பார்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக இந்தியா மாற்றப்பட்டு விட்டது. தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களின் நலன்களைவிட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பார்ப்பன ஆதிக்க சக்திகளைத் திருப்தி செய்து அவர்களிடம் பெறும் லஞ்ச ஊழல் பணத்தில் அரசியல் திருவிளையாடல்களை நடத்துவதிலேயே இந்நாட்டு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன. இதற்கான கொள்கைகளை காங்கிரஸ், பா.ஜ.க.வும் நாடாளுமன்றத்தில் அமுல்படுத்த துடிக்கின்றன. தி.மு.க.வானாலும், அ.தி.மு.க. வானாலும் இந்த சுரண்டலுக்கு பச்சைக் கொடி காட்ட தயாராகவே இருக்கின்றன.

 சமூக நீதி, சாதி எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமை - யானையின் காலில் மிதிபடும் மழலைகளாக நசுக்கப்பட்டு வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார வாரியங்கள் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தைத் தருவதாக உறுதி அளித்து, அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் தமிழக அரசு, படிக்கும் மாணவர்கள் தேர்வு காலத்தில்கூட மின்வெட்டை அமுல்படுத்தி, அவர்கள் கல்வியில் மண்ணை அள்ளிப் போடுவது என்ன நியாயம் என்ற கேள்வியோடு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

 நாட்டின் பல்வேறு அடிப்படைத் துறைகளில் ஆட்சியாளர்கள் தனியார் சுரண்டலுக்கு கதவு திறந்து விட்டுவிட்டனர். அதில் ஒன்று மின்சாரத் துறை. 1990 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங், நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச சுரண்டலுக்கு திறந்து விட்டார். அதற்கு புதிய பொருளாதாரக் கொள்கை என்று ஒரு பெயரை சூட்டினார்கள். அப்போதிருந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மின் நிலையங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்று உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் வலியுறுத்தத் தொடங்கின. ஆண்டுக்கு ரூ.25000 கோடி மின்சாரத்துக்கு நிதி உதவி தருவதாகக் கூறி இந்த அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டபோது இந்தியாவின் பார்ப்பன அதிகாரவர்க்கம் அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது.

 1991 ஆம் ஆண்டு புதிய மின்சாரக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையை படிப்படியாகத் திணிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மின்சாரத் துறை அரசிடமிருந்து தனியாருக்கு விற்கப்பட்டன. என்ரான் என்ற அமெரிக்க மின் நிறுவனம், முதன்முதலாக மராட்டியத்தில் கால் பதித்தது. இதற்கான அனுமதியை வழங்கியது, 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து, பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகிய வாஜ்பாய் ஆட்சி. அந்த 13 நாட்கள் அதிகார காலத்தில் என்ரான் நிறுவனத்தை அழைத்து வந்தார். இதற்கு என்ரான் போட்ட முதலீடு 9000 கோடி. இதில் 40 சதவீத முதலீட்டை இந்திய வங்கிகளின் பார்ப்பன அதிகார வர்க்கமே கடனாகத் தர முன் வந்தன.

 என்ரான் மின்சாரத்துக்கு மராட்டிய மாநில அரசு கொடுத்த விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.7. இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையையும் தருவதாக வாஜ்பாய் ஆட்சி உறுதி கூறியது. பெரும் சுருட்டலோடு அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தைத் தராமலே - என்ரான், அமெரிக்காவுக்கு ஓடி விட்டது. இதே என்ரான் நிறுவனம், அமெரிக்காவில் மோசடி செய்து திவால் ஆன போது, என்ரான் தலைமை நிர்வாகி, அங்கே கைது செய்யப்பட்டார். இங்கே என்ரானின் சட்ட ஆலோசகராக இருந்தவர் ப. சிதம்பரம். அவர் பின்னர் நிதியமைச்சரானபோது மராட்டியத்தில் திவாலாகிப் போன என்ரான் நிறுவனத்துக்கு ரூ.9000 கோடி மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுக்காக வாங்கிக் கொண்டார்.

 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கான சட்டம் ஒன்றை கொண்டு வந்தனர். மின்சாரத் துறை, தனியார் வணிக அமைப்புகளைப் போல செயல்பட வேண்டும் என்றும், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும் என்றும், தனியார் துறையை அனுமதிக்கலாம் என்றும் அந்த சட்டம் கூறியது. இந்த சட்டத்தின்படி மாநிலத்தின் நிர்வாகத்தில் இருந்த மின் வாரியங்கள் கலைக்கப்பட்டு, உற்பத்தி, பகிர்வு, வழங்குதல் என்ற மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. டாட்டா, ரிலையன்சு நிறுவனங்கள் டெல்லியில் மின் உற்பத்தியில் இறங்கி, யூனிட் ஒன்றுக்கு ரூ.1.32 மின்சாரத்தை அரசிடமிருந்தே வாங்கி, அதையே அரசு நிறுவனங்களுக்கு ரூ.6.52க்கு இலாபம் வைத்து விற்று 2 ஆயிரம் கோடி பணத்தை சுருட்டினார்கள். ஒரிசாவில் அரசிடம் வாங்கிய மின்சாரத்துக்கே பணம் கட்டாமல், தனியார் நிறுவனங்கள் ரூ.3240 கோடியை ஏமாற்றினர்.

 முரசொலி மாறன், இந்தியாவின் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சுரண்டல் திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இதற்கு தொழில் நுட்பப் பூங்கா என்ற பெயர் மாற்றினார். இந்த மண்டலத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி - என்று எந்த வரியும் கிடையாது. 100 சதவீத வருமான வரி விலக்கு. தமிழ் நாட்டில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்நிய நிறுவனமான நோக்கியா செல் நிறுவனத்தைக் கொண்டு வந்தார்.

 இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்து செயல்படுகிறது. நோக்கியா நிறுவனம் மத்திய அரசுக்கு கட்டும் ‘வாட்’ வரியை தமிழக அரசே நோக்கியாவுக்கே திருப்பி செலுத்துகிறது. இவ்வாறு 2005 முதல் இதுவரை ரூ.650 கோடியை நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கிறது. மக்களுக்குத் தெரியாமல் இப்படி ஒரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகளாக இருப்பது பார்ப்பன உயர்சாதி வர்க்கம் தான்.

 மக்களுக்காக சேவை செய்வதாக் கூறி ஓட்டுகளை பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள் பார்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் சேவகர்களாக செயல்படுவதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த நோக்கத்துடனேயே சமூக நீதிப் பார்வையில் பெரியார் திராவிடர் கழகம் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.