முழங்கால் அளவுக்கு மேல் வளர்ந்த சோளக்காட்டின் பாத்திகளுக்கு வேலுச்சாமி தண்ணீர் மாற்றிக்கொண்டிருந்தார். வெய்யில் சூடேறாத காலைப்பொழுதில் இளங்காற்றின் அலைகோதலுக்கு சோளப்பயிர்களிலிருந்து நுங்கின் மணம் எழுந்திருந்தது. வேலிக்கால் ஓரமுள்ள கடைசிச் சிறகின் நீர்ப்பாய்ச்சலில் அவர் இருந்தார்.

வேலிக்கு மறுபுறம் தார்ச்சாலை இருந்தது.அங்கிருந்து வந்த சிகரெட் புகையை அவரது மூக்கு உணர்ந்தபோது,

‘’உங்க அப்பாடா ‘’ என்ற மகேந்திரனின் குரல் கேட்டது.மகனின் நண்பனும் மகனும் வருகிறார்கள் என யூகித்தார். மகன் பழனிக்குமாரின் குரல் அடுத்து வந்தது.

‘’நம்ம என்ன அவரு முன்னாடியா பத்தவச்சிருக்கோம். இதெல்லாம் கண்டுக்காம இருக்கறதுதான் அவருக்கு நல்லது.’’

தனக்கும் கேட்கட்டும் என்றே அவன் அப்படிப் பேசுகிறானோ என்ற ஐயம் வேலுச்சாமிக்கு உண்டானது. குனிந்து மண் வெட்டும் நேரம் அவரது முதுகின் உணர்வுமேல் இருவரும் கடந்து போனார்கள். மறைந்தும் மறையாத மறைப்பில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர் கடைசிப்பாத்தியில் நிற்கிறபோது இருவரும் வந்தனர்.

பழனிக்குமார் அவர் தண்ணிமாறிய லட்சணத்தைக் கண்காணிப்பதுபோல பார்வையிட்டான்.’’சரி. வீட்டுக்குப்போய் சாப்பிடுங்க. நானும் இவனும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வர்றம்’’ என்றவன் ‘’அப்பா... நாளைக்கு மேக்க போய்ட்டு நாலு நாள் கழிச்சு வருவேன். அப்புறம் தென்னங்கன்னு நட்டுக்கலாம்.’’ என்றதும் அவர் தலையசைத்துவிட்டு நடந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் நீலாம்பூரில் கந்துக்கடை வைக்கப்போனான் பழனிக்குமார்.அம்மாவின் நகைகள் ஐந்து பவுனை அடகுவைத்துத்தான் முதலீடாக்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் கேரளாவிலும் மூன்று நாட்கள் தமிழ்நாட்டிலும் ஒரு நாள் அளவினைப் பயணத்திலுமாகக் கழித்துப் பணம் செய்து வருகிறான். சம்பாதிக்க ஆரம்பித்து  அடகில் இருந்த அம்மாவின் நகையையும் மீட்டதோடு மேலும் ஐந்து பவுனுக்கு சங்கிலியும் செய்துபோட்டிருக்கிறான். வேலுச்சாமி கல்யாணம் பண்ணிக்கூட்டிவந்த இருபத்தாறு வருசத்தில் ஒரு தம்பிடிக்கு தங்கம் வாங்கிப்போட்டதில்லை. அந்த ஐந்து பவுனுக்குப் பிறகு அவளது நடவடிக்கைகளில் நுண்மையான மாற்றங்கள் வந்தது. குடும்பத்துக்கு வெளியினரால் கண்டுபிடிக்க இயலாத அந்த மாற்றத்தினால் வேலுச்சாமி நொந்திருந்தார்.

வேலுச்சாமிக்கு பூர்வமான நாலு ஏக்கர் நிலம் இல்லாமல் இரண்டு மாடுகளும் கட்டைவண்டி ஒன்றும் உண்டு.இழுக்கவும் உழைக்கவும் களைக்காத மாடுகள். வேலுச்சாமியின் உழைப்புக்கும் மாடுகளின் உழைப்புக்கும் கால்கள் மற்றும் கருவிகளைக் கையாளுதல் ஆகிய வகைகளில் வித்யாசம் உண்டு.அமராவதி ஆற்றுக்கு இரவுகளில் போய் பூட்டிய மாடு வண்டியில் இருக்க வண்டியின் முக்கால் பாகத்துக்கு மணல் நிரப்பி கோரிக்கையாளர்களுக்குக் கொண்டு வருவது அவரது ஐந்தாம் சாமத்து வேலையாக இருந்தது.   

மகன் நீலாம்பூர் போய்விட்டு வருவதற்குள் அந்த தற்செயல் நடந்தது. வெளியூரிலிருந்து டெம்போவில் தென்னங்கன்றுகள் கொண்டு வந்த வியாபாரி விற்றது போக பத்துக் கன்றுகள் நின்று போகவும் அதை வெறும் முன்னூறு ரூபாய்க்கு தர ஒப்புக்கொள்ளவும் வேலுச்சாமி வாங்கிவிட்டார். மறுநாளே குழி எடுத்து குழிக்கு மூன்று சட்டிகள் வீதம் மணல் போட்டு கன்றுநாட்டி கன்றுகளின் கழுத்துவரை மண் போட்டு மேவி நீரும் பாய்ச்சி இந்த நிலத்தின் தாவரமென தென்னங்கன்றுகளை ஆக்கிவைத்தார்.

தோட்டத்துக்கு வந்து பார்த்த பழனிக்குமார் திகைத்துப்போனான்.

‘’ நான் வர்றப்ப பொள்ளாச்சியில கன்னுகளுக்கு சொல்லி வச்சிட்டு வந்திருக்கேன் அதுக்குள்ள என்ன அவசரம் உங்குளுக்கு?’’

’’ இல்ல குமாரு. கம்மியான விலைக்கு கிடைச்சுதேன்னு சொல்லி ஒரு பத்து வாங்கி நட்டேன்.’’

‘’ஆமா. பத்து வாங்கி நொட்டுனீங்க.இந்த லச்சனத்துல வெவசாயம் பாத்துத்தான் காலத்துக்கும் இப்படி இருக்கீங்க.எத்தன அடி கேப்பு உட்டு நட்டுருக்கீங்க.’’

‘’ பதனஞ்சு அடி.’’

’’ஆமா. உருப்படியா தென்ன விவசாயம் பண்றவங்க எல்லாம் இருபது அடி இருபத்திரண்டடின்னு உட்டு நட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க இப்புடி நட்டுருக்கீங்க. மரம் கன்னாவே இருந்துருமா. வளரும்ல. வளர்றப்ப ஒரு மரத்துக் கீத்தும் அடுத்த மரத்துக் கீத்தும் முட்டக்கூடாது.’’

‘’ நமக்கென்ன நானூறு ஏக்கரா இருக்குது அப்படி ஆடல் பாடலா நட்டு வளத்த....’’

‘’ ஒரு ஏக்கரு இருந்தாலும் அத செம்மையாத்தான் பண்ணணும். இல்லீனா இருக்கற கையகலத்தையும் கடங்காரனுக்குத் தொலைச்சிட்டுப் போவேண்டியதுதே...’’

’’இப்ப என்னதேம் பண்றது நட்டது நட்டாச்சு?’’

‘’ என்ன பண்றதா  சட்டியும் பானையும் பண்ணுங்க போயி. நாந்தான் நாலுநாள்ல வர்றேன்னு சொல்லீட்டுப்போறேன். அதுக்குள்ள என்ன அவசரம். என்னமோ இத்தன நாளா  வெவசாயம் பாத்து லட்சலட்சமா சம்பாதிச்ச மாதிரி. யோசிச்சுக்கங்க.நான் சொல்ற மாதிரி பண்றாப்ல இருந்தா பண்ணுங்க, இல்லீனா ஆளம்பு வச்சு நானே பாத்துக்கறேன். நீங்க உங்க மாட்டு வண்டிய மட்டும் ஓட்டிக்கிட்டு இருங்க.’’

வேலுச்சாமி வீடுநோக்கி நடந்தார். அவரது இரவின் ஐந்தாம் சாமங்களுக்கு கோழிகள் எதுவும் கூவவேண்டியதில்லை:நாய்கள் எதுவும் குரைக்க வேண்டியதில்லை. தொண்டுப்பட்டியில் இடதனும் வலவனுமான இரண்டு உயிரிகளின் வெள்ளை அசைவுகள் காணும். இந்த வெள்ளை நிறத்தின் அடர்வு மேகம் விண்மீன் நிலவு ஆகியவற்றின் உள்ளடக்கம் சார்ந்தது. வண்டி பிறகு வடக்கு நோக்கி அமராவதியின் மணல் கிட்டும் இடம் உத்தேசித்து நகரும்.லாடக் கால்கள் வண்டிச்சக்கரத்தின் இரும்பு வளையம் என இரும்பின் மீதான பயணமாக அது இருக்கும்.மணல் அள்ளி வருகையில் தாக்குதல் பெற்ற உணர்வின் சாயை பூண்டவராக அவர் இருக்கையில் அமர்ந்து வந்தார்.பழகிய தடத்தின் மீது வினோத வடிவக் கருங்கல் மறித்தது சக்கரத்தை.அதன்மீது இடது சக்கரம் ஏறி இறங்கியபோது கண்ட ஆட்டத்தில் நிலை குலைந்தார். அவரது வீழ்ச்சி வண்டிச்சக்கரத்துக்கு கீழேயாகவும் அவரது வலது கால் தொடை எலும்பு கீழ்த்தாவும் முதலாவது புள்ளியிலாகவும் இருந்தது.சக்கர ஏற்றத்தில் ‘அம்மா’ என அலறினார்.  மாடுகள் பின்னகர்ந்தன.

மருத்துவமனையில் இரண்டாம் நாள் அவர், மனைவி,பழனிக்குமார் மூவரும் இருக்கும்போது பழனிக்குமார் மாடுகளையும் வண்டியையும் விலை பேசிவிட்டதாகத் தெரிவித்தான்.

‘’அதுக இருந்துட்டுப்போகட்டுமே ஒரு ரெண்டு மாசத்துல வந்துருவன்ல...’’ என்றார்.

‘’ஆ°பத்திரி செலவுக்கு பாட்டம்பூட்டன் சம்பாரிச்சது எதும் இருக்கா?’’ என்றாள் மனைவி. பழனிக்குமார், ‘’ நீங்க வந்து புதுசாவெல்லாம் ஒன்னும் அரக்க வேண்டாம்.’’ என்றான்.

வேலுச்சாமி நடமாடுமளவுக்கு குணமாகி வர மூன்று மாதங்கள் பிடித்தன. பகலையும் இரவையும் வெறித்துக்கொண்டும் இடிகஞ்சியைச் சகித்துக்கொண்டும் இருப்பதாக அவரது நாட்கள் இருந்தன.

ஒரு பகலில் பக்கத்து நகரத்துக்கு பேருந்து ஏறிப்போனார். உரம் பூச்சி மருந்துகள் விற்பனைக் கடைக்குப் போனார். பலமுறை பார்த்த முகத்தினர் அங்கே இருந்தார்.

‘’ தென்ன மரத்து மாத்திரை இருந்தா பத்துக் குடுங்க!”

‘’தென்ன மரத்து மாத்திரையா?’’

‘’அதுதாங்க சல்பாசோ கில்பாசோ என்னமோ சொல்லுவாங்கல்ல. அதுதான்.நம்ம தென்னங்கன்னுகளுக்கு வண்டு விழுந்துருச்சோ என்னமோ... சரியா வளரமாட்டேங்குது அதுக்குத்தான்...’’

‘’உங்குளுது கன்னு நட்டு எவ்வளவு நாளாச்சு?”

‘’நாலஞ்சு மாசம் இருக்கும்.’’

‘’அதுக்குள்ளயெல்லாம் வண்டு வச்சிறாது. போனவாரம்தான் உங்க மகன் வந்து வேறென்னவோ வாங்கிக்கிட்டுப் போறாரு. நீங்க போயிட்டு வாங்க.’’

கடையிலிருந்து வெளியேறிய வேலுச்சாமி அவமான வெம்மையால் கசிந்த வியர்வைமுகத்தை துண்டினால் துடைத்துக்கொண்டார். இந்த ஆள் பழனிக்குமாரிடம் சொல்லிவைத்துவிடுவானோ என்று பயமாக இருந்தது.அது சாவிலும் கொடியதாக இருக்கும்.

தளர்ந்து நடந்துகொண்டிருக்கும் போது உள்ளூர்க்காரரான ரத்தினமூர்த்தி எதிர்ப்பட்டார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வேலுச்சாமி,

‘’அன்னிக்கு எதோ உங்க சொந்தக்காரப் பையன் கந்துக்கடைக்கு ஆள் வேணும்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க ஆள் கிடைச்சுருச்சா?’’ என்றார்.

‘’இன்னம் கிடைக்கல எதாவது ஆள் இருந்தா சொல்லுங்க.’’

‘’ நாந்தான் போலாமான்னு பாக்கறேன்.’’

‘’உங்களுக்குக் குறும்புக்குக் குறைச்சலே இல்லய்யா.’’- ரத்தினமூர்த்தி விடைபெற்று தனது வேலையைப் பார்க்கப்போனார்.

பேருந்தில் ஏறிய வேலுச்சாமி ஜன்னலொர இருக்கையில் அமர்ந்தார்.பேருந்து  வேகம் பெறுவதற்கு முன்னர்  அந்த மாட்டு வண்டி எதிர்க்கடந்து செல்வதைப் பார்த்தார்.விற்று விலை போனவை.

காலமாம் தரை மீது வலவன் நெளிந்தோடும் மூத்திர வரியை எழுதியவாறு சென்றது. கழுத்தின் சுருக்கங்களை வெக்கை , வாள் கொண்டு சீவிய அந்த மத்தியானத்தில் ‘அம்மா’ என்றொரு குரல் கேட்டது.இப்போது வேலுச்சாமி துண்டு கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டார்.

 

க.சீ.சிவகுமார், சிவகுமார் ஓட்டல்,கன்னிவாடி (அஞ்சல்)

சின்னதாராபுரம் (வழி)

திருப்பூர் - 639202.

அலைபேசி - 08050444267(பெங்களூர்)

Pin It