மக்களிடமிருந்து பணத்தை தந்திரமாகப் பறிப்பதற்கான வழிகளை சாணக்கியன் ‘அர்த்த சாஸ்த்திர’த்தில் எழுதி வைத்தான். அந்த சாஸ்த்திரங்கள் - சாணக்கியன் காலத்தோடு மறைந்து விடவில்லை; இப்போதும் தொடருகிறது. அண்மைக்காலமாக ‘வீரியமிக்க’ பகவானாக - பக்தர்கள் வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருப்பவர் சபரிமலை அய்யப்பன். அந்த சபரிமலையில் - பொங்கலையொட்டி அய்யப்பன் ஜோதியாக வெளிவருவதாகக் கூறி, ‘மகரஜோதி’ ஒன்று, மலைகளிலிருந்து ஒளிரும். இந்த ‘மகரஜோதியை’ தரிசிக்க - பல லட்சம் மக்கள் திரளுவார்கள். உண்மையில் இது திட்டமிட்டு நடைபெறும் ஒரு ‘மோசடி’ என்ற உண்மை பல ஆண்டுகளுக்கு முன்பே அம்பலமானது.

இப்போது மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் அறநிலையத் துறை அமைச்சராக இருக்கும் ஜி.சுதாகரன் மகரவிளக்கிற்கும், அய்யப்பன் சக்திக்கும் தொடர்பில்லை, “இது மனிதர்களால் ஏற்றப்படும் விளக்கு என்பது அரசுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார். ஆனாலும், இதை அரசு தடுத்து நிறுத்தாது என்றும் கூறியுள்ளார்.

“நம்பிக்கையில் உள்ளவர்களின் நம்பிக்கையில் அரசு கை வைக்காது” என்கிறார். சபரிமலை குருக்களான கண்டரேறு கேஸ்வரகு என்பவரும், அமைச்சரின் கருத்தை வழிமொழிந்துள்ளார். ஏற்கனவே கேரள முதலமைச்சராக இருந்த ஈ.கே.நயினாரும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ‘மகர விளக்கை’ மலைகளுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு, பக்தர்களை ஏமாற்றும் “மந்திரமா, தந்திரமா?” நிகழ்ச்சியை, இத்தனை ஆண்டுகாலம் அரங்கேற்றி வருவது கேரள மாநில இந்து அறநிலையத் துறையாகும்.

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் வலியுறுத்தினாலும், ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியாகவே இருந்தாலும், பக்தியின் பேரால் நடக்கும் மோசடிக்கு உடந்தையாகவே இருக்கிறார்கள். ‘நம்பிக்கையில் கை வைக்காதே’ என்ற முழக்கத்துடன் தான் பார்ப்பன இந்துத்துவா சக்திகள் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கின்றன. கேரள மார்க்சிஸ்ட் ஆட்சியின் கருத்தை ஏற்க வேண்டுமானால், சேது சமுத்திரத் திட்டத்தையும் கைகழுவி விட வேண்டியதுதான்.

‘அய்யப்பனிடம்’ அன்றாடம் பூசை நடத்தும் ‘தாந்திரிகள்’ எனும் பார்ப்பன அர்ச்சகர்கள், பெண்களிடம் நடத்திய “திருவிளையாடல்கள்” கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தன. அய்யப்பனிடம் சக்தி ஏதுமில்லை என்பது பற்றி, ‘இவாள்’களுக்கு நன்றாகவே தெரியும்.

அய்யப்பன் கோயிலே தீ விபத்துக்கு உள்ளானது. திருவண்ணாமலை கோயில் கோபுரம் ‘மின்னல்’ சக்திக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் இடிந்து விழுகிறது. மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயிலில் உண்டியலையே - கபாலியால் காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும், ‘சக்தி’, ‘நம்பிக்கை’ என்று ஒரு கூட்டம், தொண்டை கிழியக் கத்திக் கொண்டு திரிவதோடு, உச்சநீதி மன்றத்துக்கும் போய் “நம்பிக்கையைக்” காப்பாற்ற மனுப் போடுகிறது.

இப்படி ஏராளமான மோசடிகள் அம்பலமாகிக் கொண்டிருந்தாலும்கூட, திடீரென்று, “அம்மன் சிலை கண்களில் ரத்தம் வடிகிறது”, “வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறது” என்று செய்திகள் வருவதும், கடவுள் சக்தி என்று மக்கள் நம்பிக் கொண்டு ஓடுவதும் தொடர்கிறது. தொடர்ச்சியான பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் தேவையையே இவை உணர்த்துகின்றன.

‘இந்துத்துவாவை வேரறுப்போம்; மதவாத சக்திகளை வீழ்த்துவோம்’ என்று முழங்கிக் கொண்டு, அதன் ஆணி வேராக இருக்கும் நம்பிக்கைகளில் மட்டும் கை வைக்க மாட்டோம் என்று சொன்னால் இந்துத்துவா சக்திகளை எப்படி தடுக்க முடியும்?

பா.ஜ.க. கட்சி சொல்வதையே மார்க்சிஸ்ட் கட்சிகளும் கூறலாமா என்பதே நமது கேள்வி. கேரள நாத்திகர்கள் அமைப்பு, இந்த உண்மைகளை வெளிக் கொணர போராடி வெற்றி பெற்றுள்ளது. மகர விளக்கு மோசடியை கேரள அரசு தடை செய்ய வேண்டும். அதற்கு தயங்கினால் இந்த மோசடிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையாவது குறைந்தபட்சம் ஆட்சியாளர்கள் செய்ய முன் வரவேண்டும்.