தேர்தல் கூட்டணி ஒதுக்கீட்டில் ‘காங்கிரசின் பேரத்துக்கு தி.மு.க. பணிந்து விடக் கூடாது’ என்று ‘மானமிகு சுயமரியாதைக் காரர்’ கலைஞர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் “தாய்”க் கழகத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கை இது:

 “குட்டக் குட்டக் குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டு விடுகிறதோ என்ற அச்சம் தமிழ் இன உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, அதன் மூலம் நிரந்தர சுமைதாங்கியாகாமல் மரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.”

 இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொண்டு, பிரச்சினை அடிப்படையில் மட்டும் ஆதரவு என்று தி.மு.க. உயர் மட்டக் குழு முடிவு எடுத்தவுடன் “தமிழர் தலைவர்” கி. வீரமணி விடுத்த அறிக்கை இது:

 “தமிழ் மானம், தன்மானம் இவற்றை காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம், குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு, உலகத் தமிழர் முதல், உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துள்ளது. கட்சித் தோழர்கள், இன உணர் வாளர்கள், இலட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும் என்பதே நமது அடக்கமான ஆசை.”

 தொடர்ந்து கலைஞரை சந்தித்து கி.வீரமணி பாராட்டி சால்வை போர்த்தினார்.  அதைத் தொடர்ந்து 63 இடங்களை காங்கிரசுக்கு தர முடியாது என்று கூறி, கூட்டணி முறிவை அறிவித்த முதல்வர் கலைஞர் கருணாநிதி, டெல்லியில் சோனியாவிடம் பேசி, அதே 63 இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்க முன் வந்த பிறகு கலைஞர் வெளியிட்ட கருத்து:

“இடையிலே ஏதோ, ‘இழுபறி’, ‘தயக்கம்’ என்றெல்லாம் நிலை இருப்பதாக நம்முடைய அன்புக்குரிய பத்திரிகையாளர்கள் சில பேர் மிக மிகக் கேவலமாக ஆத்திரத்தோடு, பொறாமையோடு அசூசை மனப் பான்மையோடு இந்த அணி உருவாகக் கூடாது, உறவு ஏற்பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தால் தவறான செய்திகளை திசை திருப்புகிற செய்திகளை நம்முடைய கழகத் தோழர்கள் களைப்படையக் கூடிய அளவுக்கு செய்திகளை வெளியிட்டார்களே - அவர்களுக் கெல்லாம் நல்ல பதிலாக இன்றைய நாள் நான் சொன்ன இந்த (உடன்பாடு) எண்ணிக்கை விவரம் அமைந்திருக்கிறது......... தி.மு.கழகம் எந்த அளவிற்கு விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையோடு, தோழமை உணர்வோடு நட்பு நேசம் இவை களிலே நீங்காத பற்றுக் கொண்டவை என்பதற்கு எடுத்துக்காட்டாக தி.மு. கழகம் 121 இடங்களை மட்டும் வைத் துக் கொண்டு, மற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் போட்டியிடுகிற வாய்ப்பை வழங்கியிருக்கிறது.”

 தி.மு.க., காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டுக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இப்படி ஒரு அறிக்கை வெளியிடுவார் என்று உலகத் தமிழரிலிருந்து உள்ளூர் தமிழர் வரை எதிர்பார்த்துக் காத் திருக்கிறார்கள்:

 “தமிழ்நாட்டின் சமதர்ம சகாப்தத்தை சாமான்ய மக்கள் சுவைத்து அன்றாடம் பயன்படும் ஒப்பற்ற ஆட்சி அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, இன எதிரிகள் பின்னிய சூழ்ச்சி வலையை முதல்வர் மாண்புமிகு, மானமிகு கலைஞர், அறுத்தெறிந்து, தனது இராஜ தந்திரத்தை மீண்டும் நிரூபித்து, தி.மு.க. தீரமிக்க தலைமை என்பதை நிலைநாட்டி விட்டார். தி.மு.க. சுதந்திர மாக முடிவெடுக்க வேண்டும் என்றும், குட்டக் குட்டக் குனிந்துவிடக் கூடாது என்றும் தாய்க் கழகம் என்ற முறையில் நாம் விடுத்த வேண்டு கோளையேற்று, காங்கிரசாருக்கு 63 இடங்களை வழங்கும் ‘சுதந்திரமான’ முடிவை கலைஞர் எடுத்ததற்காகவும்,  குட்டக் குட்டக் குனியக் கூடாது என்று நாம் கூறியதை ஏற்று, குட்டி முடித்த பிறகு குனிந்த தீர்க்கமான முடிவுக்காகவும் தாய்க் கழகத்தின் தொண்டருக்கு தொண்டன் என்ற முறையில் மாண்புமிகு - மானமிகு கலைஞர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். இதுவே உலகத் தமிழர்கள் உண்மைத் தமிழர்களின் உணர்வும் ஆகும். நெருப்பாற்றில் நீந்தி ‘பீனிக்ஸ் பறவையாக’ வெளிவந்துள்ள தீர மிக்க தி.மு.க. வின் இந்தக் கூட்டணியே அடுத்து ஆட்சியில் அமரப் போவது உறுதி! பகைவர் எங்கோ, ஓடி மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே.”

(குறிப்பு: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழர் தலைவர் பிரச்சாரத் திட்டம் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு வருகிறது; கருஞ்சட்டைத் தோழர்களே, தயாராவீர்! - தி.க. தலைமைக் கழகம்)