தமிழ்நாட்டு மக்கள் மீது சோனியா எல்லை மீறிய கோபம் கொண்டிருப்பதாக ஏடுகள் எழுதுகின்றன. விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க ‘வெஞ்சினம்’ பூண்டு செயல்படும் சோனியாவுக்கு தமிழ்நாட்டில் எழும் உணர்வுகளை சகிக்க முடியவில்லை போலிருக்கிறது.

‘ஜூனியர் விகடன்’ ஏடு இதை வெளிப்படுத்தியிருப்பதோடு தம்மை சந்திக்க வந்த மருத்துவர் இராமதாசிடமும் இதை சோனியா வெளிப்படுத்தியிருப்பதாக எழுதியுள்ளது. அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மிக மோசமாக பார்ப்பன வெறியுடன் செயல்பட்டபோது மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இடஒதுக்கீட்டில் உறுதியாக நின்றார்.

அதுபோல பொதுவிடங்களில் புகை பிடிக்க தடை சட்டம் கொண்டு வருவதிலும் உறுதியாக செயல்பட்டார். மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளுமே, மத்திய அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தியவை என்று மருத்துவரிடம் கூறிய சோனியா, அப்போதெல்லாம் அன்புமணி பக்கம், மத்திய அரசு நின்றது என்று கூறி, அதேபோல் இலங்கைப் பிரச்சினையில் எங்களை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்று எச்சரித்ததாக அந்த ஏடு கூறுகிறது.

மத்திய பார்ப்பன அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் திமிர் பிடித்த அறிக்கையைக் கண்டித்து, பா.ம.க., ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது - சோனியா, அவர்களைக் கடுமையாக முறைத்துப் பார்த்திருக்கிறார்.

“சோனியாவின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது. எங்களை முறைத்துப் பார்த்தபோது அவருடைய சுயமுகம் நன்றாகத் தெரிந்தது” என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாக அந்த ஏடு எழுதியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் போலீசார் தடியடிக்குப் பிறகு - தமிழக முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசிய சோனியா, தொடக்கத்திலேயே மாநில அரசு வழக்கறிஞருக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும் என்று கண்டிப்பாகவே தொலைபேசியில் கூறியதாக - ‘ஜுனியர் விகடன்’ குறிப்பிட்டுள்ளது. மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் ‘சூசகமாக’ வெளியிட்டிருக்கிறது.

அதிகாரபூர்வமற்ற முறையில் ரகசியமாக ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியதோடு, தேவைப்பட்டால், வெளிப்படையாகவும் களம் இறங்கத் தயார் என்று சோனியா சிங்களத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாராம். சோனியாவே - வெளிநாட்டுத் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு - ஈழத் தமிழர்களுக்கு உதவிட வேண்டாம் என்று பேசி வருவதால்தான், உலகம் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த செய்தி கூறுகிறது.

சோ - சு.சாமி

சு. சாமிக்கு முட்டை அடி கிடைத்தவுடன், அவரது இல்லம் நோக்கி, ஓடோடி ஆறுதல் கூறச் சென்றவர் துக்ளக் சோ பார்ப்பனர். ‘நேரா முகத்தை நோக்கி முட்டையை வீசுகிறான் பாருங்கோ; பெரியார் காலத்துல கூட பேசிண்டுதான் இருந்தா; இப்போதுதான், இப்படி எல்லாம் நடக்குது; இப்பவே இந்த நிலையின்னா, ‘தமிழ் ஈழம்’ கிடைச் சுட்டதுன்னா நம்மளவா கதி என்னவாகுமோ” என்று சோவும், சுப்ரமணிய சாமியும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘நக்கீரன்’ ஏடு - இந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளது. சு.சாமியால் பெரியார் திராவிடர் கழகத்தை மட்டும் மறக்க முடியவில்லை. “என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எல்லாம் பெரியார் திராவிடர் கழகம், நக்சலைட், விடுதலை சிறுத்தைகள் ஆட்கள் தான்” என்று ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் புலம்பியுள்ளார்.