பல்வேறு மதப் பிரிவைச் சார்ந்த தமிழர்களும், கடவுள் மத மறுப்பாளர்களான பெரியாரியல்வாதிகளும், மாணவர்களும், மாணவிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பெண்களும் ஒன்றாக இணைந்து ஈழத்தில் நடக்கும் இன அழித்தலுக்கு எதிரான பேரணியை சென்னையில் கடந்த பிப்.22 ஞாயிறு மாலை நடத்தினர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட அந்த பேரணி அமைதிப் பேரணி என்று அறிவிக்கப்பட்டாலும் உணர்வுகள் வெடித்து முழக்கப் பேரணியாகியது. சென்னை ‘போர்வீரர்கள்’ நினைவகத்திலிருந்து பெரியார் சிலை வரை ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் அமைதிப் பேரணி’ என்ற பெயரில் நடந்த அந்தப் பேரணியை அருட்திரு ஜெகத்கஸ்பார், மருத்துவர் எழிலன் ஆகியோர் உணர்வுள்ள இளம் செயல்வீரர்களோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்.

பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய அருட்திரு. ஜெகத் கஸ்பார் அடுத்த சில வாரங்களில் பல லட்சம் தமிழர்களை முல்லைத்தீவில் கொன்று ஒழிக்கும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்திட சிங்களம் முடிவெடுத்து விட்டதை நம்பகத்தன்மை மிக்க மனித உரிமை அமைப்புகளின் தகவல்களிலிருந்து எடுத்துக்காட்டினார். அந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

தமிழினப் படுகொலைக்கு துணை நின்று தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இருட்டடித்து, ஒரு சார்பாக செயல்படும் ஆங்கில ஊடகங்களை மருத்துவர் எழிலன் எச்சரித்தார். சமூக நீதி தளத்திலிருந்து வளர்ந்து வரும் தமிழகத்தின் இளைய தலைமுறை இந்த ஆங்கில ஊடகங்களின் துரோகத்தை கண்காணித்து வருகிறது என்று பேரணியின் இறுதியில் எச்சரிக்கை விடப்பட்டது. பேரணியின் இறுதியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களின் கரவொலிகளுக்கிடையே கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாணவர் சமூகத்தின் சார்பில் செந்தில் தீர்மானங்களை படித்தார். தீர்மானங்களின் விவரம்:

• ஸ்ரீலங்கா ராஜபக்சே அரசு தமிழ் மக்கள் மீது நடத்தும் இன அழித்தல் யுத்தத்தை தடுத்து நிறுத்தும் உடனடி முயற்சிகள் எடுத்திட இந்திய அரசை வேண்டுகிறோம்.

• இந்திய அரசே, தமிழ் மக்களின் தியாகங்கள் நிறைந்த நீண்ட போராட்ட வரலாற்றினை கருத்திற் கொண்டு, அவர்தம் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர அரசியல் தீர்வு பேச்சு வார்த்தைகள் தொடங்க ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்து.

• முல்லைத் தீவு பகுதியில் 220000 தமிழர்கள் உணவு, மருந்துப் பொருட்களின்றியும், விமான, எறிகணை குண்டு வீச்சுகளாலும் புழுப்பூச்சிகள் போல் செத்து மடிகின்றனர். சமீப நாட்களாக அங்கு வெறும் 70000 மக்கள் மட்டுமே இருப்பதாய் ஸ்ரீலங்கா அரசு கூறத் தொடங்கியுள்ளது. இது வரும் வாரங்களில் லட்சத்திற்கும் மேலான தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் சதியோ என அஞ்சுகிறோம். இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான படுகொலையாக முடியப்போகும் இப் பேரழிவினை உடனடியாகத் தடுத்து நிறுத்த இந்திய அரசையும் உலக நாடுகளையும் வேண்டுகிறோம்.

• ஸ்ரீலங்கா அரசு 30 ஆண்டுகளாய் தமிழ் மக்களுக்கெதிராகப் புரிந்த மனித உரிமை மீறல்கள், அனைத்தையும் விசாரித்து, பதிவு செய்து நீதி வழங்க அனைத்துலக போர்க்குற்ற நீதியமையம் அமைக்க ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர இந்தியா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாய் இந்தியாவின் வெளியுறவு வளங்கள் ஸ்ரீலங்காவின் தமிழர் அழிப்பு போரை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அணுகுமுறையில் உறுதியான மாற்றத்தை இந்திய அரசிடம் வேண்டுகிறோம்.

• இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா நாடுகளின் சுயநல அபிலாஷைகள் ஈழத் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு முக்கியமான தோர் காரணம். இந்நாடுகள் ஆறரை கோடி இந்திய தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் கொணரவும், ஸ்ரீலங்கா மீது போர்க் குற்ற நீதி மையம் அமைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர்ந்திட வேண்டுகிறோம்.

• ஈழத் தமிழ் மக்கள் பேரழிவின் விளிம்பில் நிற்கும் இக்காலத்தில் தமிழக அரசியற் கட்சிகள் தேர்தல் அரசியலின் சிக்கல்களின்று மேலெழுந்து ஒரே குரலாய் ஒலிக்க வேண்டுமெனவும் மன்றாடுகிறோம்.

• இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்புடன் இணைந்து செயற்பட மனிதநேயம் கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்.