ஆஷ் துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டுக் கொண்ட வாஞ்சிநாதன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாற்றில் சேர்க்கப்படுகிறார். அண்ணா முதலமைச்சரானவுடனேயே வாஞ்சிநாதன் மனைவிக்கு பென்ஷன் வழங்க வந்தபோது பெரியார் அதை கேள்விக்கு உட்படுத்தினார். இப்போது வாஞ்சிநாதனின் கூட்டாளியின் மகள் கோதையம்மாள் என்பவருக்கு இடையில் நிறுத்தப்பட்ட தியாகி பென்ஷனை வழங்க முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். மாதம் ரூ.2000 சிறப்பு நேர்வாக் கருதி வழங்கப்பட இருக்கிறது. அத்துடன், பார்ப்பனர்களைத்தாம் மிகவும் மதித்துப் போற்றி வருவதாக நீண்ட கடிதத்தையும் கலைஞர் பூரிப்போடு ‘முரசொலி’யில் எழுதியிருக்கிறார்.

ஏழ்மையில் உழலுவோருக்கு உதவிடுவதை மனித நேய உணர்வுள்ளவர்கள் எதிர்க்க மாட்டார்கள். அது வேறு; ஆனால், வர்ணாஸ்ரமத்துக்காக துப்பாக்கியைத் தூக்கிய வாஞ்சி நாதனை தேசத் தியாகிகளாக்கினால், அதே நியாயம் கோட்சேவுக்கும் பொருந்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார். அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார். ஒரு முறை தனியாக வீதியில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பெண் பிரசவ வலியில் துடித்தபோது, அவ்வழியாக வந்த ஆஷ்துரையும், அவரது மனைவியும், அப் பெண்ணை தங்கள் வண்டியில் ஏற்றி, அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். அப்போது பார்ப்பன தெரு வழியாக செல்ல வேண்டியிருந்தது.

ஆஷ்துரையின் இத்தகைய நடவடிக்கைகளால் உயர்சாதியினரான பார்ப்பனர்களும், வெள்ளாளர்களும் ஆத்திரமடைந்தனர். இதன் காரணமாகத்தான் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றனர். அப்போது வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்களாக மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். குற்றம்சாட்டப்பட்ட டி.என்.சிதம்பரம், முத்துக்குமாரசாமி, சாவடி அருணாச்சலம், அழகப்பன் ஆகியோர் தென்காசி, செங்கோட்டையைச் சேர்ந்த வெள்ளாளர்கள். இதுவே - ஆஷ் மீதான வெறுப்புக்கு காரணம் - சாதி வெறிதான் என்பதற்கு சான்றாகும்.

ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டுக் கொண்ட வருணாஸ்ரம வெறி கொண்ட பார்ப்பனர் வாஞ்சிநாதன் சட்டைப் பையில் இருந்த கடிதமே கொலைக்கான பார்ப்பன வர்ணாஸ்ரம ஆதரவுப் பின்னணியை விளக்குவதற்கான மற்றொரு சான்றாகும். வாஞ்சிநாதன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த கடிதத்தை அப்படியே இங்கு தருகிறோம்:

“ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்சுனன் முதலியவர் இருந்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இது தான் இந்து ஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு
ஆர். வாஞ்சிநாதன்

இப்படி வர்ணாஸ்ரமத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தீண்டாமை வெறியோடு துப்பாக்கியைத் தூக்கியவர்களுக்கு எல்லாம் இதே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த திராவிடர் இயக்கத்தின் ஆட்சி ஏற்பு வழங்கி “பெருமை”யடைவதுதான் வேடிக்கை! தமிழகத்தின் தேசபக்திக்கு குத்தகை எடுத்துள்ள ராஜீவ் மரணத்துக்காக காலம் முழுவதும், அழுது புரண்டுக் கொண்டிருக்கும் காங்கிரசார் கோட்சே கொள்கை வழியில் செயல்பட்ட வாஞ்சிநாதனை தேச பக்தர்களாகக் கூறி பூரிக்கிறார்கள்! எது தேச பக்தி? எது தேசியம்? எது தேச விரோதம்? என்பவற்றை எல்லாம் பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் தான் தீர்மானிக்கிறது; அதை ஏமாளித் தமிழினம் வழி மொழிகிறது! அந்தோ!