்புங்கள் நம்புங்கள் பிரேமானந்தாவிற்கு இரட்டை ஆயுள் கிடைத்திருக்குதுன்னு’.” -- சீமான் உரையிலிருந்து

தொடர்ச்சி...