இன்று நிறுவனங்களாகச் செயல்படும் பல்வேறு கூறுகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில்தான் தோற்றம் பெற்றன. கல்வி நிறுவனங்கள் உருப்பெற்று, அதிலிருந்து ஆங்கிலக் கல்வி பெற்ற பலர், தமிழ்ச் சூழலில் செயல்படத் தொடங்கினர். 1834 இல் சென்னையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பள்ளிக்கூடம் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்தவர் களுக்கு ஆங்கிலவழிக் கல்வி போதிக்க வழிகண்டது. 1843இல் ஆறுமுக நாவலர் கிறித்தவ நிறுவனங்களுக்கு எதிரான பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். 1830இல் உருவாக்கப்பட்ட ‘இந்து இலக்கியச் சங்கம்’, 1940களில் கிறித்தவ நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு மாற்றாகச் செயல்படத் தொடங்கியது.

கல்கத்தாவில் செயல்பட்ட பிரித்தானிய இந்தியச் சங்கத்தின் கிளை 1952இல் சென்னையில் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான மனநிலையில் செயல்பட்டது. ‘சென்னை வாழ்வோர் சங்கம்’ என்ற அமைப்பு 1851இல் உருவாக்கப் பட்டது. இப்பின்புலத்தில் சென்னை நகரம் என்பது, நவீன சிந்தனை மரபுகளை உள்வாங்கி நவீன கல்வி பெற்றவர்கள் செயல்படும் நகரமாக உருப்பெறத் தொடங்கியது. வெறும் சமய மரபுகளில் செயல்படுவோரிலிருந்து கொஞ்சம் மாற்றாகச் செயல்படும் பிரிவினர் உருப்பெற்றனர். வட்டார மொழியைச் சார்ந்து தொடர்பாடல்கள் (ஊடிஅஅரniஉயவiடிளே) உருவாயின. ஐரோப்பிய புத்தொளி மரபு வழி உருவான நவீன கருவிகளில் ஒன்றான அச்சு, மேற்குறித்த பின்புலத்தில் உருவான, தொடர்பாடல் முறைகளுக்குப் பெரிதும் அடிப்படையாக அமையத் தொடங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தன்மை வலுப்பெற்றதை ‘விவேக சிந்தாமணி’ இதழின் ஆசிரியர் சி.வி.சாமிநாதய்யர் கூற்று உறுதிப்படுத்துகிறது.

“நாம் 1892ஆம் வருஷத்தில் அறிவைப் பரவச் செய்வதற்கான ஏற்பாடு ஒன்று தயார் செய்து பிரசுரித்ததில், அவ்வேற்பாடு பயன்படுவதற்கு இன்றியமையாததாக அமைய வேண்டியது பத்திரிகையாதலால் அதற்காக வென்று நாம் பிரத்தியேகமாக வெளிக்கொண்டு வரவிருக்கும் விவேகசிந்தாமணி என்னும் பத்திரிகை நிலை பெறுவதற்கு அவசியமான முயற்சியை செய்ய வேண்டியது நம் முதற்கடமையாக நியமித்துக் கொண்டோம்.” (1892 : 1 : 1 : 33)

‘அறிவைப் பரவச் செய்தல்’ என்னும் மனநிலை உருப்பெற்றதைக் காண்கிறோம். சமய மரபு சார்ந்த சிந்தனை முறை என்பது நவீன கருவிகள் உருப்பெறும் காலங்களில், விரிசல் ஏற்படுத்துவதை இதன் மூலம் புரிந்துகொள்ளமுடியும். இந்தப் பின்புலத்தில் பத்தொன் பதாம் நூற்றாண்டின் கடைசி நாற்பது ஆண்டுகளில் உருவான அச்சுப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.

- கிறித்தவ நிறுவனங்களில் செயல்படும் அச்சுச் செயல்பாடுகளுக்கு இணையான பிற அச்சு மரபுகள் உருவாதல்.

- ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடுதலில் கவனம் குவிதல்.

- நவீன தொகுப்பு மரபு உருப்பெறுதல்.

- வாய்மொழி மரபில் செயல்பட்ட வெகுசன நுகர்வு சார்ந்த பிரதிகள், அச்சுப் பிரதிகளாக உருவாதல்.

கிறித்தவ நிறுவனங்கள் மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மட்டுமே அச்சிடும் உரிமையை 1835 வரை பெற்றிருந்தனர். அச்சுப் புழக்கத்திற்கு வரும்போது அது சனநாயகப்படுத்தலாக இல்லை. எனவே கிறித்தவம் தொடர்பான அச்சு ஆக்கங்கள்தான் அதிகமாக வெளி வந்தன. பைபிள் மொழியாக்கங்கள், கிறித்தவத் தோத்திரப் பாடல்கள், கிறித்தவப் போதனைகள் எனப் பல நிலைகளில் அச்சிடப்பட்டன. ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை, இதுவே தமிழ் அச்சுப் பண்பாட்டின் தன்மையாக இருந்தது. கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவை தொடர்பானவை அச்சாகின. அரசாங்க நிறுவனச் செயல்பாடுகளை நடைமுறைப் படுத்தும் அறிக்கைகள் அச்சு வடிவம் பெற்றன. சனநாயகத் தன்மையோடு அச்சு ஊடகம் 1850-க்கு முன் செயல் பட்டதாகக் கூறமுடியாது. இத்தன்மை 1850களுக்குப் பின் உடையத் தொடங்கியது. கிறித்தவச் சமயப் பரப்புரைக்கென அச்சிடப்படும் துண்டறிக்கைகள் (கூசயஉவள) மிகுதியாக அச்சிடப்பட்ட நேரத்தில், அதனை எதிர்கொள்ளும் வகையில், இந்து சமயப் பரப்புரை சார்ந்த அச்சுச் செயல்பாடுகள் உருவாயின. இதனைப் புரிந்துகொள்ள 1867-1900 ஆண்டுகளில் வெளிவந்த இந்து சமயப் பரப்பலுக்கான இதழ்களைக் கூறலாம். சுமார் நாற்பது இதழ்கள் இக்காலத்தில் இந்து சமயப் பிரச்சாரத்திற்காக நடத்தப்பட்டன என்று கூற முடியும்.

அமிர்தவசனி (1872), அருணோதயம் (1898), சத்ய வேதானுசாரம் (1884), தரங்கம்பாடி மிஷன் பத்திரிகை (1887), நட்புப் போதகன் (1867) விவிலிய நூல் விளக்கம் (1889) ஆகிய பிற கிறித்துவ இதழ்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கில் கிறித்தவச் சமயப் பரப்புச் சபைகள், துண்டறிக்கைகளை, சிறு பிரசுரங்களை ‘கூசயஉவள’ என்னும் பெயரில் அச்சிட்டு வெளியிட்டன. இதனை எதிர்கொள்ளும் இந்து சமயம் தொடர்பான இதழ்களும் வெளிவரத் தொடங்கின. ‘தத்துவ போதினி’ (1864) என்னும் இதழின் முதல் இதழ் தலையங்கம் பின்வருமாறு அமைகிறது.

“இக்காலத்தில் நம்முடைய மதத்தை நிலைநிறுத்து வதற்காக என்னதான் செய்யலாகாது? நம்முடைய மதத்தில் ஓரெழுத்துத் தெரியாது, தெளிவாய் அச்சிடப்பட்ட கிரீஸ்துமத புஸ்தகங்களைக் கண்டும், பாதிரிகளுடைய ஆதாரமற்ற தூஷணை களைக் கேட்டுமல்லவோ, நம்முடைய சிறியோர்கள் மதிமயங்கிப் போகிறார்கள். இச்சமயத்திலும் நாம் அசிரத்தையாயிருப்பது, நியாயமா, தர்மமா, கடவுளுக்குத்தான் இஷ்டமா, வேதார்த்தங்களை வெளிப்படுத்துவதற்கு இன்னும் பல ஹேதுக்

களுளவாயினும் இது (இதழ்) ஒன்றே போதுமான தாயிருக்கிறது.” (தத்துவபோதினி.1864.மே.முதல் இதழ்)

இதன் மூலம் அச்சு ஊடகத்தில் இந்து மதம் தொடர்பான பரப்புரை எவ்விதம் வேர் கொண்டது என்பதை அறிய முடியும். இப்பின்புலத்தில் இந்து சமய இதழ்கள் இக்காலத்தில் வெளிவந்தன. ‘இந்து மதப் பிரகாசிகை’ (1883), உபநிஷதார்த்த தீபிகை (1898), உபநிஷத்துவித்யா (1898), சித்தாந்த தீபிகை (1898), சித்தாந்த சங்கிரகம் (1877), சித்தாந்த ரத்நாகரம் (1879) சிவபக்தி சந்திரிகா (1890), கிவார்சனா தீபிகை (1900), ஞானபாநூ (1871), ஞான போதினி (1897), பிரம்ம வித்யா பத்திரிகை (1886), வைதீக சித்தாந்த தீபிகை (1889) ஆகிய இதழ்கள் இந்து மதப் பரப்புதலுக்காகவே இக்காலத்தில் வெளிவந்தவை. இவை கிறித்தவ இதழ்களில் எழுதப்படுவதை மறுத்து எழுதிவந்தன. இவ்வகையில் கிறித்தவப் பரப்புரைகளுக்குச் சமமான இந்து சமயப் பரப்புரைகளும் தமிழ் இதழியலில் இடம்பெற்றன. கிறித்தவம் சார்ந்த மொழி ஒன்றை உருவாக்கினார்கள். இதைப் போலவே வேதங்கள் சார்ந்த மொழியை இந்துக்கள் உருவாக்கினர்.

கிறித்தவ, இந்து சமயங்களை அடிப்படையாகக் கொண்டே தமிழ் இதழியல் உருவானது. சமயங்களில் மட்டும் செயல்படாமல், அதிலிருந்து கொஞ்சம் வேறு பட்ட இதழ்களும் வெளிவந்தன. இவ்வகையில் தமிழ் இதழியல் உருவாக்கம் அதன் தொடக்க காலம் முதல் பல்வேறு பரிமாணங்களை உள்வாங்கிச் செயல்பட்டதாகக் கருத முடியும். புதிதாக உருவான பள்ளிக்கூடங்கள், அங்குப் போதிக்கப்படும் கல்விக்கு உதவும் வகையிலும் இதழ்கள் இக்காலத்தில் வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வி பத்திரிகை’ (1897), கிராமப் பள்ளி உபாத்தியாயர் (1887), இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன் (1880), இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன் (1881) ஆகிய இதழ்கள் இவ்வகையில் அமைந்தவை. ஆங்கிலக் கல்வியின் ஊடாக உருவான புதிதான சிந்தனை மரபுகளில் ஒன்றாகப் பெண் பற்றிய சிந்தனைகளைக் கூறலாம். பெண் கல்வி, மறுமணம், குழந்தை மண எதிர்ப்பு ஆகிய பல கூறுகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே, பெண்களுக்கென இக்காலத்தில் இதழ்கள் வரத் தொடங்கின. ‘மகாராணி’ (1887) என்னும் இதழ் வெளி வந்தது. “இந்தப் பத்திரிகை இந்து பள்ளி மாணவிகளின் உபயோகத்திற்கெனவும் மற்றும் வீட்டுப் படிப்புக்கெனவும் பல வகை வர்ண விளக்கக் குறிப்புகளுடன் எளிய பாடல் களுடனும் கதைகளுடனும் கூடி வெளிவருவதாகும்”. இக்குறிப்பு தமிழ் இதழியல் உருவாக்கத்தில் பெண் பற்றிய மதிப்பீடுகள் வெளிப்படுவதைக் காணமுடியும். ‘மாதர் மித்திரி’ (1888) எனப் பிறிதொரு பெண்களுக்கான இதழ் வந்ததையும் அறிகிறோம்.

கிறித்தவப் பரப்பல், இந்து சமய உரையாடல்கள், கல்வி மற்றும் பெண் குறித்த மரபிலேயே தமிழ் இதழியல் இக்காலங்களில் செயல்பட்டதாகக் கூறமுடியாது. இத்தன்மையை மீறி ‘அறிவைப் பரப்புதல்’, தாய்மொழி வழி செயல்படுதல்’ என்னும் கண்ணோட்டத்தில் இதழ்கள் வந்தன. வெகுசனங்களின் ரசனை மரபுகளையும் உள்வாங்கி இதழில் உருப்பெறத் தொடங்கியது. ‘விவேக சிந்தாமணி’ (1892-1915) இதழ், ஆங்கிலத்திற்கு மாற்றாகத் தமிழில் செயல்படுவது குறித்து வெளிப்படுத்தும் குறிப்பு கவனத்தில் கொள்ளத்தக்கது.

“அறிவை அன்னிய பாஷையின் மூலமாகவே கற்க வேண்டிய அவசியமில்லை. சுயபாஷை மூலமாகவே கற்கலாம். அதற்கு ஆங்கில பாஷையே திருஷ்டாந்தம். ஆங்கிலேய பாஷையானது சுமார் 1500 வருஷங் களுக்கு முந்தி அநாகரிக ஜாதியாரின் பாஷையாக இருந்தது..... இப்போது நாம் ஆங்கில பாஷையை எப்படிப் படிக்கிறோமோ அவ்வாறே அவர்களும் கிரீக், லத்தீன் பாஷைகளைப் படித்து வந்தனர். அவ்வாறு படித்து தம் தேச பாஷையை அபிவிருத்தி செய்துகொண்டார்களேயொழிய நம்மைப் போலத் தேச பாஷையைக் கைவிட்டு, அந்நிய தேசத்து பாஷையின் மூலமாய்க் கடைத்தேறப் பார்த் தாரில்லை.” (விவேக சிந்தாமணி.1889.8.2)

இவ்வகையில், கிறித்தவச் செல்வாக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்த அச்சு ஊடக மரபு என்பது தமிழ் மரபில் கால் ஊன்றியது. தமிழில் புத்தக உருவாக்கமும் இதழியல் உருவாக்கமும் நடந்தேறியது. தமிழ் நூல் விவர அட்டவணையில் காணும் பதிவுகளின் அடிப்படையில், 1867 - 1900 ஆண்டுகளில், 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதைக் காண்கிறோம். விடுபடுதல்களோடு இணைத்து நாற்பது ஆண்டுகளில் (1860-1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம். சென்னை இராஜதானி என்று அழைக்கப் பட்ட பகுதியில் 335 அச்சுக் கூடங்கள் செயல்பட்டதை அறிகிறோம். பருவ இதழ்கள் சுமார் ஐம்பது வெளி வந்துள்ளன. எனவே பிரித்தானியர் நமக்கு வழங்கிய அச்சு மரபு, நமது மரபாக வடிவம் பெற்றுவிட்டது. இதன்மூலம் அறிவுப்புல வளர்ச்சி சார்ந்து, தமிழகத்தில் உருவான புதிய மரபுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

* * *

தமிழ் அச்சு மரபில் பெரிதும் விதந்து பேசவேண்டிய பகுதி, ஓலைச்சுவடிகளிலிருந்தும் தாள் சுவடிகளிலிருந்தும் சாசனங்களிலிருந்தும் இலக்கியங்கள், இலக்கணங்கள், கிறித்தவ சமய நூல்கள், மெய்க்கீர்த்திகள் - ஆகிய பிற அச்சு வடிவம் பெற்றமை ஆகும். தமிழ் அச்சுப் பண்பாட்டின் பல பரிமாணங்களைப் புரிந்துகொள்ள சுவடிகளிலிருந்து அச்சு வடிவம் பெற்ற பல்வேறு நூல்கள் உதவுகின்றன.

தமிழ்ச் சூழலில் மிகுதியான பிரபந்த நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சுவடிகளில் எழுதப் பட்டன. இச்சுவடிகள் தனிப்பட்ட மனிதர்கள் மற்றும் மடங்களில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டன. இச் சுவடிகள் பற்றிய கவன ஈர்ப்பு மெக்கென்சி போன்றவர்கள் தொகுக்கத் தொடங்கிய காலங்களில் ஏற்பட்டது. சி.இராமலிங்க வள்ளலார், ஆறுமுக நாவலர், ஆகிய பிறர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினர். சுவடிகள் குறித்த புனித மனநிலை வெகுசனங்கள் மத்தியில் நிலவியது. பாதுகாத்து வைத்திருப்போர், அதனை வழிபடு பொருளாகக் கருதினர். இத்தன்மையை மாற்றி, அவை நமது மரபின் அறிவுசார் வளங்கள் என்பதை அச்சிடுதல் முதல் சாத்தியப்படுத்தும் செயல் நிகழத் தொடங்கியது. ஒவ்வொரு துறை சார்ந்தும் இத்தன்மை குறித்து விரிவாக உரையாடலுக்கு உட்படுத்த வாய்ப்புண்டு. மருத்துவம், கணிதம், இலக்கணம், இலக்கியம் ஆகியவை முதன்மையான துறைகளில் சில. இலக்கியப் பனுவல்கள் அச்சிட்ட மரபின் மூலம், தமிழ் அச்சுப் பண்பாட்டில் ஏற்பட்ட புதிய தன்மைகளை மட்டும் இங்கு எடுத்துக்காட்டாகக் கொண்டு உரையாடலாம்.

1887இல் கலித்தொகையைச் சுவடியிலிருந்து சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பித்து அச்சு வடிவில் கொண்டுவந்தார். 1940இல் பேரா.ச.வையாபுரிப்பிள்ளை பதினெட்டு சங்கப் பனுவல்களையும் ஒன்றாக இணைத்து, புலவர் அகர வரிசையில் ‘சங்க இலக்கியம்’ என்று பதிப்பித்தார். மிக அதிகமான சங்க நூல்களை உ.வே.சா. பதிப்பித்தார். சுவடியில் இருந்த தொகையும் பாட்டும் அச்சு வடிவம் பெற்றபின் பல புதிய பரிமாணங்களில் தமிழ்ச் சூழல் குறித்துப் புரிந்துகொள்ளப்பட்டன. இவ்விதம் நிகழ்ந்த அச்சுப் பண்பாட்டின் மூலம் கீழ்க்காணும் கூறுகள் புதிதாக மேற்கிளம்பின.

- தமிழ்மொழி பேசும் இனத்தின் பழமை கிறித்துவிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.

- உலகத்தில் உள்ள தொல்சீர்பழம் மொழிகளில் உள்ள செவ்விலக்கியங்கள் போல் தமிழிலும் உள்ளது.

- சமசுகிருத மரபுக்கு இணையான தமிழ் மரபு; வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி செயல்பட்டு வந்துள்ளது.

சங்க இலக்கியச் சுவடிகள் அச்சிடுதல் மூலம் மேலும் பல்வேறு புதிய செயல்பாடுகள் உருப்பெற்றன. திராவிடர்கள் என்னும் இனத்தின் அடையாளங்கள் மீள்கண்டுபிடிப்புக்கு ஆளானது. திராவிட மொழிகளில் தமிழின் இடம் குறித்த மதிப்பீடுகள் உருப்பெற்றன. இப்பின்புலத்தில் தமிழகத்தில் தேசிய இன மறுமலர்ச்சிக் கருத்தாக்கங்கள் உருப்பெற்றன. சங்க இலக்கியம் அச்சு மரபில் உருவான பின்புலத்தில் சைவ மரபுகள் புதிய கண்ணோட்டத்தில் அணுகப்பட்டன. திராவிட இயக்கம், சங்க இலக்கியப் பெருமைகளை வெகுசனத் தளத்தில் முன்னெடுக்கத் தொடங்கியது. அதன் உச்ச கட்டம் அண்மையில் நடந்தேறிய செம்மொழி மாநாடு என்று கூறமுடியும். இவ்வகையில் ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சு வாகனம் ஏறியதன் விளைவாக உருவான பண்பாட்டுக் கூறுகளை விரித்துப் பேச வாய்ப்புண்டு.

* * *

செவ்விலக்கியங்கள் உருவான மொழிகள் அனைத் திலும் தொகுப்பு மரபு உருப்பெற்றிருப்பதை அறிகிறோம். ஒவ்வொரு கால வளர்ச்சியிலும், குறிப்பிட்ட பிரதியை வாசிப்பவர்கள் அணுகும் முறையியலாக அதனைப் பார்க்க முடியும். தமிழ் மரபில் தொடக்ககால செவ்வியல் தொகை நூல்கள் இவ்வகையில் உருப்பெற்றன. பின்னர் சமயப் பிரதிகள் இவ்வகையில் தொகுக்கப்பெற்றன. அறநூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன. இவற்றில் ‘புறத்திரட்டு’ குறிப்பிடத்தக்க நூல். இவ்வகையில் தொகை முதல் திரட்டு வரை கி.பி.எட்டாம் நூற்றாண்டு தொடங்கிப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை உருவான தமிழ்த் தொகுப்பு மரபு குறித்து அறிய முடிகிறது. அச்சுப் புழக்கத்திற்கு வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்பும் தமிழில் தொகுப்பு மரபு செழுமையாகச் செயல்பட்டதாகக் கூறமுடியவில்லை. பிரபந்தங்கள் உருவாக்கப்பட்டன. அதற்குள் ஒருவகையான தொகை மரபு செயல்பட்டதைக் காண்கிறோம். தொகுப்பு மரபை இலக்கிய வகைகளாகக் கட்டமைக்கும் பணி நடைபெற்றதாகக் கூறலாம். கோவை, சதகம் உள்ளிட்ட வடிவங்களை இவ்வகையில் நாம் அணுகமுடியும்.

மேற்குறித்த பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில், அச்சு வருகைக்குப் பின் புதிய தொகுப்பு மரபு உருப்பெற்றதைக் காண்கிறோம். இம்மரபு அச்சுப் பண்பாட்டின் மூலம் உருவானதாகக் கருதலாம். அருணகிரிநாதர், குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார், குணங்குடி மஸ்தான் சாகிபு ஆகிய பிற மனிதர்களின் ஆக்கங்கள் பல்வேறு சூழல்களில் உருவானவை. அடிப் படையில் உணர்ச்சியை முதன்மைப்படுத்தும் தனிப்பாடல் தன்மையை உள்வாங்கியவை. வாய்மொழி மரபில் பலர் ஆங்காங்கே பாடி வந்த பாடல்கள் இவை. ஒட்டு மொத்தமாக இப்பாடல்கள் சுவடிகளில் எழுதப்படவும் இல்லை. சுவடிகளின் பௌதிகத் தன்மை சார்ந்து அவற்றை அப்படித் தொகுப்பதும் சாத்தியமில்லை. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல், குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருணகிரி

நாதர் தோத்திரத் திரட்டு, குமரகுருபரர் பாடல்கள் திரட்டு, தாயுமானவர் பாடல் திரட்டு, வள்ளலாரின் அருட்பா - ஆறு தொகுதிகள், குணங்குடி மஸ்தான் பாடல் திரட்டு என்று புதிய மரபு உருவானது. இம்மரபை அச்சுக் கருவியே சாத்தியப்படுத்தியது. பல சூழல்களில், பல மனநிலைகளில் உருவான ஆக்கங்களை அச்சிட்டு இவ்வகையான திரட்டு நூல்களை உருவாக்கினர். இவ்விதம் உருவான திரட்டு நூல்கள் பழம் தொகுப்பு மரபோடு தொடர்புடையவை யாகக் கருத இயலாது. இதில் திரட்டுதல்தான் முதன்மை யான செயல். வகுத்துத் தொகுத்தல் மரபு இரண்டாம் பட்சமானது. அச்சும் தாளும் இம்மரபு வளமாகச் செயல்பட உதவியாக அமைந்ததைக் காண்கிறோம்.

தமிழ்ச் சூழலில் உருவான ‘சித்தர் ஞானக் கோவை’ என்னும் சித்தர்கள் பாடல்கள் இவ்வகையில் உருப் பெற்றவை. தனித்தனியாகப் பாடப்பட்ட பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ‘சித்தர் ஞானக் கோவை’, ‘பதினெட்டுச் சித்தர் பாடல்கள்’ எனத் தொகுக்கப்பட்டன. இதனைக் கொண்டு தமிழில் சித்தர் மரபு தொடர்ந்து செயல்படுவதான கருத்துநிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அச்சுப் பண்பாட்டின் விளை வாக உருவான கருத்துநிலை இதுவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் சித்தர்கள் என்ற பதிவைத் தனித்துப் பார்க்க ஆவணங்கள் இருப்பதாகக் கருத முடியாது. 1976இல் சித்தர் பாடல்களைத் தொகுத்த கோவேந்தன், தனது பாடல்கள் சில, தனது நண்பர் இல.தங்கப்பா பாடல்கள் சில ஆகியவற்றையும் சித்தர் பாடல்கள் தொகுப்பில் இணைத்துள்ளார். இதன் மூலம் அச்சுப் பண்பாடு எவ்வகையான புதிய புதிய மரபுகளை உருவாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நவீன தொகுப்பு மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் உருப்பெறுவதற்கு அச்சுக் கருவியே மூலமாக அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

* * *

வரலாற்றில் உருவான அரசு உருவாக்கம் பல்வேறு அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. அதிகாரமுடைய மேல் தட்டுப் பிரிவு, அதிகாரத்தைச் செலுத்த உதவும். கீழ்த்தட்டுப் பிரிவு என்னும் படிநிலை உருவாக்கப்பட்டது. அரசன், மன்னன், தலைவன் என்னும் பெயர்களில் அதிகாரம் செய்பவன் கட்டமைக்கப் பட்டான். மேல் மட்டத்தைச் சேர்ந்தவர்களின் செயல் பாடுகள் மட்டும்தான், பல்வேறு வடிவங்களைப் பதிவு செய்யப்பட்டன. அவை கல்வெட்டு, செப்பேடு, காசு எனப் பலவகைகளில் அமைந்த சாசனங்கள் ஆயின. ஆனால், குறிப்பிட்ட மன்னன் காலத்திலிருந்த ஆளப்படுவோரின் பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் இல்லை என்றே கூறமுடியும். மேல்தட்டில் உள்ளோர் குறித்துப் பதிவுகளைச் செய்யும்போது, அதற்கு உதவும் வகையில் மிகக் குறைவான வெகுசனங்கள் குறித்த பதிவுகள் காணக் கிடைக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அச்சு மரபு, வெகு சனங்களின் குரல்களையும் பதிவு செய்யத் தொடங்கியது. வாய்மொழி மரபில் இருந்த பாடல்கள்; அவர்களிடம் இருந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகிய அனைத்தும் அச்சு வடிவில் உருப்பெற்றன. இத்தன்மை அச்சுப் பண்பாட்டில் புதிய ஒன்றாகும். பல்லி எழுப்பும் ஒலியைக் கேட்டவுடன் அதன் பலனைப் பற்றி வெகுசனங்கள் தமக்குள் பேசிக் கொள்வர்; ஆனால் பல்லி சொல் பலன் என்னும் அச்சு நூல் வந்தவுடன் அதனை எடுத்து வாசிக்கின்றனர். தமக்கு அந்நூல் உதவும் என்று நம்புகின்றனர். இவ்வகையில் வெகுசனங்களின் நுகர்வில் உள்ள நூற்றுக் கணக்கான நம்பிக்கை மற்றும் சடங்குகள் அச்சு வாகனம் ஏறி உலா வருவதைக் காண்கிறோம். இதில் மருத்துவம் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. ஜோதிடங்கள் தொடர்பான நூல்களே இன்னும் மிகுதியாக அச்சிடப் படுபவை. உடல் நலத்திலும் நாள்தோறும் நிகழும் நிகழ்வு களிலும் கவனம் செலுத்தும் வெகுசனங்கள், அத்தன்மைகள் சார்ந்த நூல்களைத் தேடி வாங்குவர். இதனால்தான் ஜோதிட நூல்களும் மருத்துவம் தொடர்பான நூல்களும் மிகுதியாக விற்பனை ஆகின்றன. இத்தன்மை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதலே தொடங்கி, இன்றும் தொடர்கிறது. நம்பிக்கைகள் தொடர்பானவற்றை அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். பஞ்சாங்கம் தொடங்கி கிளி ஜோதிடம் வரை இவ்வகையில் அமைவன. இதில் அச்சுக் கருவி செயல்படும் விதம் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாக அமைகிறது.

நுகர்வுப் பண்பாடு, சமய மரபுகளோடும் இணைந் தவை. எனவே மனித நம்பிக்கை சார்ந்த அனைத்தும் அச்சு வடிவில் வெளிவருகின்றன. இவை ஓலைகளிலும் ஓரளவு எழுதப்பட்டன; ஆனால் அச்சிடுதல் மூலம் இவை மிகப் பரவலாகியது. இவ்வகையான நூல்களை அச்சிடாத பதிப்பகம் வணிக ரீதியில் நிலைபேறு கொள்வதும் இயங்குவதும் சாத்தியமில்லை என்னும் சூழல் உருப் பெற்றுள்ளது. நுகர்வுப் பண்பாடு சார்ந்த இதழியல் செயல் பாடுகளும் விரிவானவை.

* * *

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கால அச்சுப் பண்பாடு என்பது புத்தக உருவாக்கம், இதழியல் எனப் பல பரிமாணங்களில் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம். வணிகமாக ஒரு பண்பாடு கட்டமைக்கப்படுதலில், அப் பண்பாடு தொடர்பான ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் அச்சு ஊடகம் அவ்வகையில் செயல் பட்டதை விரிவாகப் பேச வேண்டும்.

- வீ.அரசு

Pin It