18 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் பிரான்ஸ் நாட்டிலும் பிரிட்டனிலும், இயற்கைச் சமயம் என்ற ஒரு மதப் பிரிவு தோன்றியது. இதன் கொள்கை இந்தக் காலத்தில் மிகவும் பழையதாக, மாமூலாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் அன்று, அந்த இருண்ட காலத்தில் அது பெரும் புரட்சிகரமானதாக, புதுமை மிக்கதாகத் தோன்றியது.

பரமண்டலங்களில் ஒரு பிதா இருக்கிறார். அவருக்கு ஒரு குமாரன்; அவரே இயேசு கிறிஸ்து, அவர் பாவிகளை இரட்சிக்க இப்பூமண்டலத்தில் வந்து பிறந்தார் என்று அத்தைப் பாட்டி கதை போல ஆண்டவனை மக்கள் மன்றத்திலே மதக்குருக்கள் உலவ விட்டிருந்த காலம் அது.

அப்போது “கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்; ஆனால் அவரைப் பற்றிக் கட்டிய கட்டுக்கதைகள் எல்லாம் அறியாமையால் புனையப்பட்டவை” என்று கூறினார்கள். இந்த இயற்கைச் சமயத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது பிரான்சும், பிரிட்டனும் மிகப் பெரிய ஏகாதிபத்தியங்களைத் தங்களிடம் வைத்திருந்தன. எனவே, இந்தப் புதுசமயம் அவற்றின் காலனிகளிலும் பரவலாகப் பரவியது. ஏனென்றால் இச்சமயத்தைச் சேர்ந்த பலர் எழுத்துலகில் மிகப் பெரிய சாதனை புரிந்தவர்கள். எனவே, புத்தக வாயிலாக பல நாடுகளில் இம்மதம் பரவியது. அவற்றைப் படித்த பலர் இயற்கைச் சமயத்தின் ஆதரவாளர்களாக மாறியதுடன் நில்லாமல் பகுத்தறிவாளர்களாகவும் மாறினார்கள்.

இப்படிப்பட்ட பகுத்தறிவாளர் ஒருவர்தான் ஜான் ஆடம்ஸ். இவர் அமெரிக்காவில் 1755 இல் பிறந்து வளர்ந்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அமெரிக்க விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கு பெற்றவர். அன்றைய நடத்தர வகுப்பினைச் சேர்ந்த படித்தவர்கள் அனைவரையும் போல இவரும் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் பங்கு கொண்டு பிரகாசித்து வந்தார்.

வாஷிங்டன் தலைமையில் விடுதலை பெற்ற அமெரிக்காவுக்கு அரசில் சட்டம் தீட்டியவர்களில் இவர் முக்கியமானவர். இவரும் இவரது நண்பரான ஜெஃபர்சனும் அக்காலப் புரட்சி அரசியல்வாதிகள். அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதி ஆனார் ஆடம்ஸ்; மூன்றாவது ஜனாதிபதி ஆனார் ஜெஃபர்சன்.

ஜெஃபர்சன் அளவுக்கு பொருள் முதல் வாதத்தில் ஆடம்ஸ் அக்கறை காட்டவில்லை. என்றாலும் கடவுள் கவலையில்லாதவராக திகழ்ந்தார். இவர் தமது கொள்கைகளை விளக்கி எழுதிய நூல்கள் ஏராளம். இவற்றைப் பத்து தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டார்.

“கடவுள் என்பது நாம் எதுவும் அறிய முடியாத ஒரு சாரம்” என்று விளக்கம் கூறினார். “கடவுள் பல அவதாரங்களை எடுப்பது என்பது படுபயங்கரமான தெய்வ நிந்தனை” என்று ஜெஃபர்சனுக்கு எழுதிய கடித மொன்றில் கூறுகிறார். “இதற்குமேல் கடவுளைப் பற்றிக் கூறுவதெல்லாம் மதவாதிகளும், தத்துவ ஞானிகளும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் செய்யும் வேலைகள்” என்றார்.

இவ்வாறு கடவுள் பற்றி அவர் கொண்டிருந்த கொள்கை அவரது ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தை விளைவிக்கவில்லை. ஆனால் அவரது வருங்கால சந்ததியினரின் வளமான வாழ்க்கைக்கு அது சற்றுத் தடையாக இருந்தது.

எனவே, அவர் 1826 இல் இறந்து போன பிறகு அதற்கு 45 ஆண்டுகள் கழித்து 1871 இல் ஒரு நூலை வெளியிட்டார் அவரது பேரன். தனது தாத்தா ஆடம்ஸ் மத நம்பிக்கையும், பக்தியும் நிரம்பியவர் என்று அந்தப் புத்தகம் புளுகித் தள்ளியது என்றாலும் இப்புளுகு நூல் நிலைக்கவில்லை. ஆடம்ஸின் பகுத்தறிவு நூல்கள் தான் இன்னும் நிலவுகின்றன.